From Wikipedia, the free encyclopedia
பயாபிரா போர் எனப் பொதுவாக அறியப்பட்ட நைசீரிய உள்நாட்டுப் போர் (6 யூலை 1967 – 15 சனவரி 1970) நைசீரிய அரசாங்கத்துக்கும், பிரிவினை கோரிய பயாபிரா மாநிலத்துக்குமிடையில் இடம்பெற்ற போர் ஆகும். பயாபிரா, இக்போ மக்களின் தேசிய உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. இக்போ மக்களின் தலைவர்கள், வடக்கு ஆதிக்கம் கொண்ட நைசீரிய அரசாங்கத்துடன் ஒத்தி இருக்க முடியாது எனக் கருதினர். 1960க்கும் 1963க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த பிரித்தானியரின் வெளியேற்றத்துக்கு முன்னர் உருவான அரசியல், இன, பண்பாட்டு, மத நெருக்கடிகளே முரண்பாடு உருவாகக் காரணமாக இருந்தன. இராணுவப் புரட்சியும், எதிர்ப் புரட்சியும், தொடர்ந்து வடக்கு நைசீரிய இக்போ மக்கள் மீதான அடக்குமுறைகளுமே 1966 இன் போருக்கான உடனடிக் காரணங்கள். நைகர் வடிநிலப் பகுதியில் இருந்த இலாபந்தரும் எண்ணெய் உற்பத்திமீதான கட்டுப்பாடு குறித்த விடயமும் ஒரு முக்கியப் பங்களிப்புச் செய்தது.
ஒரு ஆண்டுக்குள் மத்திய அரசாங்கப் படைகள் பயாபிராவைச் சூழ்ந்து கரையோர எண்ணெய் வசதிகளையும், ஹார்கோர்ட் துறைமுகத்தையும் கைப்பற்றின. தொடர்ந்துவந்த வெற்றி தோல்வியற்ற நிலையில் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையினால், கடும் பஞ்சம் ஏற்பட்டது, இரண்டரை ஆண்டுகள் நடைபெற்ற போரில், 100,000 படைத்துறையினர் இழப்பு ஏற்பட்டதுடன், 500,000 தொடக்கம் 2 மில்லியன் வரையான பொதுமக்களும் பட்டினியால் இறந்தனர்.[1] 1968 இன் நடுப் பகுதியில் போசாக்குக் குறைவாலும் பசியாலும் பாதிக்கப்பட்ட பயாபிராச் சிறுவர்களின் படங்கள் மேற்கத்திய ஊடகங்களை நிரப்பின. பசியால் வாடும் பயாபிரா மக்களின் அவலநிலை சர்ச்சைகளை உருவாக்கியதுடன், அங்கே பெருமளவு நிதி சேகரிப்பதற்கும் இயலக்கூடிய நிலைமையை ஏற்படுத்தியது. பிரித்தானியாவும், சோவியத் ஒன்றியமும் நைசீரிய அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தனர். பிரான்சு, இசுரேல், வேறு சில நாடுகள் பயாபிடாவுக்கு ஆதரவாக இருந்தன. பிரான்சும், இசுரேலும் இரண்டு தரப்பினருக்குமே ஆயுதங்களை வழங்கினர்.
பிரித்தானியக் குடியேற்றவாத அரசு நைசீரியாவின் தெற்கு, வடக்குப் பகுதிகளை 1914 ஆம் ஆண்டில் இணைத்ததை இந்த உள்நாட்டுப் போருடன் தொடர்புப்படுத்தலாம். இவ்விரு பகுதிகளும் ஒன்றுக்கொன்று அருகில் இருந்ததை மட்டும் கருத்தில் கொண்டு நிர்வாக வசதி கருதி இணைப்பை மேற்கொண்டனர். இரண்டு பகுதிக்கும் இடையில் உள்ள பெரிய பண்பாடு, மதம் சார்ந்த வேறுபாடுகளை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இணைப்புக்குப் பின்னர், கிழக்கு நைசீரியாவில் (இப்போது தெற்கு நைசீரியா) எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கிடைக்கும் செல்வத்துக்கான போட்டி இவ்விடங்களைத் தத்தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான போராட்டமாக உருவெடுத்தது. தெற்கு நைசீரியா வடக்கைப்போல் ஒற்றுமையாக இல்லாததால், இந்த அதிகாரப் போட்டியில் பாதகமான நிலையில் இருந்தது.[2] யூலை 1966 இல் வடக்கு இராணுவ அதிகாரிகள் முதல் புரட்சியில் தமது சொந்த அரசியல் தலைவர்களை இலக்கு வைத்ததற்காகக் கிழக்குப் பகுதியினர் மீது பழிவாங்குவதற்காக எதிர்ப் புரட்சி ஒன்றை நிகழ்த்தினர். லெப்டினன்ட் கர்னல் யக்குபு கோவன் அரசின் தலைவரானார். இவரது ஆட்சிக் காலத்தில், வடக்கில் கிழக்குப் பகுதியினரைக் கொல்வது தொடர்ந்தது. பல எதிர் நடவடிக்கைகளும் இடம்பெற்றன. இது பின்னர் பயாபிராப் போராக வெடித்தது.[3]
1960 இல் நைசீரியா பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்றபோது, அதன் மொத்த மக்கள்தொகை 60 மில்லியன். இதில் 300க்கும் அதிகமான வேறுபட்ட பண்பாட்டு, இனக் குழுக்கள் அடங்கியிருந்தன. 50 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியா பல நூறு இனக்குழுக்கள் வாழ்ந்த ஒரு பகுதியை மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து பிரித்து எடுத்து அவற்றை ஒன்றாக்கி நைசீரியா எனப் பெயரிட்டனர். நைசீரியாவில் வாழ்ந்தோரில் மூன்று முக்கியமான குழுக்கள் இருந்தன. நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் 60-70% இக்போக்கள் வாழ்ந்தனர். வடக்குப் பகுதியில், அவுசா-புலானி இனத்தவர் அப்பகுதி மக்கள்தொகையில் 65%. தென்மேற்குப் பகுதியில் 75% யொரூபா மக்கள். இவ்வினத்தவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான தாயகங்கள் இருந்தாலும், 1960களில் எல்லா இனத்தவரும் முழு நாட்டிலும் பரந்து வாழத் தொடங்கினர். முக்கிய நகரங்களில் மூன்று இனத்தவருமே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காணப்பட்டனர். 1967 இல் போர் தொடங்கியபோது இன்னும் 5,000 இக்போக்கள் நாட்டின் தலைநகர் லாகோசில் இருந்தனர்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.