Remove ads
மற்ற ஆண்களிடம் ஈர்க்கப்படும் ஆண்கள் From Wikipedia, the free encyclopedia
நேர்பாலீர்ப்பு ஆண்[சான்று தேவை] (Gay) என்பது நேர்பாலீர்ப்பு பண்பைக் கொண்ட ஓர் ஆணைக் குறிக்கும் சொல்லாகும். ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் மீது ஏற்படும் பாலீர்ப்பே ஆண் நேர்பாலீர்ப்பு ஆகும். சில இருபாலீர்ப்பு (Bisexual) ஆண்களும், நேர்பால் காதலர்களும் (Homoromantic) கூட தங்களை நேர்பாலீர்ப்பு ஆண்களாக அடையாளப்படுத்திக்கொள்ளலாம். பல இளம் நேர்பாலீர்ப்பு ஆண்கள் தற்காலத்தில் தங்களை புதுமர்களாகவும் (Queer) குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.[1] வரலாற்றுக் காலத்தில் நேர்பாலீர்ப்பு ஆண்கள் சோடோமிட்டுகள், யூரனியன்கள் என்றெல்லாம் அழைக்கப்பட்டதுண்டு. தமிழ்ச்சூழலில் இவர்களைக் குறிப்பிடும் சொற்கள் இன்று வசைச்சொற்களாகவே உள்ளன. தங்கள் பாலீர்ப்பின் காரணத்தால் உலகெங்கும் நேர்பாலீர்ப்பு ஆண்கள் சமய, சமூக, கலாசார ரீதியாக பல ஒடுக்குதல்களுக்கு ஆளாகிவருகின்றனர்.[2] இந்தியாவில் கரண் ஜோஹர் உள்ளிட்ட ஓரிரு பிரபலங்களே தாங்கள் ஒரு நேர்பாலீர்ப்பு ஆண் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஓரின சேர்க்கையாளர்கள் உலகின் பெரும் பகுதிகளில், குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் பல நேர்பாலீர்ப்பாளர்கள் இன்றும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பாகுபாடுகளை அனுபவிக்கின்றனர்.[3] இருப்பினும் சில வெளிப்படையான நேர்பாலீப்பு ஆண்கள் தேசிய அளவில் வெற்றியையும் முக்கியத்துவத்தையும் அடைந்துள்ளனர். ஐரோப்பாவில், சேவியர் பெட்டல் தற்போது லக்சம்பேர்க்கின் பிரதமராகப் பணியாற்றுகிறார்; லியோ வரத்கர் தற்போது அயர்லாந்து பிரதமராக பணியாற்றுகிறார்; 2011 முதல் 2014 வரை, பெல்ஜியத்தின் பிரதமராக எலியோ டி ரூபோ பணியாற்றினார்.
ஆங்கிலத்தில் ""கே" (Gay) என்றால் மகிழ்ச்சி, குதூகலம் முதலிய பொருட்களைக் கொண்ட சொல்.[4] உகத்தல், உகவை முதலியன மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் என்பதால் இவர்கள் உகவர்கள்.[5][நம்பகமற்றது ] காமத்தை முன்னிலைப்படுத்தி ஊடகங்களில் பயன்படும் ஓரினச்சேர்க்கையாளன் என்ற பதத்தை இவர்கள் வசைச்சொல்லாகவே கருதுகிறார்கள்.[6]
ஐரோப்பிய நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உகவர்கள் பற்றிய அறிமுகம் அதிகம் பரவலானது. [7] ஆரம்பத்தில் உகவர் என்பது ஆண் - ஆண் ஈர்ப்புக்கொண்டோரை மட்டுமே குறிப்பிட பயன்பட்ட போது, திருநங்கை, மாயிழை உள்ளிட்ட அனைத்து எல்.ஜி.பி.டி (நேஆ. நேபெ. இ. மா) சமூகத்தினரும் "உகவர் சமூகம்" என்ற சொல்லால் தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.[8][9] முற்போக்காளர்களால் உகவர்கள் இயற்கையானவர்கள் என்று ஆதரிக்கப்பட்டு வந்தாலும், பொதுச்சமூக்த்தால் உகவர்களின் உறவு பெரும்பாலும் இயற்கைக்கு மாறானதாகச் சொல்லப்பட்டு ஏற்கப்படுவதில்லை. எனினும் மிருகங்களிலும் ஏனைய உயிரிகளிலும் நேர்பாலீர்ப்பு கண்டறியப்பட்டுள்ளது.[10]
ஒரு ஆண் மீது இன்னொரு ஆண் காதல் கொள்வதை தமிழ்ச்சமூகம் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் இழிவாகவே பார்ப்பதால், இது மனநோயாகவும், குணப்படுத்தவேண்டிய மனப்பிறழ்ச்சியாகவும் கருதப்பட்டு வந்தது.[11] சமீபகாலமாக இதை இயற்கையாக ஏற்கும் போக்கு அதிகரித்து வருகிறது. உகவர் போலவே இன்னொரு பெண் மீது ஈர்ப்புக்கொள்ளும் மாயிழைகளும், இருபால் மீதும் ஈருப்புக்கொள்ளும் மிடையீரர்களும் திருநர்களும் இன்று பாலினச்சிறுபான்மையினராக கருதப்படுகிறார்கள். அமெரிக்க மனநலவியல் கழகமானது, உகவர் முதலிய பாற்புதுமைகள் மனநோய்களல்ல இயல்பானவை தான் என்று அறிவித்திருக்கிறது.[12] இனச்சிறுபான்மையினர், மதச்சிறுபான்மையினர் தம்மைப் போல ஒத்த குழுக்களுடன் பிறந்து வளர்வதன் மூலம் தாம் ஒடுக்கபப்டுவதையும், தமது அடையாளத்தை முன்னிலைபப்டுத்த வேண்டிய அவசியத்தையும் அறிந்துகொள்கிறார்கள். ஆனால், உகவன், மாயிழை, மிடையீரர் முதலியோருக்கு இத்தகைய வாய்ப்புக் கிடைக்காமலே, இயற்கையாகவே தாங்கள் வேறுபட்டோர் என்று உணர்ந்துகொள்கிறார்கள். எனவே பாலின அடையாளம் என்பது பொதுச்சமூகம் சாதாரணமாக இழிவு செய்துவிட்டுச் செல்வது போல, அத்தனை எளிதான விடயமல்ல. அது மிகச்சிக்கலான விடயம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள்."[13]
ஒரு ஆண் மீது ஈர்ப்புக்கொள்ளும் பெண் அல்லாத எல்லோரும் உகவர்கள் அல்ல. உகவர்கள் மனதால் மட்டும் இன்னொரு ஆணோடு ஈர்ப்புக்கொண்டு, ஆனால் உடலால் ஆணாகவே தொடர விரும்புபவர்கள். தன்னை உடலளவிலும் பெண்ணாக மாற்றவேண்டும் என்ற ஆசையோ, பெண்கள் மீது பாலீர்ப்பு ஏற்படுவதோ உகவர்களுக்கு இல்லை.[14] மனதால் இன்னொரு ஆணோடு ஈர்ப்புக்கொண்டு ஆனால் சிறிது காலத்தின் பின் உரிய சிகிச்சைகள் அல்லது தோற்றமாற்றங்கள் மூலம் உடலால் பெண்ணாக மாறுபவர்கள் உகவர்கள் அல்ல; அவர்கள் திருநங்கைகள். இன்னொரு ஆண் மீது ஈர்ப்புக்கொண்டாலும், நேரிய (Straight) பெண்ணுடன் வாழக்கூடிய ஆண்கள் மிடையீரர்கள். இதைத்தவிர சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு நேரிய (Straight) ஆணும் ஒரு உகவனுடன் கலவி கொள்ள வாய்ப்புகள் உருவாவதுண்டு. அதற்காக அந்த ஆணை உகவன் என்று வரையறுக்க முடியாது.[15]
உரோம கிரேக்க தொன்மங்களில் அக்காலத்தைய மன்னர்களும் தெய்வங்களும் உகவர்களாக இருந்தார்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.[16] உகவர்களின் கலவியை இயற்கைக்கு மாறானதாக கட்டளைப்படுத்தும் வசனங்கள் விவிலியத்திலும் குரானிலும் கிடைப்பதால், அது அச்சமயங்களின் காலத்திற்கும் முன்பே சமூகத்தால் வரவேற்கப்படாத ஒழுக்கமாக நீடித்திருக்கவேண்டும்.[17] சீன மற்றும் ஆப்ரிக்கப் பண்பாடுகளிலும் இஸ்லாமுக்கு முந்திய அராபிய பண்பாட்டிலும் ஒத்தபாலீர்ப்புக் கூறுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
இந்து சமயம் ஒருபாலீர்ப்பை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. கஜுராஹோ முதலிய கோவில்களிலுள்ள கலவிச் சிற்பங்கள் என்பவற்றில் உகவர், மாயிழை சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. காமசூத்திரம் ஒத்தபாலுறவை இன்பம் பயப்பதாக வர்ணிக்கிறது.[18] [19] நாரத சுமிருதியிலும் மனுசுமிருதியிலும் ஆணும் ஆணும் உறவு கொள்வதற்கான பரிகாரங்கள் கூறப்பட்டு இருப்பதால் அவை அக்காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கின்றன எனலாம். [20] மரபானவர்கள் எதிர்த்தாலும் அர்த்தநாரீஸ்வரர், அரிகரன், விஷ்ணு மோகினியாக மாறியமை முதலிய தெய்வ வடிவங்களை இந்து உகவர்கள் தங்கள் சமய அங்கீகார சின்னங்களாக முன்வைக்கிறார்கள். [21]
பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து மரண தண்டனை விதிப்பது ஐரோப்பாவில் வழக்கமாக இருந்தது.[22] 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாஜி ஜேர்மனில் இவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள்.[23] அமெரிக்காவில் உகவர்களாலேயே எய்ட்ஸ் பரவுவதாக நம்பப்பட்டு வருத்தப்பட்டார்கள்.[24] இந்தியச் சூழலில் கடந்த 2018ஆமாண்டு உச்ச நீதிமன்றம் இபிகோ 377ஆம் இலக்க சட்டத்தை குற்றமில்லை என்று வரையறுத்து தீர்ப்பளித்த பின்னர், இந்தியாவில் இவர்களது சமூக ஏற்பு குறிப்பிட்டுச்சொல்லும் படி அதிகரித்துள்ளது எனலாம். [25]
உகவர்கள் போதுமான அளவு சமூக அங்கீகாரம் பெறாமையால் பல இடர்ப்பாடுகள் சமூகத்தில் கண்டறியபப்ட்டிருக்கின்றன. சமூக நிர்ப்பந்தத்தால் உகவர்கள் நேரிய (Straight) பெண்களை மணக்க நேரிடும் போது, அவர்களால் அந்தப் பெண்களின் வாழ்க்கை பாழாகிறது.[26] பல விவாகரத்துகளும் திருமணத்துக்கு அப்பாலான உறவுகளும் அவற்றின் காரணமான மன உளைச்சல், தற்கொலை என்பன உகவர்களை மணக்கும் பெண்களைப் பெருமளவு பாதிக்கின்றன. உகவர் பற்றிய சமூக உரையாடல் குறைவாக இருப்பதால், இத்தகைய திருமணங்களின் பின்விளைவுகள் மகளை உகவனுக்கு மணம் செய்து கொடுக்கும் அல்லது உகவனை பெண்ணை மணக்க நிர்ப்பந்திக்கும் பெற்றோருக்கும் புரிவதில்லை.
உகவர்கள் சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகியிருப்பதால், அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள். தற்கொலைகளும் மனவழுத்தமும் போதைப்பாவனையும் கண்டறியப்பட்ட பல இளைஞர்கள் உகவராகவும் மாயிழையாகவும் இருப்பது இந்தியாவிலும் கண்டறியபப்ட்டுள்ளது. [27] உகவர்கள் சமூகத்தில் மறைந்து வாழவே நிர்ப்பந்திக்கபப்ட்டிருப்பதால், அது சார்ந்த குற்றங்களும் கொலைகளும் வழிப்பறிகளும் ஒப்புப்பாலீர்ப்புக் குழுவினராலும், நேரிய பாலீர்ப்புக் குழுவினராலும் திட்டமிட்டும், எதேச்சையாகவும் இடம்பெற்று வருகின்றன.[28] உகவர்கள் என்ற காரணத்தினால் காவல் தூறையிலும், நீதித்துறையிலும் கூட இவர்கள் புறக்கணீக்கப்படுகின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.