From Wikipedia, the free encyclopedia
நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து (Nilgiri Mountain Railway) 1,000 மில்லிமீட்டர் (3 அடி 3 3⁄8 அங்குலம்) அளவு கொண்ட குறுகியப் பாதை வகை இரயில் போக்குவரத்து ஆகும். 1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இப்பாதையை உருவாக்கினார்கள் [1]. தெற்கு இரயில்வே இப்பாதையில் தொடருந்துகளை இயக்குகிறது [2]. இந்தியாவிலுள்ள ஒரே பற்சக்கர இருப்புப்பாதை தொடர்வண்டி நீலகிரி மலை தொடர்வண்டி மட்டுமேயாகும்.
நீராவி இரயில் இயந்திரத்தை நம்பியே இந்த மலை இரயில் இயங்குகிறது [3]. குன்னூரிலிருந்து உதகமண்டலம் வரையுள்ள பாதையில் மட்டும் இந்த இரயில் டீசல் இயந்திரத்திற்கு மாற்றப்பட்டு இயங்குகிறது [3]. உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் இந்தப் பாதையில் நீராவி இயந்திரத்தையே இயக்க வேண்டுமென ஒரு பிரச்சார இயக்கத்தை நடத்தினர். சூலை 2005 இல் டார்ச்சிலிங் இமாலயன் இரயில்வேயுடன் நீலகிரி மலை இரயில்வேவையும் ஓர் உலக பாரம்பரியக் களமாக யுனெசுகோவின் உலக பாரம்பரிய குழு நீட்டித்தது. இந்த தளம் பின்னர் இந்தியாவின் மலை ரெயில்வே என அறியப்பட்டது [4][5].
1854 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மலை வரை ஒரு மலைப்பாதையை அமைக்கத் திட்டமிட்டனர். என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளின் அரசியல் செயல்பாடுகள் காரணமாக திட்டத்தை முடிக்க 45 ஆண்டுகள் பிடித்தன. ஒருவழியாக சூன் 1899 ஆம் ஆண்டு இப்பாதை போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. முதலில் சென்னை இரயில்வே அரசாங்கத்துடன் மேற்கொண்ட ஓர் உடன்பாடு காரணமாக இந்த இரயிலை இயக்கியது. அரசாங்கத்திற்காக பெட்ராசு இரயில்வே நிறுவனம் நீண்ட நாட்களுக்கு இந்த மலை இரயிலை இயக்கியது. இறுதியாக தென் இந்திய இரயில்வே நிறுவனம் நீலகிரி மலை இரயில்வேயை வாங்கி இயக்கத் தொடங்கியது.
தொடக்கத்தில் இப்பாதையின் இறுதி இரயில் நிலையம் குன்னூராக இருந்தது. 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெர்ன்கில் இரயில் நிலையம் வரை இரயில் நீட்டிக்கப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் இப்பாதை மேலும் உதகமண்டலம் இரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. குன்னூரிலிருந்து 11 மற்றும் ¾ மைல் தொலைவு நீட்டிக்க செலவாக ரூபாய் 24,40,000 செலவு பிடித்தது.
நீலகிரி மலை இரயில்வே மற்றும் அதன் அனைத்து சொத்துக்கள், இரயில் நிலையங்கள், வரி, மற்றும் பற்சட்டங்கள், வாகனங்கள் உட்பட அனைத்தும் இந்திய அரசுக்கு சொந்தமானவையாகும். இந்திய இரயில்வே அமைச்சகம் இவற்றை நிர்வகிக்கிறது. தெற்கு ரயில்வே தினசரி பராமரிப்பு மற்றும் இரயில் நிர்வாகத்தை நடத்துகிறது, ஆனால் இந்திய இரயில்வேயின் பல திட்டங்கள், பிரிவுகள் மற்றும் துறைகள், நீலகிரி மலை இரயிலை இயக்குதல், திட்டங்களைச் செயல்படுத்துதல், பராமரித்தல் அனைத்திற்கும் இந்தியன் இரயில்வே நிர்வாகமே பொறுப்பு ஆகும்.
மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரையிலான மலைப்பாதையைக் கடக்க நீலகிரி மலை இரயில் பற்சட்டம் மற்றும் பற்சக்கரங்களால் இயங்கும் நீராவி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை பற்சக்கரப் பாதை இந்தியாவில் இங்கு மட்டுமே உள்ளது.
நீலகிரி மலை இரயில்வே எக்சு வகை நீராவி பற்சட்ட இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது. சுவிட்சர்லாந்து நாட்டைச் விண்டெர்தர் நகரிலுள்ள சுவிசு இழுபொறி மற்றும் இயந்திர வேலைகள் நிறுவனத்தின் பற்சட்டமும் பற்சக்கரமும் தயாரிக்கும் பிரிவு இவ்வியந்திரத்தை தயாரித்துள்ளது. எக்சு வகை இழுபொறிகள் 60 முதல் 80 ஆண்டுகள் பழமையானவையாகும். குன்னூரிலிருந்து உதகமண்டலம் செல்லும் பயணிகளுக்கு இந்த இழுபொறியால் நீலகிரி மலை இரயில் பயணத்திற்கு ஒரு தனித்துவமான அழகு கிடைக்கிறது. 45.8 கிலோமீட்டர் (28 மைல்), 108 வளைவுகள், 16 சுரங்கங்கள் மற்றும் 250 பாலங்கள் ஆகியவற்றை பயணிகள் கடந்து செல்லும் இனிய அனுபவத்தை அவர்களுக்கு வழங்குகிறது.
நீராவி இழுபொறியை இப்பாதையில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். டீசல் இழுபொறியை குன்னூருக்கும் உதகமண்டலத்திற்கும் இடையில் மட்டும் பயன்படுத்தலாம். இதுவே நீராவி இழுபொறியின் முடிவுக்கு ஒரு குறியீடாக அமைகிறது. ஒவ்வொரு டீசல் இயந்திரமும் 10 கோடி ரூபாய் மதிப்பும் 50 டன்களுக்கு மேல் எடையும் கொண்டவையாகும். இவற்றில் முதன்மையும் முன்னோடியுமான எரிவான்கள் உள்ளன. தனித் தொட்டிகள் 850 லிட்டர்கள் டீசல் 2250 லிட்டர்கள் உலை எண்ணெயைக் கொள்கின்றன. இப்புதிய இயந்திரத்தின் இழுக்கும் திறன் 97.6 டன்களாகும். சமதளத்தில் இவை ஒரு மணி நேரத்திற்கு முப்பது கிலோமீட்டர்கள் வரை வேகம் செல்லும். சாய்வுப் பாதைகளில் மணி நேரத்திற்கு 15 கிலோமீட்டர்கள் வரை செல்லும். புதிய இயந்திரங்களின் வருகையால் அடிக்கடி தொடர்ந்த தடைகள் நீக்கப்பட்டன.
நீராவி இயந்திரப்பொறிகள் மலையடிவார மேட்டுப்பாளையத்தில் திரட்டப்படுகின்றன. பற்சட்டப் பிரிவுப் பாதையின் சராசரி சாய்வு 4.08 சதவீதம் ஆகும். மேலும் இப்பாதையில் அதிகபட்ச சாய்வு 8.33 ஆகவும் உள்ளது. குன்னூர் மேட்டுப்பளையம் பாதையில் ஒய்.டி.எம்.4 டீசல் இழுபொறி வகை இயந்திரங்கள் பயன்படுத்தி பாரம்பரிய முறையில் இரயில்கள் இயக்கப்படுகின்றன. பாதை அவ்வளவு செங்குத்தாக இல்லையென்றாலும், பற்சட்டம் தேவைப்படாது என்றாலும் இந்தப் பிரிவில் குன்னூர் முடிவில் இழுபொறிகள் எப்போதும் இருக்கும். குன்னூரில் இருக்கும் சாய்வு 4% மட்டுமேயாகும்.
தென்னக இரயில்வே இழுபொறி இயந்திரங்களின் பெரும்பாலான பழுதுகளை சரிசெய்ய குன்னூர் பணிமனையை பயன்படுத்துகிறது, ஆனால் இழுபொறிகளை மீளுருவாக்கம் செய்ய திருச்சியிலுள்ள கோல்டன் ராக் பணிமனையைப் பயன்படுத்துகிறது. வண்டிகளின் சிலவகை பழுதுகள் மேட்டுப்பளையத்திலும் பெரிய பணிமனைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
மலையின் மேல்நோக்கிய பயணம் நீலகிரி மலை இரயிலில் சுமார் 290 நிமிடங்கள் (4.8 மணி நேரம்) பிடிக்கிறது. இதே பாதையில் கீழ்நோக்கி வரும் பயணம் 215 நிமிடங்கள் (3.6 மணி நேரம்) ஆகிறது. இது ஆசியாவில் மிகக் கடுமையான சரிவுப் பாதையாகக் கருதப்படுகிறது. பாதையின் அதிகபட்ச சாய்வு 8.33% ஆகும்.
மேட்டுப்பாளையத்திலிருந்து தினமும் காலை 07:10 மணியளவில் புறப்படும் இரயில் பிற்பகலில் 12.00 உதகமண்டலம் சென்றடைகிறது. மாலையில் 14:00 மணிக்கு உதகமண்டலத்தில் புறப்படும் வண்டி மாலை 17:35 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வழியாக சென்னைக்குச் செல்லும் நீலகிரி விரைவு இரயிலுக்கு இணைப்பு கொடுக்கும் விதமாக பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இயக்கப்படும் கோடைகால சிறப்பு வண்டிகள் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.30 மணியளவிலும் உதகமண்டலத்திலிருந்து பிற்பகல் 12:15 மணியளவிலும் புறப்படுகின்றன. குன்னூர் மற்றும் உதகமண்டலம் இடையே, நான்கு தினசரி இரயில்கள் இயக்கப்படுகின்றன.
வழக்கமாக இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்வது போல நீலகிரி இரயிலில் பயணம் செய்வதற்கும் பயணச்சீட்டுகளை இணைய வழியாக முன்பதிவு செய்ய முடியும் என்றாலும். இன்னமும்கூட பழைய எட்மான்சுடன் முறை பயணச்சீட்டு வழங்கும் முறை இங்கு கடைபிடிக்கப்படுகிறது. உலகப் பாரம்பரியத் தளம் என்ற தகுதியைப் பாதுகாக்கவே இத்தகைய முறை பின்பற்றப்படுகிறது. இந்திய இரயில்வே இணையதளம் மூலமாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். குறிபாக கோடை காலத்தில் முன்கூட்டியே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்வது நல்லது,
ஆங்கிலத் திரைப்பட இயக்குனர் டேவிட் லீன் இயக்கிய எ பாசேச் டு இந்தியா என்ற திரைப்படத்தில் குன்னூர் இரயில் நிலையம் இடம்பெற்றுள்ளது [7]. குன்னூர் இரயில் நிலையமும் இதன் இழுபொறிகளும் பல இந்தியத் திரைப்படங்களில் இடம்பிடித்துள்ளன. இராணுவக் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் பலவற்றில் வெல்லிங்டன் இரயில் நிலையம் தோன்றுகிறது. சம்மர் இன் பெத்தலகேம் என்ற மலையாளத் திரைப்படத்தில் கேத்தி இரயில் நிலையம் வருகிறது. மூன்றாம் பிறை தமிழ்த் திரைப்படத்தில் லவ்டேல் இரயில் நிலையம் இடம்பிடித்துள்ளது. தில் சே என்ற இந்தி திரைப்படத்தின் பாடல் சய்யா சய்யா நீலகிரி மலை இரயிலின் கூரைமேல் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் பல்வேறு தென்னிந்த திரைப்படங்களில் உதகமண்டலம் இரயில் நிலையம் இடம்பெற்று விடுகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் பி.பி.சி நிறுவனம் இந்திய மலை இரயில்வே தொடர்பான மூன்று ஆவணப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளது[8].இரண்டாவதாக எடுக்கப்பட்டது நீலகிரி மலை இரயில்வே தொடர்பானது ஆகும். முதலாவது டார்ச்சிலிங் இமாலயன் இரயில்வேயையும் மூன்றாவது கால்கா சிம்லா இரயில்வேயைப் பற்றியதுமாகும். தருண் பார்ட்டியா, உகோ சிமித், நிக் மேட்டிங்லி ஆகியோர் இப்படத்தை இயக்கியிருந்தனர். கெர்ரி டுரோய்னா தயாரித்திருந்தார். சூன் 2010 இல் இத்தொடர் ஐக்கிய இராச்சியத்தின் இராயல் தொலைக்காட்சி சமூக விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்[9].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.