தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில் (Nagapattinam Kayarohanaswami Temple) (திருநாகைக்காரோணம்) என்பது பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 82வது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. அதிபத்த நாயனார் அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). நாகப்பட்டிணம் அதிபத்த நாயனார் அவதார தலம்.[1]
தேவாரம் பாடல் பெற்ற திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10.7663°N 79.8428°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | காயாரோகணம், ஆதிபுராணம், சிவராசதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் |
பெயர்: | திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | நாகப்பட்டிணம் |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர் |
தாயார்: | நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி |
தல விருட்சம்: | மாமரம் |
தீர்த்தம்: | தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | உண்டு |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து, இக்கோவில் 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
071 திருநாகைக்காரோணம், நான்காம் திருமுறை
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகில் உய்யலாம் நெஞ்சி னீரே! 1
வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற் திசைமுகன் சிரமொன் றேந்துங்
கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே! 2.
084 திருநாகைக்காரோணம், முதல் திருமுறை
திருஞான சம்பந்தர் தேவாரம்
கலிவிருத்தம்
(மா காய் மா காய்)
புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே! 1
பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான்
தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த
காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே! 3..
046 திருநாகைக்காரோணம், ஏழாம் திருமுறை
சுந்தரர் பாடிய பதிகம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் காய் மா அரையடிக்கு(
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே! 1 .
வைகாசி விசாகத்தில் பெருந்திருவிழா நடைபெறுகிறது. வருடா வருடம் ஆனி மாதம் நடைபெறும் பஞ்சகுரோச விழாவில் பெருமான் சாலிசுக மன்னனுக்கு திருமணக் கோலத்துடன் காட்சி கொடுத்து முக்தி மண்டபத்திலிருந்து அதிகாலை புறப்பட்டு பஞ்சகுரோச யாத்திரைத்தலங்களாகிய பொய்கைநல்லூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய சப்த ஸ்தலங்களுக்கும் சென்று தீர்த்தம் கொடுத்து மறுநாள் காலையில் வந்து காரோணப் பெருமான் கோபுர வாசலில் சாலிசுக மன்னனுக்கும், பக்தர்களுக்கும் காட்சி கொடுப்பதை பஞ்ச குரோச விழாவாகக் கொண்டாடுகின்றனர். நீலாயதாட்சி அம்மனுக்கு ஆடி மாதம் பரணி நட்சத்திரம் கூடிய நாளில் தொடங்கி 10 நாள் விழா சிறப்பாக நடைபெறும்.
நாகப்பட்டினம் நகரில் கீழ்க்கண்ட 12 சிவன் கோயில்கள் உள்ளன.[2]
Seamless Wikipedia browsing. On steroids.