Remove ads
From Wikipedia, the free encyclopedia
தொப்புள் என்பது உடலின் அடிவயிற்றில் காணப்படும் ஒரு வடு ஆகும். குழந்தை பிறந்தவுடன் தொப்புட் கொடி நீக்கப்படும்.அப்போது உருவாகும் வடுவே தொப்புள் ஆகும்.[1]
தூயதமிழில் கொப்பூழ் என்பதே சரியான உச்சரிப்பு.[2][3] இது பேச்சு வழக்கில் தொப்புள் அல்லது தொப்புள் குழி என்று குறிப்பிடப்படுகிறது. உந்தி,நாபி[4] என்றும் தொப்புள் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் நாவெல் (navel)[5] அல்லது பெல்லி பட்டன் (belly button)[6] என்று குறிப்பிடப்படுகிறது.மருத்துவ முறையில் தொப்புள் உம்பிளிகிஸ் (umbilicus) என்று குறிப்பிடப்படுகிறது.[1] அனைத்து பாலூட்டி விலங்குகளுக்கும் தொப்புள் இருந்தாலும் அது தெளிவாகக் காணப்படுவது மனிதர்களில் மட்டுமே.[7]
மனித உடற்கூற்றியலின்படி ஆங்கிலத்தில் தொப்புளை உட்புறத் தொப்புள் (Innie, இன்னி) மற்றும் வெளிப்புறத் தொப்புள் (outie, ஔட்டி) என்று இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. [8][9]
தொப்புட்கொடி நீக்கப்பட்டபின் வயிற்றில் ஒட்டியிருக்கும் கொடியின் மிச்சப்பகுதியானது காய்ந்து விழுந்துவிடும். இதன் காரணமாக உருவாகும் வடுவானது துளை போன்ற தோற்றம் கொள்ளூம். இவ்வகையான தொப்புளே உட்புறத் தொப்புள் எனப்படுவது ஆகும். இதுவே பொதுவான வகையாகும்.
சிலசமயம் வயிற்றில் ஒட்டியிருக்கும் கொடியின் மிச்சப்பகுதியை சுற்றி இருக்கும் தசைகள் அழுத்தி அப்பகுதியை வெளியில் பிதுக்க செய்துவிடும். இதன் காரணமாகக் காய்ந்தபின்பும் தொப்புளில் இருந்து சிறிய பகுதி வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும். இவ்வகையான தொப்புளே வெளிப்புறத் தொப்புள் எனப்படுவது ஆகும்.
குளிக்கும்போது உடலை நன்றாக தேய்த்து சுத்தப் படுத்தினால் கூட தொப்புள் பகுதி சுத்தமாவதில்லை. அது சருமத்தின் மட்டத்தில் இருந்து சற்றுக் குழிவடைந்து இருப்பதே இதற்குக் காரணம். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் தொப்புளுக்குள் சிறு சிறு கட்டிகள் ஏற்பட்டு அது புண்ணாகி விடவும் வாய்ப்புள்ளது. சிலர் தொப்புளுக்குள் சேர்ந்த அழுக்கை சுத்தம் செய்கிறேன் என்று நகத்தால் சுரண்டுவார்கள். அப்படி சுரண்டும்போது சின்ன கீறல் விழுந்தால்கூட அதில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சீழ் கட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம்.பொதுவாக தொப்புள் பகுதியில் புண் ஏற்பட்டால் அது ஆறுவதற்கு வெகுநாட்கள் ஆகும். காரணம், புண் ஏற்பட்ட பிறகு தொப்புளை சுத்தம் செய்வதும் அந்த இடத்தில் வியர்வை படாமல் பாதுகாப்பதும் மிக மிகக் கடினம்.[10]
தினமும் குளிக்கும்போதே நகம் இல்லாத விரலால் தொப்புளுக்குள் கொஞ்சம் சோப்பு போட்டு மென்மையாக சுத்தம் செய்யலாம். தலைக்குப் போடுகிற ஷாம்புவை தண்ணீரில் கரைத்து தொப்புளில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து பஞ்சால் துடைத்து விட்டால் அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.[10]
அதன்படி ஓர் இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும், மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலை போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது. இடது பக்கமாக சுழித்திருந்தால் உகந்தது அல்ல என்று கூறப்படுகிறது.[11][12] ஒரு பெண் சாதாரண நிலையில் நின்று கொண்டிருக்கும்போது (அவளது கைகள் தரையை நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில்) அவளது இரு முழங்கைகளுக்கும் இடையே ஒரு கற்பனைக்கோடு வரையப்படுவதாகக் கொள்வோம். அக்கோட்டின் மையப்பகுதிக்குச் சரியாக அவளது தொப்புள் அமைந்திருந்தால் அவள் சிறந்த பெண்ணாவாள். அவளது பெண்ணுறுப்பு மிகச் சிறிதாக இருக்கும்; கணவனின் அன்பைப் பெறுவாள். உடலில் தேவையற்ற ரோம வளர்ச்சி அதிகமிருக்காது. அவள் வைத்தது விளங்கும், தொட்டது துலங்கும்.
ஆண்களைப் பொறுத்தவரை தொப்புள் பெரியதாக இருப்பவன் தாம்பத்ய உறவில் அதிக நாட்டமுடையவனாக இருப்பானாம். மீனைப் போன்ற தொப்புள் உடையவர்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்களாம். தாழ்ந்த தொப்புள் உடையவன் அகால மரணமடைவான்.[13]
சிலருக்கு உந்திப் பிதுக்கம் (umbilical hernia) மற்றும் இதர பிரச்னைகளுக்காக வயிற்றில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளின் காரணமாக தொப்புள் மறைந்து போவதும் உண்டு.[14][15] உதாரணமாக கரோலினா குர்கோவா (Karolína Kurková) என்னும் செக் குடியரசை சேர்ந்த மாடல் அழகிக்கு சிறு வயதில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக தொப்புள் மறைந்து போனது.[16] இதனால் இவரின் வயிற்றின் நடுவில் தொப்புளுக்குப் பதிலாக கன்னக்குழிவு போன்ற ஒரு சிறிய பள்ளம் மட்டுமே காணப்படுகிறது.[17]
ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது. ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கிலிருந்து விடும் மூச்சுக் காற்றினால்தான், கர்ப்பகிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை சீர்படுத்துவதற்காக என்பது நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோயில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவது கூடாது என்கின்றனர். சன்னதியைவிட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்று சொல்வதும் இதன் விளைவாக வந்தது தான்.[18]
ஆயுர்வேதத்தின்படி தொப்புளும் அதை சுற்றி உள்ள பகுதியும் சிறப்புடையது.ஏன் என்றால் சுமார் 72,000 நரம்புகள் தொப்புட்பகுதியில் ஒன்று கூடுகின்றன.[19] பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவின் ஒரு வகையான சமான வாயுவானது தொப்புளில் அமைந்துள்ளது.இது ஜீரணம் மற்றும் உடல் வலிமைக்கு உதவுகிறது.[20][21][22]
குண்டலினி யோகாசன முறைப்படி மனித உடல் ஆறு சக்தி சக்கரங்களால் ஆனது.அதில் சோலார் ப்லேக்சுஸ் (Solar Plexus) அல்லது மணிப்புற சக்கரம் (Manipura Chakra) எனப்படும் சக்கரம் தொப்புட்பகுதியில் அமைந்துள்ளது.இது நெருப்பின் சக்தியை குறிக்கிறது.[22][23][24][25][26][27] நாபி அதாவது தொப்புள் நரம்பு முடிவலையில் சுருண்டு பதுங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்புவதற்குப் பிராணாயாமம் யோகிகளுக்கு உதவுகிறது என்றும் அந்த சக்தி முதுகுத் தண்டினுள் பதிந்து மூளைவரையில் செல்லும் சுழுமுனை எனும் நரம்பு வழியே மேலெழும்புவதாகவும் விளக்கப்படுகிறது. சூக்ஷும்னா என அழைக்கப்படும் சுழுமுனை என்பது ஒரு வளைவுக்கோடு போன்றது. நாபியிலிருந்து தொடங்கி முதுகுத் தண்டின் வழியே மூளைக்குச் சென்று, அங்கிருந்து வளைந்து கீழிறங்கி இதயத்தில் முடிவுறுகிறது. என்று பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி கூறியுள்ளார்.[28]
ஆயுர்வேதத்தின்படி தொப்புள் இடப்பெயர்ச்சி என்பது தொப்புள் வயிற்றின் மத்திய பகுதியில் இருந்து பெயர்வதாகும்.தொப்புள் இடம் பெயர்ந்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் வழிமுறை கீழ்வருமாறு,[29]
தொப்புள் இடப்பெயர்ச்சியால் ஜீரணக்கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சரியான யோகாசன பயிற்சியே இதற்கு தீர்வு ஆகும்.[29]
உலகின் பல இலக்கிய நூல்களில் பெண்ணின் அழகை வர்ணிக்கும்போது தொப்புளும் வர்ணிக்கப்படுகிறது.தமிழ் காப்பியங்களிலும் இது இடம்பெற்றிக்கிறது.உதாரணமாக பொருநராற்றுப்படையில் பாடினியின் வடிவழகை வர்ணிக்கும்போது "நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்" என்று குறிப்பிடப்படுகிறது."நீரிடத்துத் தோன்றும் சுழிபோன்ற இலக்கணம் பொருந்திய தொப்புள்" என்பது இதன் பொருளாகும்.[30] சீவக சிந்தாமணியில் விசயையின் தோற்றம் பற்றிய வரிகைளில் "அங் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்" என்ற வரியில் தொப்புள் வர்ணிக்கப்படுகிறது.[31]
குமார சம்பவத்தில் உமா (பார்வதி தேவி) கோடைகாலம் கடந்து தவமிருக்கிறார்.குளிர்காலம் வருகிறது. அப்போது பருவமழை ஆரம்பிக்கிறது. அந்த மழையின் முதல் துளி அவர் மேல் படும் தருணத்தை சம்ஸ்கிருத்தில்,
ஸ்திதாஹ் ஸ்னம் பக்ஷ்மசு பயோதரோத்ஷேதனி பத சர்நித்தா | வலிஸூ தச்யாஹ் ஸ்க்ஹலிதாஹ் ப்ரபிதிரே ஷிரின நாப்ஹீம் ப்ரதமோபிந்தவாஹ் || - குமார சம்பவம் - 5.23–24
என்று காளிதாசன் குறிப்பிடுகிறார்.[32] ”கண் இமைகளில் விழுந்தபின் வழிந்து கீழ் உதட்டில் பிளந்து இரு மார்பகங்களின் நடுவில் பாய்ந்து வயிற்றின் மடிப்புகளில் தவழ்ந்து இறுதியாக தொப்புளைச் சென்று அடைகிறது.” என்பது இதன் பொருளாகும்.[33] [34][35][36][37]
ஐம்பால் ஆய்கவின் ஏத்தி ஒண்தொடி, அசைமென் சாயல் அவ்வாங்கு உந்தி, மடமதர் மழைக்கண் இனையீர் இறந்த, கெடுதியும் உடையேன் என்றனன் - குறிஞ்சிப் பாட்டு -(139-142)
என்ற வரிகள் இடம்பெறுகின்றன. “எம் ஐம்பால் கூந்தலையும் மென்மையான அழகினையும் பாராட்டினான். ஒளிமிக்க வளையல், அசைகின்ற மெல்லிய சாயல், வளைந்திருக்கும் கொப்பூழ், மடப்பம் பொருந்திய செழித்த குளிர்ச்சியான கண்கள் இவற்றையும் பாராட்டினான். பின்பு, இளையவர்களே! என்னிடமிருந்து தப்பிச் சென்ற விலங்கொன்று இந்த வழி போனதோ? என்றான்” என்பது இதன் பொருளாகும்.[38]
சாங் ஒப் சாலமன் என்னும் யூத மொழி விவிலியம் நூலில் சுலைமி என்னும் பெண்னை வர்ணிக்கும்போது "thy navel is like a round goblet, which wanteth not liquor"(7:2) என்று குறிப்பிடப்படுகிறது. ”உனது தொப்புள் திராட்சை ரசம் நிறைந்த வட்டக்கலசம் போலிருக்கிறது” என்பது இதன் பொருளாகும்.[39][40][41][42]
ஆண்களின் தொப்புளும் வர்ணிக்கப்படுகிறது.
உதாரணமாக விஷ்ணு பெருமானின் தொப்புள் தாமரையில் தோன்றியவர் பிரம்மா[43] என்பதை பெரும்பாணாற்றுப்படையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார்,
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த் தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி, சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்
என்று குறிப்பிடுகிறார்.[44]
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர் எம்மானார்
என்னும் ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் "அவன் குழல் அழகு, வாய் அழகு, கண் அழகு, தாமரை மலர்ந்து கிடக்கும் தொப்புள் அழகு, இது உடல் வயப்பட்ட காதல் மட்டுமல்ல, உலக வயப்பட்ட காதல். உலகும் இயற்கையுமாய் அழகை விரிக்கும் படைப்பின் விதையான பிரம்மன் தோன்றியதால் எம்பெருமான் தொப்புள் அழகின் மூலமாயிற்று" என்பது இதன் பொருளாகும்.[45]
அருணகிரிநாதரின் திருப்புகழில்,
"உருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடை,
என்ற வரிகளில் முருகப்பெருமனை வர்ணிக்கின்றார். "இப்படி மனத்தை உருக்கும் தொப்புளில் முழுகி, இடையின் கண் களிப்புறும் காம மயக்கம் மிகுந்த ஆசைகளை ஒழித்துத் தொலைக்க ஒரு வழியும் தெரியவில்லை. உற்ற ஒரு துணையும் கூட நான் காண்கின்றேன் இல்லை." என்பது இதன் பொருளாகும்.[46]
மேற்கத்திய கலாச்சாரத்தில் பெண்கள் தொப்புளை வெளிகாட்டுவது சாதரணமானது. இது அக்காலத்தில் இருந்தே உள்ளதாக ஒரு தவறான கருத்து உள்ளது. பண்டைய கால மேற்கத்திய பெண் உடைகள் எவையும் தொப்புளை வெளிக்காட்டும் வண்ணம் வடிவமைக்கப்படவில்லை. 1940 களில் பிகினி (Bikini) எனப்படும் பெண்களுக்கான நீச்சல் உடை அறிமுகமானது. அதில் டூ பீஸ் பிகினி வகையில் மார்பு பகுதியும் இடைக்கும் தொடைகளுக்கும் நடுவில் உள்ள பகுதியும் மறைக்கப்பட்டு இடையை வெளிகட்டியவாறு வடிவமைக்கப்பட்டது. ஆனால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொறியாளர் லூயிஸ் ரிஆர்ட் (Louis Rard) டூ பீஸ் பிகினி உடையை தொப்புள் வெளிகாட்டுமாறு வடிவமைத்தார். இவ்வகை இரு துண்டு பிகினி உடையே மேற்கத்திய உடைகளில் தொப்புளை வெளிக்காட்டிய முதல் உடையாகும். இவ்வுடை மிகப்பிரபலமானது.[47]
அதன் பிறகு 1970 களில் உடை நாகரிக மாற்றத்தால் பெண்கள் இடைக்கு மேல் ஆணையும் உடையின் அளவு குறைந்தது. டயுப் டாப், கிராப் டாப் போன்ற வகை மேல் சட்டைகள் இடையை வெளிப்படுத்துகின்றன. 1990 களில் ஜீன்ஸ் கால்சட்டைகளை, லோ ஹிப் எனப்படும் தொப்புளுக்குக் கீழ் உடுத்தும் முறை பிரபலமானது. தி பேஸ் என்னும் பிரித்தானிய பத்திரிகையின் மார்ச் 1993 பதிப்பில் அட்டைப் படத்தில் கேட் மோஸ் என்னும் மாடல் அழகி லோ ஹிப் ஜீன்ஸ்சில் முதன் முதலில் தோன்றினார்.[48]
உடை நாகரிகம் தவிர்த்து இருபதாம் நூற்றாண்டு பாப் இசை கலாச்சாரமும் தொப்புள் வெளிக்காட்டுதல் பிரபலமாவதற்கு ஒரு காரணம். மடோனா, பிரிட்னி ஸ்பியர்ஸ்[49], ஜெனிஃபர் லோபஸ்[50], சக்கீரா போன்ற பல புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞர்கள் தொப்புளை வெளிக்காட்டிய உடைகளில் இசைப்படங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளனர். ஸ்பின் என்னும் அமெரிக்க பத்திரிகை அதன் செப்டம்பர் 2005 பிரதியில் மடோனாவின் தொப்புளை மிகச் சிறந்த வியக்க வைக்கும் பாப் இசைக் கலைஞர் உடல் அங்கமாக தேர்ந்து எடுத்துள்ளது.[51][52]
இடையை வெளிக்காட்டும் உடைகளைப் பெண்கள் அணிவது பண்டைய காலம் முதலே இந்தியாவில் வாடிக்கை ஆகும்.[53] இந்தியப் பெண்களின் பாரம்பரிய உடையான புடவை இடையை வெளிக்காட்டும் வண்ணமே உடுத்தப்படுவது இதற்கு சான்றாகும்.[54][55] ஆயினும் தர்மசாத்திர எழுத்தாளர்கள் பெண்கள் உடை அணியும்போது தொப்புள் வெளிக்காட்டப்படக்கூடாது என்று கூறியுள்ளனர்.[56] அதன்படி தொப்புள் வெளிக்காட்டுவதை அநாகரிகமாகக் கருதினர்.[57] ஆயினும் தொப்புள் வெளிக்காட்டும் பழக்கத்தை நாட்டிய பெண்கள் மற்றும் கழைக்கூத்தாடி பெண்களே முதன் முதலில் ஆரம்பித்தனர். தங்களின் வேலைக்குக் கால்கள் கட்டற்றவாறு நகரவேண்டும் என்பதால் புடவையை அவர்கள் கால்சட்டை போல காலைச் சுற்றி அணிந்தனர். இவ்வாறு அணிய தொப்புளுக்குக் கீழ் அணிந்தால் மட்டுமே கால்கள் முழுவதையும் மறைக்கமுடியும் என்பதாலே தொப்புள் வெளிக்காட்டியபடி புடவையை அணிந்தனர்.[58] இது போன்ற உடை அணிந்த பெண்களே பண்டைய கால சிற்பங்களிலும் [59][60] ஓவியங்களிலும் காணப்படுகிறது.[61] பண்டையகால சிற்பிகள் பெண்களின் சிலைகளை செதுக்கும்போது அவர்களின் தொப்புள் அழகிற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தனர்.[62]
தற்பொழுது இந்தியப் பெண்கள் பல்வேறு நாடுகளுக்குக் குடி பெயர்வதன் காரணமாக புடவையை லோ ஹிப் (low-hip) எனப்படும் தொப்புளுக்கு கீழ் உடுத்தும் முறை மிகக் பிரபலமாகியுள்ளது. [63][64][65] அது மட்டுமின்றி ஒளிபுகு பொருட்களான மென்பட்டு(chiffon), வலை (net) போன்றவற்றைப் பயன்படுத்தி நெய்யப்படும் ஒளிபுகு புடவைகளும் தொப்புளையும் இடைளையும் வெளிக்காட்டும்.[66][67][68] இதன் காரணமாக தொப்புள் வெளிகாட்டுதல் முன்பை விட அதிக வாடிக்கை பெற்றது. மேற்கத்திய உடைகளான டி சர்ட்,லோ ஹிப் ஜீன்ஸ் தற்போதைய கல்லூரி பெண்களிடம் பிரபலமாகியுள்ளது. இவ்வுடைகளில் தொப்புள் வெளிகாட்டுதல் இளம்பெண்களால் கவர்ச்சியாக கருதப்படுகிறது.[69][70][71][72] இந்த பழக்கம் பரவ சினிமா நடிகைகள் ஒரு காரணமாக கருதபடுகின்றனர்.[73][74] சிலர் தொப்புளுக்கு அழகு சேர்க்க தொப்புளில் வளையம்,தோடு போன்ற நகைகளும் அணிகின்றனர்.[75][76][77][78][79] இது போன்ற ஒளிபுகு புடவைகளும் தொப்புள் தோடுகளும் வசதிபடைத்த உயர்நிலை சார்ந்த வகுப்பு பெண்களே பயன்படுத்துகின்றனர்.[76][80][81][82] இளம் பெண்கள் மட்டுமின்றி சில குடும்ப பெண்களிடமும் தொப்புள் வெளிக்காட்டும் பழக்கம் ஆரம்பித்துள்ளது.[74]
இதற்கு மாறாக புடவைகளை தொப்புளுக்கு கீழ் கட்டும்போது எப்பொழுதும் தொப்புள் வெளிகாட்டபடுவதில்லை. தொப்புளுக்கு கீழ் கட்டியபின் முந்தானையால் தொப்புளை மறைத்தும் லோ ஹிப் புடவைகள் உடுத்தப்படுகிறது. அலுவலகம் செல்லும் பெண்கள் தொப்புளை வெளிகாட்டாமல் புடவை கட்டவேண்டும் என்று சில அலுவலகங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன.[83]
பாரம்பரிய மிக்க 7ஆம் நூற்றாண்டு சிகிரியா ஓவியங்களில் காணப்படும் பெண்கள் தொப்புள் வெளிகாட்டியவாறு உடைகள் அணிந்துள்ளனர்.[84] ஆனால் காவியசேகரா என்னும் இலக்கிய நூலில் ஒரு தந்தை தனது மணமுடித்த மகளிடம் கூறுவதாக இடம் பெரும் வரிகள்,
"பேகனிய நோடக்வ,சலு ஏன்டா போலட தகவ,நோபவ தன சகவ,சின நோமசென் தாசன் தகவ
"மார்பையும் தொப்புளையும் மறைத்து ஆடை அணியவேண்டும். சிரிக்கும்போது பற்கள் வெளியே தெரியாமல் சிரிக்க வேண்டும்" என்பது இதன் பொருளாகும்.[85] இதன் மூலம் மணமுடித்த பெண்கள் தொப்புளை வெளிகாட்ட அனுமதிக்கப்படவில்லை என்பது நிரூபணமாகிறது.
பழமையான இலங்கை வேடுவர்கள் கோனம் பொஜ்ஜ எனப்படும் உடையை அணிந்தனர்.இதில் பெண்கள் தொப்புள் வெளிகாட்டியவாறு இடைக்கு கீழ் மட்டுமே உடை அணிந்தனர். ஆனால், தற்போது வேடுவப் பெண்களும் தமது முழு உடலையும் மறையுமாறு உடை அணிகின்றனர்.[86]
1948ல் பிரித்தானிய இலங்கை,இலங்கை மேலாட்சியாக மாறியபோது பௌத்தம் மதம் இலங்கையில் பரவியது.அதன்படி சிங்கள பெண்களின் உடைகள் தொப்புளை மறைத்தவாறு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்தது.[87][88] இந்திய உடையான புடவை கால்களையும் இடையும் மறைப்பதால் சிங்கள பெண்கள் புடவையை உடுத்த தொடங்கினார்கள்.[89] ஆனாலும் உலக மயமாக்கல் காரணமாக தொப்புளை வெளிகாட்டும் மேற்கத்திய உடைகளும் லோ ஹிப் எனப்படும் தொப்புளுக்கு கிழ் உடுத்தும் முறையும் பிரபலமாகியுள்ளது.
ஜப்பானிய கலாச்சாரத்தில் தொப்புளுக்கு என்றும் சிறப்புண்டு.ஆரம்ப ஜொமொன் காலத்தில் களிமண் பொருட்களில் பெண்ணின் உடலை குறிப்பதற்கு பந்து போன்ற 3 வட்ட வடிவங்கள் செய்யப்பட்டன.இரண்டு மார்பகங்களையும் ஒன்று தொப்புளையும் குறித்தது."தொப்புளானது உயிர் உருவாகும் மத்திய பகுதி" என்ற கருத்தை உணர்த்துவதற்கே ஜொமொன் கால சிற்றுருகளில் தொப்புளை மார்பகத்தின் அளவில் பெரியதாக காட்டப்பட்டது.[90] அக்காலத்தில் குழந்தை பிறந்தவுடன் அதன் தொப்புளின் வடிவத்தை பற்றி ஆலோசனை நடைபெறுகின்றது.தொப்புள் கீழ் நோக்கியவாறு இருந்தால் அக்குழந்தை பலவீனமானது எனக்கருதப்பட்டது. இடி முழக்கத்தின் கடவுளான ரைஜின் இளமையான தொப்புள்களின் மேல் பசி கொண்டவன். எனவே தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை தொப்புளை எப்போதும் மறைத்தவாறே உடை அணியவைத்தனர்.[91] பாரம்பரிய உடைகளில் இடையை மறைத்தவாறு இடைவார் காணப்படும். ஜப்பானியர்கள் வயிற்று பகுதியே உடலின் வெப்பத்தை கட்டுப்பாடு செய்கிறது என்றும்,மிகவும் சரியான தொப்புளானது உட்புறத் தொப்புளே எனக்கருதுகின்றனர்.[92]
நிகழ்காலத்தில் தொப்புள் வெளிகாட்டுதல் வாடிக்கை ஆகிவிட்டது.பல ஆண்டுகளாக ஜப்பானில் தொப்புள் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. ஹொக்கைடோ தீவில் ஆண்டுக்கு ஒரு முறை ஹெசோ மசூரி எனப்படும் தொப்புள் திருவிழா நடைபெறும்.இதில் மக்கள் தங்கள் வயிறு மற்றும் தொப்புள் பகுதிகளில் பல வண்ணங்களில் முகங்களை வரைந்து நடனமாடுவர்.[93][94][95][96] நகரத்தின் டோக்கியோவின் வடக்கில் காணப்படும் ஷிபுகவா நகரத்திலும் இதே போன்ற தொப்புள் திருவிழா நடைபெறுகிறது.[97][98][99]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.