நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப் பாடல் என்பது ஒரு நாட்டின் மக்கள் தம் நாட்டின் மீது அன்பும் பற்றுணர்வும் தோன்றுமாறும், நினைவூட்டுமாறும் அமைந்த நாட்டுணர்ச்சி மிக்க ஓர் இசைப்பாடல். இப்பாடலைப் பாடும் பொழுது தம் நாட்டின் பழக்க வழக்கங்களும், வரலாறும், உயர்வாகத் தாம் கொள்ளும் கொள்கைகளும், நாட்டிற்காக உயிரிழந்த, உழைத்த பெருமக்களின் நினைவும், பொதுவாக நாட்டைப்பற்றிய ஆழுணர்வுகளும் மேலெழுமாறும் பாடும் ஒரு நாட்டு வணக்கப் பாடல். இதனைத் ”தேசிய கீதம்” என்றும் கூறுவார்கள். இந்த நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப் பாடல் என்பது மரபு வழியாகவோ, அல்லது ஒரு நாடு தன் அரசின் ஏற்பு பெற்ற வடிவம் என்றோ அறிவித்து ஏற்றுக் கொள்ளும்.

நாட்டு வணக்கப் பாடல்கள் ஐரோப்பாவில் 19 ஆவது நூற்றாண்டுகளில் பரவலாக மேலெழுந்த ஒரு வழக்கம். 1568க்கும் 1572க்கும் இடையே எழுதப்பட்டதாகக் கருதப்படும் டச் மக்களின் ஹெட் வில்லெமுஸ் (Het Wilhemus) என்னும் நாட்டு வணக்கப் பாடல்தான் உலகிலேயே பழையது எனக் கருதப்படுகின்றது. இப்பாடல் டச் மக்கள் எசுப்பானியப் பேரரசை எதிர்த்து புரட்சி செய்த பொழுது எண்பதாண்டுப் போர் என்னும் காலத்தில் எழுந்தது. நிப்பானிய நாட்டு வணக்கப் பாடலாகிய கிமி 'க யோ என்னும் பாடல் 12-14 ஆவது நூற்றாண்டுகளில் இருந்த காமாகூரா (1185–1333) அரசின் காலத்தில் இருந்த பாடல்களின் அடிப்படையில் எழுந்தது என்றாலும், அது 1880 வரை இசையுடன் அமையவில்லை[1]. இங்கிலாந்தின் 'கா'ட் சேவ் 'த குயீன் (God Save the Queen, கடவுள் அரசியைக் காக்க) என்னும் நாட்டு வணக்கப் பாடல் 1745இல் தான் முதன் முதலாக 'கா'ட் சேவ் த கிங் (கடவுள் அரசரைக் காக்க) என்னும் தலைப்பில் பாடப்பட்டது. எசுப்பானியரின் நாட்டு வணக்கப் பாடலாகிய மார்ச்சா ரியால் (அரச நடை) என்னும் பண் 1770 இல் இருந்து வழக்கில் உள்ளது. பிரான்சிய நாட்டின் நாட்டு வணக்கப் பாடல் லா மார்செயேஸ் (La Marseillaise) என்பது 1792இல் எழுதி 1795இல் ஏற்று வழக்குக்கு வந்தது. ஐரோப்பிய நாடுகள் தவிர பிறநாடுகள் சிலவற்றிலேயே நாட்டு வணக்கம் என்னும் கருத்து வழக்கூன்றியுள்ளது. அவற்றுள் இந்தியாவின் ஜன கண மன, சீனாவின் ஈ யொங் ஜுன் ஜின் சிங் சியூ (Yìyǒngjūn Jìnxíngqǔ, ஆர்வலர்களின் வீரநடை), சிறீலங்காவின் சிறீலங்க மாதா, பாகிஸ்தானின் குவாமி தரனா, முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

நாட்டு வணக்கப் பாடல்கள் பெரும்பாலும் அரசு ஏற்பு பெற்ற ஒரு மொழியில் இருந்தாலும், சில நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அரச ஏற்பு பெற்ற மொழிகளாக இருக்கும்பொழுது, அவற்றில், 2 மொழிகளிலோ, சில நாடுகளில் பல மொழிகளிலோ நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப்பாடல் இருக்கும். கனடாவில் நாட்டுப்பண் ஆங்கிலம், பிரெஞ்ச்சு ஆகிய இரு மொழிகளில் அமைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அவர்களின் நாட்டு வணக்கப் பாடல் அந்நாட்டின் நான்கு நாட்டுமொழிகளில் (பிரெஞ்ச்சு, டாய்ட்சு, இத்தாலியன், ரோமன்சு) அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நாட்டு வணக்கப் பாடல், ஒரே பாடலில் அந்நாட்டின் 11 மொழிகளில் ஐந்து மொழிகளில் தனிப்பகுதிகளாக அமைந்துள்ளது. எசுப்பானிய நாட்டுப்பண்ணில் இசை மட்டுமே உள்ளது, சொற்கள் ஏதும் இல்லை, எனவே 2007இல் இசைக்கேற்ற பாடல் வரிகளை இயற்றுவதற்காக நாடளாவிய போட்டி ஒன்றை அந்நாடு அறிவித்திருந்தது[2].

நாடு கடந்த பெரிய பன்னாட்டு அமைப்புகளுக்கும் நாட்டு வணக்கப்பாடல் போன்ற பொது வணக்கப் பாடல்கள் உண்டு. இண்டர்னாசியோனாலே என்னும் பாடல், உலகளாவிய குமுகாயவிய இயக்கப் பாடலாக (socialist movement) உள்ளது. ஓ'ட் டு ஜாய் (Ode to Joy) என்னும் மெட்டில் பீத்தோவனின் ஒருங்கிசை-9 (Symphony No. 9)இன் அடிப்படையில் அமைந்த பாடல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்றிய வணக்கப் பாடலாக உள்ளது. இதே போல ஐக்கிய நாடுகள்[3] அமைப்புக்கும், ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கும்[4] ஏற்புநிலை அற்ற வணக்கப் பாடல்கள் உள்ளன. ஒலிம்ப்பிக் நிறுவனத்துக்கும் தனியான வணக்கப்பாடல் உண்டு. எசுபராண்டோ என்னும் செயற்கை மொழிக்கூட்டங்களில் லா எஸ்பெரோ என்னும் மொழி வணக்கப் பாடலும், தமிழ் நாடு மாநில அரசு விழாக்களிலும் கூட்டங்களிலும் பயன்படுத்தும் நீராரும் கடலுடுத்த என்னும் தமிழ் மொழி மொழி வணக்கப் பாடலும், இவ்வகை பிற இயக்க வணக்கப் பாடல்களாகும்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

வெளி இணைப்புக்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.