From Wikipedia, the free encyclopedia
துவாரபாலகர் (Dvarapala) என்பது, வாயிற்காப்போர் என்னும் பொருள் கொண்டது. இச்சொல் பொதுவாக இந்து, பௌத்த சமயங்கள் சார்ந்த தொன்மங்கள், சிற்பங்கள் தொடர்பிலேயே பயன்பாட்டில் உள்ளது. துவாரபாலகர் என்பது கோயில் வாயில்களின் இருபுறங்களிலும் அமைக்கப்படும் காப்போர் உருவங்கள்.[1] துவாரபாலகர்கள் பொதுவாகச் சாதாரண போர்வீரர்கள் போன்றோ அல்லது பயங்கரமான தோற்றம் கொண்ட அசுரர் போன்ற வடிவிலோ இருக்கலாம். இவர்களின் ஆண், பெண் இருபாலாரும் உண்டு. துவாரபாலகர்களைக் குறிக்கும் சிற்பங்கள், இந்து, பௌத்த சமயங்கள் பரவியிருந்த தென்னாசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல நாடுகளிலும் காணப்படுகின்றன. இந்துக் கட்டிடக்கலையிலும், பௌத்த கட்டிடக்கலையிலும் துவாரபாலகர்களின் சிற்பங்கள் முக்கியமான கூறுகளாகக் காணப்படுகின்றன.
துவார என்பது "வாயில்" என்றும், பால என்பது "காப்போன்" என்றும் பொருள்படும். தாய், பர்மியம், வியட்நாமியம், கெமெர், யாவானியம், மலே, இந்தோனீசியம், சிங்களம் போன்ற பல தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளில் பயிலும் மொழிகளில் த்வாரபால என்ற சொல் பயன்பட்டு வருகிறது.
துவாரபாலகர்களின் படிமங்கள் திருக்கோயில்களின் கோபுர நுழைவாயிலிலும், கருவறை நுழைவாயிலிலும் அமைக்கப்பட்டிருக்கும் காவல் தெய்வங்கள் ஆகும்.
சிவாலயங்களில் எண்ணற்ற துவாரபாலகர்கள் உள்ளார்கள். அவர்களில் சண்டி - முண்டி,[2] சண்டன் - பிரசண்டன், திரிசூலநாதர் - மழுவுடையார் போன்ற ஐந்து இணை துவாரபாலகர்கள் பற்றிய செய்திகள் தெரிகின்றன.
இவர்களில் சண்டன் - பிரசண்டன் இணை மிகவும் வலிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழில் தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன் என்றொரு பழமொழி உள்ளது.[3]
திரிசூலநாதர் என்பவர் சிவபெருமானின் சூலமாவார். இவருடைய சிற்பத்தின் தலைப்பகுதியின் பின்பக்கத்தில் திரிசூல வடிவம் காணப்படுகிறது.[4] மழுவுடையார் என்பவர் சிவபெருமானின் கைகளில் இருக்கும் மழு ஆயுதமாவார்.[4] இவருடைய சிற்பத்தின் நெற்றிப் பகுதியில் மழுவைப் போன்ற புடைப்பு உள்ளது.[4]
பிரம்மனிடம் வரம் பெற்ற தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள், முப்புரம் எனும் தங்கம், வெள்ளி, இரும்பு எனும் மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். அவர்கள் பறக்கும் கோட்டையில் ஏறி எண்ணற்ற உலகங்களைப் பிடித்து தேவர்கள் போன்றோர்களே கொடுமை செய்தார்கள். தேவர்களும், பிரம்மா, திருமாலும் சிவபெருமானிடம் தங்களை காத்தருள வேண்டினர். சிவபெருமான் தேவர்களை தேராகவும், பிரம்மா தேரோட்டியாகவும், அந்த தேருக்கு திருமால் பறக்கும் சிறகாகவும் கொண்டு போர்தொடுத்தார். அந்த அரக்கர்கள் வசித்த முப்புரங்களை தன்னுடைய புன்சிரிப்பால் எரித்தார். அதனால் சிவபெருமானை முப்புரம் எரித்த நாயகன் என்ற பொருளில் திரிபுரதகனர் என்று அழைக்கின்றனர். அப்போது எழுந்த தீயில் பூவாக லிங்கம் தோன்றியது அதனை இரு அரக்கர்கள் கட்டிப்பிடித்தனர். அவர்களே சண்டி, முண்டி என்ற இரு துவாரபாலகர்களாக ஆனார்கள்.[5]
நந்தி மற்றும் மகாகாளர் ஆகியோர் சிவபெருமானின் துவாரபாலகர்களாக சில கோயில்களில் உள்ளார்கள். கர்நாடக மாநிலம் தலக்காடு வைத்தியநாதர் கோயிலில் மூலவர் சன்னதிக்கு முன்பு இந்த இருவரும் காவலில் உள்ளார்கள். இச்சிவாலயத்தில் நந்தி ஆண் கல்லிலாலும், மகாகாளர் பெண் கல்லாலும் வடிவமைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நந்தி சிலையை தட்டினால் கண்டநாதம் என்ற மணி ஓசைக் கேட்கிறது. மகாகாளர் சிலையை தட்டினால் தாளநாதம் என்ற மணி ஓசைக் கேட்கிறது.[6]
நந்தியையும் மகாகாளரையும் பற்றி பன்னிரு திருமுறைகளில் பாடப்பட்டுள்ளது.[7]
தமிழ்நாட்டில் திண்டிவனம் நகரில் திந்திரிணீஸ்வரர் சிவாலயத்தில் ஒரே ஒரு துவாரபாலகர் மட்டுமே உள்ளார். திண்டி எனும் பெயருடைய துவாரபாலகர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டமையால், திண்டிவனம் என இவ்வூர் பெயர் பெற்றது. பொதுவாக இந்துக் கோயில்களில் இரண்டு துவாரபாலகர்கள் இருப்பது வழமை. அவ்வாறு இல்லாமல் ஒரே ஒரு துவாரபாலகர் மட்டும் இருப்பது சிறப்பாகும்.[8]
துவாரபாலகர் தொடர்பான செய்திகள் புராணங்கள் மற்றும் மகாபாரதத்தில் உள்ளது. துவாரபாலகர்களில் குறிப்பாக வைணவ கோயில்களில் காணப்படும் துவாரபாலகர்களை, ஜெயன் மற்றும் விஜயன் என அழைக்கப்படுகிறார்கள். வைகுண்டத்தின் வாயிற் காப்பாளர்களாக இவர்கள் கருதப்படுகிறார்கள். பிரம்மாவின் மனதிலிருந்து தோண்றிய குமாரர்களான சனகாதி முனிவர்கள் விஷ்ணுவைச் சந்திக்க வந்த பொழுது இவர்கள் தடுத்ததால் சாபத்தினைப் பெற்றனர். அதன் விளைவாக மானுடராக மண்ணில் தோன்றிட நேர்ந்தது. இருப்பினும் விஷ்ணுவின் கருணையால் ஒவ்வொர் யுகத்திலும் இரணியகசிபு, இரணியாட்சன், இராவணன், கும்பகர்ணன் போன்று அரக்கராகத் தோன்றி விட்ணுவை எதிர்த்து சண்டையிட்டு அதன் வாயிலாக முக்தி பெற்று தமது அருகிலேயே இருக்கலாம் என சாபவிமோசனம் அளித்தார். இவர்களே விட்ணு கோயில்களில் துவாரபாலகர்களாக இன்றளவும் திகழ்கிறார்கள் என்று புராணங்களில் விளக்கப்பட்டுள்ளது.[9]
வைணவ ஆலயங்களில் ஜயன், விஜயன் ஆகிய துவாரபாலகர்கள் உள்ளார்கள். சக்தி கோயில்களில் அரபத்ரா, சுபத்ரா ஆகிய துவார பாலகிகள் உள்ளனர்.[3] சிவாலயங்களில் உள்ள துவார பாலகர்களுக்கு சண்டன், பிரசண்டன் என்ற பெயர்கள் வழங்குகின்றன. அம்மன் சன்னதியைப் பாதுகாக்கும் பெண் துவாரபாலகியர்களை அரபத்ரா, சுபத்ரா என்று அழைக்கிறார்கள்.[10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.