From Wikipedia, the free encyclopedia
திரௌபதி (சமசுகிருதம்: द्रौपदी) (ஆங்கிலம்: Draupadi) மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவர். இவருடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார். திரெளபதி அழகில் சிறந்தவர்.[1]
திரெளபதி | |||||
---|---|---|---|---|---|
அத்தினாபுர அரசி | |||||
நேபாளத்தில் திரௌபதி சிலை | |||||
ஆட்சி | இந்திரப்பிரஸ்தம், அத்தினாபுரம் | ||||
முன்னிருந்தவர் | காந்தாரி | ||||
துணைவர் | தருமன், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் | ||||
வாரிசு(கள்) | உபபாண்டவர் | ||||
| |||||
மரபு | பாஞ்சால நாட்டு இளவரசி | ||||
தந்தை | துருபதன் | ||||
சமயம் | இந்து சமயம் |
திரெளபதியின் சுயம்வரத்தின் போது பாஞ்சால அரசன் துருபதன் விதித்த விதிகளை அருச்சுனன் மட்டுமே நிறைவேற்றி திரெளபதியை சுயம்வரத்தில் வென்றான். ஆனால் குந்தி,மகன் வென்று கொண்டு வந்த பொருள் என்ன என்று கவனிக்காமல், திரெளபதியை பாண்டவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளுமாறு கூறினார். அதன்படி திரெளபதியை பாண்டவர்கள் மணந்து தகுந்த விதிகளை நிர்ணயித்து இல்லற வாழ்க்கையை நடத்தினர்.
பாண்டவர், கிருஷ்ணர் மற்றும் மயன் துணையால் இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை புதிதாக நிர்மாணித்து ஆண்டனர். பாண்டவர் ராஜசூயம் எனும் வேள்வி செய்தனர். அதற்காக புது நவீன அரண்மனை கட்டினர். ராஜசூய வேள்விக்கு வந்திருந்தவர்களில் துரியோதனனும் ஒருவன். துரியோதனன் நவீன அரணமனையை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போது, தரை போன்ற நீர்நிலையில் விழுந்து விட்டான். அதைக் கண்ட திரெளபதி, குருடனின் (திருதராஷ்டிரன்) மகன் குருடனே என்று, துரியோதனனைப் பார்த்து எள்ளிநகையாடினாள். அதனால் தீராத அவமானமுற்ற துரியோதனன், திரெளபதியை பழி வாங்க திட்டமிட்டான். அத்தினாபுரம் திரும்பிச் சென்ற துரியோதனன், தானும் ஒரு சபா மண்டபத்தைக் கட்டினான். அச்சபாமண்டபத்தை பாணடவர்கள் கண்டு களிக்கவும் சூதாடவும், இந்திரப்பிரஸ்தத்திற்கு, தனது தந்தை திருதராட்டிரன் மூலம் விதுரனை தூது அனுப்பினான் துரியோதனன்.
கௌரவர்களுடன் சூதாட்டத்தில் தருமர் தன் நாடு முதல் அனைத்தையும் இழந்த நிலையில் இறுதியாக பாண்டவர் மனைவியான திரெளபதியை வைத்து சூதாடினார். ஆயினும் அங்கே சகுனியின் கபட ஆட்டத்தால் தருமர் தோல்வியடைந்தார். இதன் காரணமாக திரெளபதி கௌரவர்களுக்குச் அடிமையானாள். இதன் போது துரியோதனனின் ஆணைப்படி, துச்சாதனன் திரெளபதியை பெரியவர்கள் கூடிய நிறைந்த அவையிலே இழுத்து வந்து, திரெளபதியின் துகிலை உரித்து அவமானப்படுத்த நினைத்தபோது அது ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் கைகூடாமல் போனது.
கௌரவர்களுடன் ஆடிய சூதாட்டத்தில் தருமன், சகுனியின் கபடத்தால் தனது நாடு, படை, பணியாட்கள், செல்வங்கள், சகோதரர்கள் மற்றும் திரெளபதியையும் இழந்தான். அடிமையான திரெளபதியை தன் தொடையில் அமர்த்த, துரியோதனன் தன் தம்பியான துச்சாதனனுக்கு ஆணையிட்டான்.
துச்சாதனன், திரெளபதியின் நீண்ட கூந்தலை கைகளால் பிடித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக அத்தினாபுர அரசவைக்கு இழுத்து வந்தான். அத்துடன் திரெளபதியின் துகிலை உரித்தான். துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் கூறி அழுத பாஞ்சாலியின் குரலைக் கேட்டவுடன், ஸ்ரீகிருஷ்ணர், திரௌபதியில் துகிலை தொடர்ந்து வளரச் செய்து, திரௌபதியின் மானம் காத்தவர் கண்ணன்.[2]
இந்த அவமானத்திற்கு பதிலடியாக துச்சாதனனின் மார்பு குருதியை தன் கூந்தலில் பூசும் வரை தன் கூந்தலை முடியேன் என சபதமிட்டார். தன்னை தொடை மீது அமரச் சொன்ன துரியோதனனின் தொடைகளை பீமன் கதாயுதத்தால் அடித்து உடைக்கும் வரை தான் மனஅமைதி அடையமாட்டேன் என்று சபதமிட்டார் திரெளபதி. பாஞ்சாலியின் சபதத்தைக் கேட்டு துரியோதனன், துச்சாதனன் மற்றும் அத்தினாபுர அவையினர் அதிர்ந்தனர்.
அத்தினாபுரத்தின் அரசவையில் சூதில் தோற்ற தருமனால் திரெளபதிக்கு நேர்ந்த அவமானத்துடன், பாண்டவர்கள் 12வருட வனவாசத்தின் போது, திரெளபதி பானையில் நீரை நிரப்பிக் கொண்டு திரும்புகையில் துச்சலையின் கணவனும் சிந்து நாட்டு அரசனுமான ஜயத்திரதன், திரெளபதியை மானபங்கப் படுத்த முனைகையில், வீமனும் அருச்சுனனும் திரெளபதியை ஜயத்திரனிடமிருந்து காத்தனர்.
பின்னர் பாண்டவர் உத்தர நாட்டில் ஒரு வருட தலைமறைவு வாழ்க்கை நடத்தும் போது, விராடனின் மைத்துனனும், அந்நாட்டுத் படைத்தலைவருமான கீசகன் திரெளபதி மீது மையல் கொண்டு, திரெளபதியை மானபங்கபடுத்த முயல்கையில் வீமன் கீசகனைக் கொன்று திரெளபதியை காத்தான்.
திரெளபதிக்கு பாண்டவர் ஐவர் மூலமாக உபபாண்டவர்கள் எனும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். குருச்சேத்திரப் போரின் முடிவு நாளான 18வது நாள் போரின் நடு இரவில் உறங்கிக்கொண்டிருந்த உபபாண்டவர்களை, பாண்டவர்கள் என தவறாக எண்ணி அசுவத்தாமன் கொன்றார்.
இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், புதுச்சேரி மற்றும் இலங்கையில் திரௌபதி அம்மனுக்கு தனிக் கோயில்கள் உள்ளன.[3] வட தமிழகத்தில் குறிப்பாக வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் திரௌபதியம்மன் கோவில்கள் இருக்கிறது. வன்னியர் குல சத்திரியர் சமூக மக்கள் குல தெய்வமாக வழிப்படுகிறார்கள். கோவில்களின் எண்ணிக்கை மிகக் குறைவெனினும் இவள் கோவில் கொண்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் இவ்வன்னையை மிகவும் போற்றுவர். இலங்கையிலே இவ்வம்மன் மழை பொழிவிக்கும் தெய்வமாகவும் குழந்தை வரம் தரும் தெய்வமாகவும் போற்றப்படுகிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.