தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் (Nellaiappar Temple) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும். பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் "திருநெல்வேலிப் பதிகம்" பாடியிருப்பதால் அதற்கு முன்பே "திருநெல்வேலி" என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன.
தேவாரம் பாடல் பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலி வேலி, சாலிநகர், சாலிவாடி, பிரமவிருந்தபுரம், தாருகாவனம்[1] |
பெயர்: | திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருநெல்வேலி |
மாவட்டம்: | திருநெல்வேலி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர்,வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர், வேணுவன மகாலிங்கேஸ்வரர், வேணுவனேஸ்வரர்) |
தாயார்: | காந்திமதியம்மை, வடிவுடையம்மை |
தல விருட்சம்: | மூங்கில் |
தீர்த்தம்: | பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாரித் தீர்த்தம், சிந்துபூந்துறை |
ஆகமம்: | காரண ஆகமம், காமீக ஆகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, ஆனிப் பெருந்திருவிழா, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம். |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
தொன்மை: | புராதனக் கோயில் |
நிறுவிய நாள்: | 2000 ஆண்டுகளுக்கு முன்னர் |
முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் ராமகோனார். அப்படி ஒருநாள் அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன ராமகோனார் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.
அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.
இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்
திருநெல்வேலி என இவ்வூர் அழைக்கப்படுவதற்கு மரபுவழிக் கதையொன்று உள்ளது:
முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராகத் திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியைச் சோதிக்கச் சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் இறைவனின் நைவேத்தியத்திற்காகத் தினமும் வீடு வீடாகச் சென்று நெல் சேகரித்து வருவார். ஒருநாள் சேகரித்த நெல்லைச் சன்னதி முன் உலரப் போட்டுவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.
குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்துவிடப் போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.
மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர், இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தைக் காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் ஆச்சரியப்பட்டார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார்.
இக்கோயிலில் தினசரி பூசைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. 10 நாட்களுக்கு நடைபெறும் இத்திருவிழாவில் தேரோட்டம் நிகழ்வு சிறப்பான ஒன்றாகும். மேலும் இங்கு ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று பிற திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.