சேரன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
தவமாய் தவமிருந்து (English: Thavamaai Thavamirundhu), 2005ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். மிக நீளமான தமிழ் திரைப்படம் என்றும் நான்காவது மிக நீளமான இந்திய திரைப்படம் என்றும் இப்படம் சிறப்புக்குரியதாகிறது. [1] தந்தை - மகன் பிணைப்பு, குடும்ப உறவுகளின் சிறப்பை இப்படம் வலியுறுத்துவதாக பலரும் கருதுகின்றனர்.[2][3]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ராமனாதனும் (செந்தில்) ராமலிங்கமும் (சேரன்) எளிய பொருளாதாரப் பின்னணி கொண்ட கிராமத்துப் பெற்றோர்களான முத்தையா (ராஜ்கிரண்) மற்றும் சாரதாவின் (சரண்யா) குழந்தைகள். பிள்ளைகளை பல சிரமங்களுக்கு இடையில் முத்தையா படிக்க வைக்கிறார். அண்ணன் ராமனாதன் படிப்பில் நாட்டம் குறைந்து Polytechnic படிப்பு படிக்கச் செல்ல, ராமலிங்கம் பொறியியல் படிக்கிறார். ஒழுக்கம் கெட்டுப் போகும் ராமனாதனை கட்டுப்படுத்தி வைக்க, லதாவை (மீனாள்) அவனுக்கு மணமுடித்து வைக்கின்றனர். திருமணத்துக்கு பின் குடும்பத்தில் எழும் சச்சரவுகள் காரணமாக, ராமனாதன் தனிக்குடித்தனம் செல்கிறார். கல்லூரித் தோழியான வசந்தியுடன் (பத்ம்பிரியா) காதல் வசப்பட்டு அவருடன் உடலுறவு கொள்ளும் ராமலிங்கம் வசந்தியை கர்ப்பமாக்குகிறார். ஊர் கண்ணில் இருந்து கர்ப்பத்தை மறைக்க ராமலிங்கமும் வசந்தியும் பெற்றோருக்கு தெரிவக்காமல் சென்னைக்கு செல்கின்றனர். இரு மகன்களின் செய்கையினால், முத்தையாவும் சாரதாவும் மனமுடைந்து போகின்றனர்.
சென்னையில் தன் படிப்புத் தகுதிக்கு குறைந்த வேலையைத் தேடிக்கொள்ளும் ராமலிங்கம் சிரமமான வாழ்க்கை நடத்துகிறார். வசந்திக்கு குழந்தை பிறந்ததை அறிந்து பேரக்குழந்தையைப் பார்க்க வரும் முத்தையா பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார். அவரின் பாசத்தைக் கண்டு மனம் வெட்கும் ராமலிங்கம் ஊருக்குத் திரும்பி தங்களை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறான். சிறு மனப்போராட்டத்துக்கு பிறகு, அவர்களை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ராமலிங்கம், வசந்தி இருவரும் தங்கள் படிப்புக்கேற்ற வேலை பெற்று மதுரைக்கு குடியேறுகின்றனர். பெற்றோரையும் மதுரைக்கு அழைத்துச் சென்று தங்கள் வீட்டில் வைத்து மனமகிழ்வுடன் கவனித்துக் கொள்கின்றனர். பெற்றோருடன் ஒட்டாமல் வாழும் அண்ணன் ராமனாதனையும் குடும்பத்துடன் இணைக்கிறார் ராமலிங்கம்.
நாளடைவில் முதுமை காரணமாக சாரதா மரணமடைய அந்த துயரைப் போக்க கிராமத்திற்கே திரும்பி அவர் நினைவுகளில் வாழ்கிறார் முத்தையா. ராமலிங்கத்துடன் தான் வசதி குறைவாக வாழ்வதாக நினைக்கும் ராமனாதன் அதற்கு தனக்கு சரியாக கல்வி புகட்டாத தந்தையே காரணம் என்று முத்தையாவிடம் முறையிடுகிறார். பரம்பரை வீட்டையும் தனக்குத் தருமாறு வேண்டுகிறார். பிள்ளைகளை வளர்க்க பெருஞ்சிரமம் எடுத்த முத்தையா, மகனின் மனக்குறையை கண்டு குற்ற உணர்வு கொள்கிறார். உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் முத்தையா தன் இளைய மகனுக்கும் ஏதும் குறை வைத்து விட்டோமோ என்று கேட்டு, இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு இறந்து போகிறார். தந்தையின் இறப்புக்கு பிறகு தன் அண்ணன் மட்டுமே தனக்கு உறவு என்பதை உணரும் ராமலிங்கம் பரம்பரை வீட்டை அண்ணனுக்கே விட்டுத் தருகிறார். தங்கள் பெற்றோர் தங்களை வளர்க்க பட்ட பாட்டை தங்கள் குழுந்தைகளுக்கு விளக்கி வளர்ப்பதாக காட்டும் காட்சியுடன் திரைப்படம் முடிகிறது.
குடும்ப உறவுகளை வலியுறுத்துவதாகவும், தமிழக கிராம வாழ்க்கை முறையை படம் பிடித்துக் காட்டுவதாகவும் இக்காலகட்டத்தில் வந்த தமிழ்த் திரைப்படங்களில் காணப்பட்ட ஆபாசப் போக்கு குறைந்து காணப்பட்டதாகவும் இப்படம் பெரிதும் பாராட்டப்பட்டது. மேம்போக்காக பார்க்கையில், இத்திரைப்படம் வணிகக் கூறுகள் குறைந்து கலைநோக்கில் எடுக்கப்பட்டதாகத் தோன்றினாலும், திரைப்பட ஆர்வலர்கள் இருந்து மாறுபட்டார்கள். ராமலிங்கமாக நடித்த சேரனின் நடிப்பு பல காட்சிகளில் மிகையாகவும் பொருத்தமற்றதாகவும் தோன்றியது. கல்லூரிப் பருவத் தோற்றத்துக்கு பொருந்ததாகவும் அவருடைய உடல் அமைப்பு இருந்தது. பொறியியல் பட்டம் பெற்ற ராமலிங்கம் வண்டி இழுத்து தன் மனைவியைக் காப்பாற்றுவது போன்ற காட்சிகள், பாத்திரங்களின் மேல் பரிதாபத்தை வரவழைக்க வலிந்து திணிக்கப்பட்ட நடைமுறைக்கு பொருந்தாத காட்சிகளாக கருதப்பட்டது. கதை நகரும் விதம், காட்சியமைப்புகள், கதை மாந்தர் படைப்பு ஆகியவை இயக்குநர் சேரனின் முந்தைய திரைப்படமான ஆட்டோகிராப்பை ஒத்திருந்ததாக குறை கூறப்பட்டது. படத்தின் நீளமும் தேவையின்றி அதிகமாக இருப்பதாக கருதப்பட்டது. எனினும், தான் சொல்ல வந்த உணர்வுகளை சரியாக படம்பிடிக்க இந்த அவகாசம் தேவை என்று இயக்குநர் சேரன் மறுமொழி தந்தார்.
ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி என்பது தவமாய் தவமிருந்து படத்தில் இடம்பெற்ற ஒரு நாட்டுப்புற வகை சார்ந்த பாட்டும் காட்சிப்படுத்தலும் ஆகும். இந்தப் பாடலை சா. பெருமாள் எழுதினார். இதற்கு சபேசு முரளி இசையமைத்தார். செயமூர்த்தி பாடினார். பல கலைஞர்கள் காட்சியமைப்பில் பங்கெடுத்தனர்.
குஞ்சுகள் காக்கும் குருவி ஒன்று "குறத்திமயன்" வலையில் சிக்கவைக்கப்படுதல், அதில் இருந்து விடுதலை பெறுதல் என்ற கதைப் பாடல் ஊடாகக் கூறப்படுகிறது. குருவி சிறைப்பட்டு தான் "பரலோகம் போறேனே" என்று கதறி அழுகையிலே "ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது" என்று பாடல் வேகமாய் எழுகிறது. "வலை என்ன பெருங்கனமா? அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா." என்று ஒரு பொதுவுடமைக் கருத்தை பாடல் முன்வைக்கிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.