From Wikipedia, the free encyclopedia
தலைக்கு ஊத்தல் (Thalaikoothal) அல்லது தலைக்கூத்தல் என்பது தமிழ்நாட்டின், தென்மாவட்டங்களில் முதியவர்களை தலைக்குக் குளிப்பாட்டி கொலை செய்யும் முறையைக் குறிக்கிறது. கரூர், திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இம்முறை காணப்படுகிறது. இதனை குளிப்பாட்டி விடுதல் என்றும் அழைப்பர்.
தலைக்கூத்தல் சடங்கு செய்யும் முன்பு குடும்பத்துள்ள முக்கியமான நபர்கள் (பெரும்பாலும் இரவில்) ஒன்றுகூடுவார்கள். அவர்கள் அனைவரிடமும் கருத்து கேட்கப்படும், வயதான பெற்றோர் என்றால் மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்களிடம் சம்மதம் பெறுவார்கள். ஒருமித்த கருத்தை எட்டி தலைக்கூத்தலுக்கு சம்மதம் என்றால் மட்டுமே இந்த சடங்கு நடைபெறும்.
குடும்பத்துக்கு பாரமாகக் கருதப்படும் முதியவர்கள் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டப்படுவர். பின்பு நாள் முழுவதும் அவர்களுக்கு அதிக அளவில் இளநீர் குடிக்கத் தரப்படும், அப்போது எதிர்ப்பு சக்தி குறைவாகக் கொண்ட முதியவர்களுக்கு, இதனால் கடுமையான காய்ச்சல், வலிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு ஓரிரு நாட்களில் இறப்பு ஏற்படும்.
இச்செயல் இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பானது. சில நேரங்களில் தலைக்கு ஊத்துவதற்கு பதிலாக குளிர்ந்த பால் தருவது, நஞ்சு ஊசி போடுவது போன்ற செயல்களின் மூலம் முதியவர்கள் கொலை செய்யப்படுவர். பெரும்பாலும் முதியவர்களின் உறவினர்களின் அனுமதியோடு அல்லது உறவினர்களாலேயே இக்கொலைகள் நடத்தப்படுகின்றன.
2010 ஆம் ஆண்டு தலைக்கு ஊத்தலில் இருந்து தப்பித்த ஒரு 80 வயது முதியவர் தனது உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தார். இந்த சம்பவம் மாவட்ட நிருவாகம் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததால், இந்த முறை பற்றி பரவலாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிகழ்வுகளைத் தடுக்க மாவட்ட நிருவாகம் நடவடிக்கைகள் எடுத்தது.[1][2][3][4]
Seamless Wikipedia browsing. On steroids.