Remove ads
From Wikipedia, the free encyclopedia
டிராபிக் ராமசாமி (Traffic Ramaswamy, ஏப்ரல் 1, 1934 – 4 மே 2021) என அழைக்கப்பட்ட கே. ஆர். ராமசாமி ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச் சேவகர் ஆவார். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.[1] பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்கிற நடைமுறையைக் கடைப்பிடித்தவர்.[2]
இவரது முறையான கல்வி பன்னிரெண்டாம் வகுப்புடன் முடிந்தது. பின்னர் பிரித்தானிய இன்ஸ்ட்டிட்யூட், மும்பை கல்வி நிறுவனத்தில் அஞ்சல்வழி மூலம் துணித்துறையில் AMIE பட்டம் பெற்றார்.[3] ஊர்க்காவல் படையிலும் முன்பு பணியாற்றியுள்ளார்.
ஆரம்பத்தில் ராமசாமி தானே முன்வந்து சென்னை, பாரி முனையின் முன்னால் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்துவதில் உதவி செய்தார். ஆகவே காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அது முதல் ”டிராஃபிக் ராமசாமி” என்று அழைக்கப்படுகிறார். [சான்று தேவை] தமிழக சமூக ஆர்வலர்களின் முன்னோடி என்று போற்றப்படுபவர்.
டிராபிக் ராமசாமி ஏராளமான பொதுநலவழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். 2002-இல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் இவரே. சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்களை செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது. சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார். இது இன்று தமிழகம் முழுவதும் பரவலாக அமல் செய்யப்படுகிறது. அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருந்தார் ராமசாமி.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2015 ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2015 ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வேட்பாளராக தனித்து நின்றார். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளே போட்டியில் இறங்கவில்லை.[4]
2021 மார்ச் மாதம் இறுதி வாரத்தில், கொரோனா வைரசுத் தொற்றால் பாதிக்கப்பட்ட இராமசாமி, சென்னை இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், எளிதாக மூச்சு விட செயற்கைக் சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இந்நிலையில் 4 மே 2021 அன்று அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.[7][8] பிறகும் உடல் நிலை தேறாத நிலையில் டிராபிக் இராமசாமி 4 மே 2021 அன்று மாலை இயற்கை எய்தினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.