From Wikipedia, the free encyclopedia
ஜன்னிய இராகங்கள் என்பது கருநாடக இசையில் மேளகர்த்தா இராகங்கள் என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இவை பிறந்த இராகம் அல்லது சேய் இராகம் என்றும் அழைக்கப்படுகின்றன. பண்டைத் தமிழிசையில் இதற்கு திறம் என்றும் பெயர்.[1][2]
ஜன்னிய இராகங்கள் கணக்கில் அடங்காதவை. இவற்றை 5 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன:
ஆரோகணமும் அவரோகணமும் சம்பூர்ணமாக உள்ள ஜன்னிய இராகம், ஜன்னிய சம்பூர்ண இராகம் ஆகும். உதாரணம் : பைரவி ஆரோகணம் : ஸ ரி க ம ப த நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
ஜன்னிய இராகங்களில் ஆரோகணத்திலாவது அல்லது அவரோகணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது ஒரு ஸ்வரம் அல்லது இரண்டு ஸ்வரங்கள் விலக்கப்பட்டிருக்கும். அதுவே வர்ஜ இராகம் ஆகும். இவ்வாறு விலக்கப்பட்ட ஸ்வரங்கள், வர்ஜ ஸ்வரங்கள் எனப்படும்.
ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஒரு ஸ்வரம் வர்ஜமாக இருக்கும் போது (அதாவது ஆறு ஸ்வரங்களைக் கொண்ட ஆரோகண அவரோகணம் உள்ள இராகம்) ஷாடவ இராகம் எனப்படும். உதாரணம் : சிறீரஞ்சனி ஆரோகணம் : ஸ ரி க ம த நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ம க ரி ஸ
ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இரு ஸ்வரங்கள் வர்ஜமாக இருக்கும் போது ஔடவ இராகம் எனப்படும். உதாரணம் : மோகனம் ஆரோகணம் : ஸ ரி க ப த ஸ் அவரோகணம் : ஸ் த ப க ரி ஸ
அபூர்வமாக மூன்று ஸ்வரங்கள் வர்ஜமாக இருக்கும் போது ஸ்வராந்தர இராகம் எனப்படும். உதாரணம் : மகதி ஆரோகணம் : ஸ க ப நி ஸ் அவரோகணம் : ஸ் நி ப க ஸ
பண்டைத் தமிழிசையில் ஷாடவ இராகம் பண்டியம் என்றும், ஔடவ இராகம் திறம் என்றும் ஸ்வராந்தர இராகம் திரத்திறம் என்றும் அழைக்கப்படும்.
சம்பூர்ண, ஷாடவ, ஔடவ கலப்பினால் எட்டு வகையான வர்ஜ இராகங்கள் உண்டாகின்றன.
ஜன்ய இராகம் | இராகம் | ஆரோகணம் | அவரோகணம் |
---|---|---|---|
ஷாடவ ஷாடவம் | சிறீரஞ்சனி | ஸ ரி க ம த நி ஸ் | ஸ் நி த ம க ரி ஸ் |
ஔடவ ஔடவம் | மோகனம் | ஸ ரி க ப த ஸ் | ஸ் த ப க ரி ஸ |
ஷாடவ ஔடவம் | நாட்டைக்குறிஞ்சி | ஸ ரி க ம த நி ஸ் | ஸ் நி த ம க ஸ |
ஔடவ ஷாடவம் | மலஹரி | ஸ ரி ம ப த ஸ் | ஸ் த ப ம க ரி ஸ |
ஷாடவ சம்பூர்ணம் | காம்போஜி | ஸ ரி க ம ப த ஸ் | ஸ் நி த ப ம கரி ஸ |
சம்பூர்ண ஷாடவம் | நீலாம்பரி | ஸ ரி க ம ப த நி ஸ் | ஸ் நி ப ம க ரி ஸ |
ஔடவ சம்பூர்ணம் | பிலகரி | ஸ ரி க ப த ஸ் | ஸ் நி த ப ம க ரி ஸ |
சம்பூர்ண ஔடவம் | சாரமதி | ஸ ரி க ம ப த நி ஸ் | ஸ் நி த ம க ஸ |
ஒரு ஜன்ய இராகத்தின் ஆரோகணத்தில் அல்லது அவரோகணத்தில் அல்லது இரண்டிலும் சில ஸ்வரங்கள் ஒழுங்கான வரிசையில் இல்லாமல் முன்னும் பின்னுமாக செல்லுமானால் அந்த இராகம் வக்ர இராகம் எனப்படும். வக்ர இராகங்கள் மூன்று வகைப்படும்.
1. ஆரோகணம் மட்டும் வக்ரமாக உள்ளமை. உதாரணம் : ஆனந்தபைரவி ஆரோகணம் : ஸ க ரி க ம ப த ப ஸ் அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
2. அவரோகணம் மட்டும் வக்ரமாக உள்ளமை. உதாரணம் : சிறீராகம் ஆரோகணம் : ஸ ரி ம ப நி ஸ் அவரோகணம் : ஸ் நி ப த நி ப ம ரி க ரி ஸ
3. ஆரோகணமும் அவரோகணமும் வக்ரமாக உள்ளவை. (உபய வக்ர இராகங்கள்) உதாரணம் : ரீதிகௌளை ஆரோகணம் : ஸ க ரி க ம நி த ம நி நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ம க ம ப ம க ரி ஸ
தாய் இராகத்திற்கு உரிய ஸ்வர வகைகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் இராகம் உபாங்க இராகம் எனப்படும். இவை வர்ஜமாகவோ அல்ல்து வக்ரமாகவோ அமையலாம். உதாரணம் : ஹம்சத்வனி ஆரோகணம் : ஸ ரி க ப நி ஸ் அவரோகணம் : ஸ் நி ப க ரி ஸ
தாய் இராகத்தைச் சேர்ந்த ஸ்வர வகைகளைத் தவிர வேறு ஸ்வரஸ்தானங்களையும் (அன்னிய ஸ்வரங்களை) எடுத்துக்கொள்ளும் இராகம் பாஷாங்க இராகம் எனப்படும். சில பாஷாங்க இராகங்களில் ஆரோகண அவரோகணத்திலேயே அன்னிய ஸ்வரம் இடம் பெறும். உதாரணம் : பைரவி ஆரோகணம் : ஸ ரி க ம ப த* நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ இது 20 வது மேளமாகிய நடபைரவியின் ஜன்யமாகும்.
வேறு சில பாஷாங்க இராகங்களில் ஆரோகண அவரோகணத்தில் அன்னிய ஸ்வரம் இடம் பெறாமல் சஞ்சாரத்தில் மட்டும் வரும். உ+ம் : காம்போஜி பிரயோகம் : ஸ் நி ப த ஸா
பாஷாங்க இராகம் மேலும் மூன்று வகைப்படும். அவையாவன :
1. ஏகான்ய ஸ்வர பாஷாங்க இராகம் - இது ஒரு ஸ்வரத்தை உடைய இராகமாகும். உ+ம் : முகாரி, பைரவி, காம்போஜி, பிலஹரி
2. த்வி அன்னிய ஸ்வர பாஷாங்க இராகம் - இது இரண்டு ஸ்வரங்களை உடைய இராகமாகும். உ+ம் : புன்னாகவராளி, அடாணா
3. த்ரி அன்னிய ஸ்வர பாஷாங்க இராகம் - இது மூன்று ஸ்வரங்களை உடைய இராகமாகும். உ+ம் : ஆனந்தபைரவி, ஹிந்துஸ்தான் காபி, ஹிந்துஸ்தான் பெஹாக்
Seamless Wikipedia browsing. On steroids.