Remove ads
From Wikipedia, the free encyclopedia
சோசியா வெட்ச்வூட் (Josiah Wedgwood - 12 சூலை 1730 – 3 சனவரி 1795) என்பவர் ஒரு ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர் ஆவார். மட்பாண்ட உற்பத்தியை தொழில்மயப்படுத்தியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவர் டார்வின்-வெட்ச்வூட் குடும்பத்தைச் சேர்ந்தவர். புகழ் பெற்ற அறிவியலாளரான சார்லசு டார்வின் இவரது பேரன் ஆவார்.
சோசியா வெட்ச்வூட் | |
---|---|
பிறப்பு | 12 சூலை 1730 |
இறப்பு | 3 சனவரி 1795 (அகவை 64) Etruria |
கல்லறை | ஸ்டாப்பிபோர்டஷிர் |
பணி | தொழில் முனைவோர் |
வாழ்க்கைத் துணை/கள் | Sarah Wedgwood |
குழந்தைகள் | Josiah Wedgwood, Thomas Wedgwood, John Wedgwood, Susannah Wedgwood, Sarah Wedgwood, Richard Wedgwood, Catherine Wedgwood, Mary Ann Wedgwood, Paul Foley |
குடும்பம் | John Wedgwood, Thomas Wedgwood IV, Margaret Wedgwood, Catherine Wedgwood |
இவர் இசுடோக்-ஆன்-டிரெண்ட் (Stoke-on-Trent) என்னும் நகரிலுள்ள பர்சிலெம் என்னும் இடத்தில், தாமசு வெட்ச்வூட், மேரி வெட்ச்வூட் ஆகியோருக்குப் பிறந்த 12 பிள்ளைகளுள் கடைசிப் பிள்ளையாகப் பிறந்தார். சிறுவயதில் இவருக்கு அம்மை நோய் ஏற்பட்டது. இதிலிருந்து இவர் தப்பினாலும், இவரது முழங்கால் நிரந்தரமாகவே பலமற்றதாக ஆனது. பின்னர் இவர் தனது மூத்த தமையனிடம் மட்பாண்டத் தொழில் பயிலுனராகச் சேர்ந்தபோதும், மட்பாண்டம் வனைவதற்கான சில்லைக் காலால் சுழற்றும் வலிமை இவருக்கு இருக்கவில்லை. இதனால், இளம் வயதிலிருந்தே மட்பாண்டங்களைச் செய்வதைவிட, அவற்றை வடிவமைப்பதிலேயே கவனம் செலுத்தலானார்.
இவரது 20 வயதுக்குப் பின்னர் சிலகாலம் அக்காலத்தில் புகழ்பெற்ற ஆங்கில மட்பாண்ட உற்பத்தியாளரான தாமசு வீல்டன் என்பவரிடம் பணி புரிந்தார். இவர் இக்காலத்தில் பலவகையான மட்பாண்டத் தொழில் நுணுக்கங்கள் தொடர்பில் சோதனைகளைச் செய்து வந்தார். இச் சோதனைகளில் ஈர்க்கப்பட்ட வெட்ச்வூட், தனது சொந்த நகரில் இருந்த ஐவி வர்க்சு (Ivy Works) என்னும் மட்பாண்ட உற்பத்தித் தொழிலகத்தைக் குத்தகைக்கு எடுத்தார். அடுத்த பத்தாண்டுகளில், இவரது சோதனைகளின் மூலம், மந்தமான கைப்பணித் தொழிலகத்தை முதல் உண்மையான மட்பாண்டத் தொழிற்சாலையாக மாற்றினார். இதற்கு, இவரது மனைவி மூலம் கிடைத்த பெரும் தொகைப் பணமும் உதவியது.
வெட்ச்வூட் தனது தூரத்து உறவினரான சாரா என்பவரை 1764 ஆம் ஆண்டு சனவரியில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர். இவர்கள்:
இவர்களுள் மூத்தவரான சுசன்னா வெட்ச்வூட், ராபர்ட் டார்வின் என்பவரை மணந்து கொண்டார். இவர்களே புகழ் பெற்ற ஆங்கிலேய அறிவியலாளர் சார்லசு டார்வினின் பெற்றோர் ஆவர்.
வெட்ச்வூட்டின் வேலைகள் உயர்ந்த தரம் கொண்டவை. தனது தொழிற்சாலையில் தன்னுடைய தரத்துக்குக் குறைவான மட்பாண்டங்களைக் கண்டால் அதனைதனது கைத்தடியால் உடைத்துவிட்டு, "இது சோசியா வெட்ச்வூட்டுக்கு ஒத்துவராது" என்பாராம். இவர் தனது காலத்து அறிவியல் வளர்ச்சியின்பால் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதுவே அவரது உற்பத்திப்பொருட்களின் தரத்தை உயர்த்துவதற்கான அவரது அணுகுமுறைக்கும், வழிமுறைகளுக்குமான அடிப்படையாக விளங்கியது. இவரது தனித்துவமான மினுக்கப் பூச்சுகள் பிற மட்பாண்டங்களில் இருந்து இவரது உற்பத்திகளை வேறுபடுத்திக் காட்டின.
1763 ஆம் ஆண்டளவில் உயர்நிலையில் இருந்த பிரித்தானியப் பிரபுத்துவக் குடும்பங்கள் இவரது உற்பத்திப் பொருட்களை வாங்கலாயினர். சார்லட் அரசியும் தனக்காக இவரது தொழிற்சாலையிலிருந்து மட்பாண்டங்களைச் செய்வித்துப் பெற்றுக்கொண்டார். அவ்வரசி வாங்கிய குறிப்பிட்ட மட்பாண்டங்களுக்கு "குயீன்ஸ் வேர்" (Queen's Ware) எனப்பெயரிடுவதற்கு அரசியை இணங்க வைத்ததுடன், இந்த அரச குடும்பத் தொடர்பைத் தனது விளம்பரத்துக்கும் பயன்படுத்திக் கொண்டார். 1774 ஆம் ஆண்டில் உருசியப் பேரரசி கத்தரீன் "கிரீன் ஃபுரொக் சர்வீசு" மட்பாண்டங்களை இவரிடமிருந்து செய்வித்துப் பெற்றுக்கொண்டார். இது இன்றும் ஏர்மிட்டேச் அருங்காட்சியகத்தில் உள்ளது.[1] இவர் கத்தரீனுக்காக 1770ல் செய்து கொடுத்த இன்னொரு மட்பாண்டத் தொகுதி "அசுக் சர்வீசு" (Husk Service) "பீட்டர்கோஃப்" எனப்படும் பீட்டரின் மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஒரு வளர்ந்துவரும் தொழிலதிபராக, டிரென்ட் ஆறு, மேர்சி ஆறு என்பவற்றுக்கிடையே வெட்டப்பட்ட டிரென்ட் மேர்சி கால்வாய் திட்டத்துக்கு ஆதரவளித்தார். இக் காலத்திலேயே எராசுமசு டார்வினின் நட்பு இவருக்குக் கிடைத்தது. சில ஆண்டுகளிலேயே வளர்ந்துகொண்டிருந்த அவரது தொழிலுக்கு "ஐவி வர்க்சு" போதுமானதாக இல்லாததால், "எட்ரூரியா வர்க்சு" (Etruria Works) என்னும் தொழிற்சாலையைப் புதிதாக நிறுவினார். இது பின்னர் 180 ஆண்டுகள் நிலைத்திருந்தது. பண்டைக்கால எட்ரசுக்கக் காலத்திலிருந்து இத்தாலியின் எட்ரூரியா மாவட்டத்தில் கறுப்புப் போசலின் அகழப்பட்டு வந்தது. இந்த எட்ரூரியாவின் பெயரையே தனது புதிய தொழிற்சாலைக்கு அவர் இட்டார். இவ்வகைப் போசலினால் கவரப்பட்ட அவர் இதைப் போன்றே "கருப்பு பேசல்ட்" எனப்பட்ட போசலினை உருவாக்கினார். இதுவே வணிக அடிப்படையில் அவருக்கு முதல் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொடுத்தது.
புதிய தொழிற்சாலையைத் தொடங்கி நீண்ட காலம் ஆகுமுன்பே அம்மையால் பாதிக்கப்பட்ட அவரது முழங்கால் தொல்லை கொடுக்கத் தொடங்கியது. இதனால் இவரது வலது காலைத் துண்டிக்க வேண்டியதாயிற்று. 1780 ஆம் ஆண்டில் இவரது நீண்டகால வணிகக் கூட்டாளியான தாமசு பென்ட்லியும் காலமானார். இதனால், வெட்ச்வூட் தனது தொழிலை நடத்துவதில் தனது நண்பரான எராசுமசு டார்வினின் உதவியை நாடினார். இதனால் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட நெருக்கமான தொடர்பினால், சோசியா வெட்ச்வூட்டின் மூத்த மகளை எராசுமசின் மகன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்தோரில் ஒருவராகிய சார்லசு டார்வினும் வெட்ச்வூட் குடும்பத்திலேயே சோசியாவின் ஒரு பேத்தியான எம்மா என்பவரைத் திருமணம் செய்தார். இவ்வாறு தமது முன்னோரிடமிருந்து இரு வழிகளிலும் கிடைத்த செல்வமே டார்வின் தனது கூர்ப்புக் கொள்கையை (படிமலர்ச்சிக் கொள்கை) உருவாக்குவதற்கான வசதியைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகின்றது.
தனது வாழ்க்கையின் பிற்காலத்தில், கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த நீலம், வெள்ளை நிறம் கலந்த போட்லாந்துப் பூச்சாடி போன்ற சாடிகளை உருவாகுவதில் தீவிரமாக ஈடுபட்டார். 1789 ஆம் ஆண்டில் இவ்வாறான் சாடிகளை உருவாக்குவதில் வெற்றியும் கண்டார்.
தனது நிறுவனத்தைத் தனது மகனிடம் ஒப்படைத்த பின்னர், 1795 ஆம் ஆண்டில் அவர் தனது வீட்டில் காலமானார். இவரது உடல் இசுடோக்-ஆன்-டிரெண்ட் கோவில்பற்றுத் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் சலவைக் கல்லால் ஆன நினைவுக் கல்வெட்டு ஒன்றும் அங்கே வைக்கப்பட்டது. சோசியா வெட்ச்வூட் நான்கு தலைமுறை மட்பாண்ட உற்பத்தியாளர் குடும்பத்தில் பிறந்தார். அவருக்குப் பின்னரும் அவரது குடும்பத்தினர் மேலும் ஐந்து தலைமுறைகளுக்கு இத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். வெட்ச்வூட்சு கம்பனி (Wedgwood's company) இன்றும் மட்பாண்டத் தொழிலில் புகழ் பெற்ற பெயராக உள்ளது.
இவர் அடிமைமுறை ஒழிப்புக்காகவும் பாடுபட்டார். அடிமை வணிகத்தை ஒழிப்பதற்கான அமைப்பின் சின்னம் பொறிக்கப்பட்ட பதக்கங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து வழங்கினார். இதன் மூலம் இச்சின்னம் புகழ் பெறுவதற்கு வழிவகுத்தார். நவீன சந்தைப்படுத்தல் முறைகள் பலவற்றை முதலில் அறிமுகப் படுத்தியவராகவும் இவர் போற்றப்படுகிறார். நேரடிக் கடிதம், பணம் திரும்பத்தரும் உத்தரவாதம், பயணிக்கும் வணிக முகவர், இலவச விநியோகம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், படங்களோடு கூடிய விபரப்பட்டியல் என்பன இவர் கண்டு பிடித்த சந்தைப்படுத்தல் முறைகளாகும்[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.