செண்பகப் பெருமாள் (சிங்களம்: சப்புமல் குமாரயா), "ஆறாம் புவனேகபாகு" என்ற பெயரில் கோட்டை அரசை ஆண்டவர்.
பிறப்பு
ஆறாம் பராக்கிரமபாகு இலங்கையின் கோட்டை இராச்சியத்தை ஆண்ட காலத்தில், உடல் வலிவும், போர்த்திறனும் கொண்ட வீரன், குருகுல மாணிக்கத் தலைவன் என்கிற பராக்கிரமபாகுவின் தளபதி.[1]
இவன் மீது கொண்ட நன்மதிப்பு காரணமாக அரசகுலப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். இவனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவனே சப்புமால் குமாரயா என்ற சிங்களப் பெயரால் வழங்கப்பட்ட செண்பகப் பெருமாள் ஆவான். ஒரு போரில் குருகுல மாணிக்கத் தலைவன் இறந்துவிட்டார். இதன் காரணமாக ஆறாவது பராக்கிரமபாகு, குருகுல மாணிக்கத் தலைவனின் மகன், செண்பகப் பெருமாள், தத்தெடுத்தார்.[2]
இவனே பிற்காலத்தில் சிறி சங்கபோதி புவனேகபாகு என்ற பெயரில் கோட்டே அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.
இளவயது
ஆறாம் பரக்கிரமபாகுவுக்கு ஆண் பிள்ளைகள் இல்லாதிருந்ததால் செண்பகப் பெருமாளும், அவனது தம்பியும் அரசனுடைய வளர்ப்புப் பிள்ளைகளாகவே வளர்ந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இவர்களும் அரச குலத்தாருக்குரிய பலவிதமான கலைகளையும் கற்றுத் தேறியிருந்தனர். எனினும் பிற்காலத்தில் பராக்கிரமபாகுவின் மகளுக்கு ஆண் பிள்ளையொன்று பிறந்தபோது, அப்பிள்ளையின்அரசுரிமைக்கு செண்பகப் பெருமாள் தடையாக இருக்கக்கூடும் எனக் கருதப்பட்டதால் அவனை கோட்டே அரசிலிருந்து வெளியேற்ற அரசன் முடிவு செய்ததாக வரலாற்றாய்வாளர் சிலர் நம்புகிறார்கள்.
சப்புமால் குமாரயாவின் யாழ்ப்பாணப் படையெடுப்புகள்
செண்பகப் பெருமாள் வெளியேற்றும் பணியைத் தந்திரமாக முடிக்க எண்ணி, யாழ்ப்பாண அரசின் கீழ் அமைந்திருந்த வன்னிச் சிற்றரசர்கள் மீது படையெடுக்குமாறு செண்பகப் பெருமாளை அரசன் பணித்ததாகக் கூறப்படுகின்றது. வீரனான செண்பகப் பெருமாள் வன்னியை வென்று மீண்டான். தொடர்ந்து யாழ்ப்பாண அரசனையும் வெல்லுமாறு அவன் பணிக்கப்பட, யாழ்ப்பாணத்துக்குப் படை நடத்திச் சென்ற அவன், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்டுகொண்டிருந்த கனகசூரிய சிங்கையாரியனை வென்று கோட்டே திரும்பினான். பராக்கிரமபாகு, யாழ்ப்பாணத்தை ஆளும்படி சப்புமால் குமாரயாவை அனுப்பிவைத்தான்.
யாழ்ப்பாணத்தில் செண்பகப் பெருமாள்
1450 ஆம் ஆண்டில் செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தை ஆளத் தொடங்கினான். நல்லூரில் தலைநகரைக் கட்டியவன் இவனே என்று சிலர் கருதுகிறார்கள். சைவ சமயத்தைச் சேர்ந்தவனான இவனே, நல்லூர்க் கந்தன் ஆலயத்தை அமைத்தவன் என்றும் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இவனது ஆட்சி 17 ஆண்டு காலம் நீடித்தது.
கோட்டேயைக் கைப்பற்றல்
1467ல், தனது பேரனான ஜெயவீரன் என்பவனுக்குக் கோட்டை அரசைக் கொடுத்துவிட்டு ஆறாம் பராக்கிரமபாகு காலமானான். இதனையறிந்த செண்பகப் பெருமாள் கோட்டைக்குச் சென்று ஜெயவீரனைத் தோற்கடித்து சிறி சங்கபோதி புவனேகபாகு என்னும் அரியணைப் பெயருடன் கோட்டை அரசனானான்.
கனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த கோட்டை இராசதானியின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த சண்பகப் பெருமாள் என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் தமிழகத்தின் திருக்கோவிலூரில் தஞ்சம் அடைந்தார்.
செண்பகப் பெருமாளின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 17 வருடங்கள் நீடித்தது. 1467 இல் கோட்டை அரசன் இறக்கவே, அந்நாட்டு அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டை சென்றான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டு 1478 வரை 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதாக சிலரும், செண்பகப் பெருமாளின் சகோதரி உலகுடைய தேவியை மணந்த நல்லூரத்தான் ஜெகராஜ சேகரன் யாழ்ப்பாண அரியணையில் அமர்ந்து ஆளத் தொடங்கினார் எனவும் நம்பப் படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.