Remove ads
From Wikipedia, the free encyclopedia
சில்லையூர் செல்வராசன் (25 சனவரி 1933 - 14 அக்டோபர் 1995) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலான பங்களிப்புச் செய்தவர். தான் பிறந்த சில்லாலை ஊரின் பெயரை முதல் நிலைப்படுத்தி தனது பெயரை சில்லையூர் செல்வராசன் எனச் சூட்டிக்கொண்டார்.
சில்லையூர் செல்வராசன் | |
---|---|
பிறப்பு | 25 சனவரி 1933 |
இறப்பு | அக்டோபர் 14, 1995 62) | (அகவை
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | கவிஞர், எழுத்தாளர், நடிகர் |
வாழ்க்கைத் துணை | ஜெரல்டின் ஜெசி,[1] கமலினி |
பிள்ளைகள் | திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினி (ஜெரல்டின் ஜெசியுடன்), அதிசயன் (கமலினியுடன்) |
தான்தோன்றிக் கவிராயர் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். அங்கதப் பாணிக் கவிதைகள் எழுதிய இவரது கவிதைகள் கவியரங்குகளில் பெரு வரவேற்பு பெற்றன. விளம்பரத்தைக் கவிதை இலக்கியமாக ஆக்கிய பெருமையும் அவரைச் சாரும். 'உப்பு' என்ற கவிதை, பென்குவின் பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பில் இடம் பெற்றது. சில்லையூராரின் கவித்திறனுக்கு “ஞாயிறென வந்தாள்” என்ற பாடல் பெரும் புகழ் சேர்க்கிறது. கிழமைகளையும், மாதங்களையும் வைத்து அழகாக வடித்த பாடலாகும். அக்கவிதையின் உயிர்த்துடிப்பு சில்லையூரின் வாயால் வரும்போது இன்னும் மெருகு பெறுகிறது. (சில்லையூரின் கவிதைச் சிமிழ்)
20 ஆம் நூற்றாண்டின் பெரும் கவிஞராகத் திகழ்ந்த சில்லையூர் செல்வராசன் தணியாத தாகம் என்ற வானொலி நாடகத்தை இலங்கை வானொலியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இயக்கிச் சாதனை படைத்தார். ஏராளமான நேயர்கள் வாரம் தோறும் கேட்டு மகிழ்ந்தார்கள்.
கே. எஸ். பாலச்சந்திரன், விஜயாள் பீற்றர், கமலினி செல்வராசன், கே. மார்க்கண்டன், செல்வநாயகி தியாகராசா, வாசுதேவன், ஷாமினி ஜெயசிங்கம், எஸ். கே. தர்மலிங்கம், எஸ். ஜேசுரட்னம் , பி. என். ஆர்.அமிர்தவாசகம், எஸ். எழில்வேந்தன் போன்றோர் இத்தொடரில் குரல் தந்து / குரலொலிக் கலைஞர்களாகப் புகழ் பெற்றார்கள்.
சேக்சுபியர் கவிதைகளை தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். சூலியஸ் சீசர் நாடகத்திலிருந்து இவர் மொழிபெயர்த்த பகுதி சிறப்பானதாகும். 1959ல் பம்பாயில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்குபற்றியவர். 1987 ஆம் ஆண்டு கோபல் நகரில் (பாரத்பவன்) நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்குபற்றிய ஒரேயொரு தமிழன் இவராவார்.
Ordinary Magic (1993), The Further Adventures of Tennessee Buck (1988) போன்ற ஆங்கிலப்படங்களிலும், "கோமாளிகள்" என்ற இலங்கைப்படத்திலும் நடித்துள்ளார். மறைந்த ஈழத்து எழுத்தாளர் அ. ந. கந்தசாமி எழுதிய "மதமாற்றம்" என்ற நாடகத்திலே முக்கிய பாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்றவர். பூந்தான் சோசப் அண்ணவியாரின் இயக்கத்தில் நாட்டுக்கூத்திலும் நடித்த பெருமைக்குரியவர்
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து இலக்கியச் செயற்பாடுகளில் முன்னின்றார். 1950 இல் பொதுவுடைமைவாதியாக காலடி வைத்த சில்லையூர் செல்வராசன் அதைப் பற்றுறுதியுடன் கடைசி மூச்சுவரை பற்றிக் கொண்டார். பண்டித வர்க்கத்தினரால் இழிசனர் வழக்கு என்று கொச்சைப்படுத்தியவர்களுக்கு எதிராக தன் கவித் திறமையால் சாடி கவிதைகளைப் படைத்தார். இழிசனர் மரபு வாதத்தில் ஊறிநின்று ஓரங்க நாடகத்தைச் செய்து காட்டி அவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தார்.
ஆறுமுக நாவலரைப் பற்றி மேல்தட்டு வர்க்கத்தினர் கொண்டிருந்த கொள்கைகளுக்கு மாறாக, நாவலரின் மனிதநேயத்தை எடுத்தியம்பி கவியரங்குகளில் அவரின் தனித்துவத்தை நிலைநாட்டி வந்தார். பண்டித பரம்பரையினரைச் சாடி புதுக்கவிதைப் பரம்பரையைச் செல்வராசன் முன்வைத்தார்.
யாழ்ப்பாணச் சாதி முறைக்கு எதிராக புதிய வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க அங்கத மொழியில் செல்வராஜன் சங்கநாதத்துடன் கவிதையால் எடுத்தியம்பியுள்ளார். சமுதாய அடக்குமுறைக்கு, அநியாயங்களுக்கு, மூடக் கொள்கைகளுக்கு எதிராக அவற்றை ஒழித்துக்கட்ட கவிதையால் சாடினார். அங்கதக் கவிதைகள் புதுமைக் கருத்தை இலக்கியத்தில் புகுத்தின. தலைவர்கள் வாழ்க மாதோ என்ற அங்கதக் கவிதை மூலம் அரசியல் தலைவர்களை சில்லையூரான் சாடினார்.
பரந்த கலைப் பரப்பை கொண்டிருந்த செல்வராசன் பத்திரிகைத் துறையிலும் தடம் பதித்திருந்தார். சுதந்திரன், அடுத்து வீரகேசரி ஞாயிறு பதிப்பில் சிலகாலம் பொறுப்பாசிரியராக இருந்து இலங்கை எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.