சிறுதெய்வ வழிபாடு

From Wikipedia, the free encyclopedia

சிறுதெய்வ வழிபாடு என்பது நாட்டார் தெய்வங்களை வழிபடும் முறையாகும். இந்த சிறுதெய்வ வழிபாட்டில் வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனதெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் வெகுசனத் தெய்வ வழிபாடு எனப் பல வகைகள் காணப்படுகின்றன. இந்த தெய்வ வழிபாட்டு முறையில் பொதுவான இலக்கணங்களோ, வரைமுறைகளோ வகுக்கப்படவில்லை. அவை காலம்காலமாக முன்னோர்களால் செய்யப்படுகின்றன சடங்குகளை அடிப்படையாக வைத்து பின்பற்றப்படுகின்றன. இந்த தெய்வங்களின் வழிபாடானது நாட்டார் மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும், அவர்கள் முன்னோர்கள் கற்றுத் தந்த முறைப்படியும் நடக்கிறது. [1]

சிறுதெய்வ வழிபாடு

உலகின் தொன்மையான வழிபாடு இயற்கை வழிபாடாகவும், அதற்கு அடுத்தாக சிறுதெய்வ வழிபாடு இருப்பதாக முனைவர் து. தியாகராஜன் கூறுகிறார். [2]

சிறு தெய்வ வழிபாடு திட்டவட்டமான வரையறை இல்லாதது என்றும், நாட்டுப்புறத் தெய்வ வழிபாடெல்லாம் முன்னோர் வழிபட்ட வழியே நடைபெறுகின்றது என்றும் முனைவர் அ.ஜம்புலிங்கம் கூறுகிறார்.

வழிபாட்டு முறைகள்

இந்த சிறுதெய்வ வழிபாட்டில் வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனத்தெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் வெகுசனத் தெய்வ வழிபாடு எனப் பல வகைகள் காணப்படுகின்றன.

வீட்டுத்தெய்வ வழிபாடு

Thumb

நாட்டுப்புற மக்கள் தங்கள் வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவர்களையோ, இல்லை வீட்டில் இருந்த மூதாதையர்களையோ, விபத்தினால் இறந்த கன்னிப் பெண்களையோ வணங்கும் வழக்கத்தினைக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு வணங்கும் முறை வீட்டுத்தெய்வ வழிபாட்டு முறையாகும்.

இல்லுறைத் தெய்வம் என சங்க இலக்கியத்தில் காணலாம்.

குல தெய்வ வழிபாடு

நடுகல் வழிபாடே காலப்போக்கில் குலதெய்வம் வழிபாடாக மாறியது எனலாம். 'குலம்’ என்பது ஒரு குறிப்பிட்ட மூதாதையரின் மரபில் தோன்றியதன் வாயிலாக ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள குழுஅமைப்பு ஆகும். இரத்த உறவுடைய பங்காளிகள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படுவர். தன் குலத்தின் முன்னோர்களில் சிறந்து விளங்கியவர்களையும்,குல மக்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்களையும் தெய்வமாக பாவித்து வணங்கி வழிப்பட்டனர். இவ்வழிபாடு ஒவ்வொரு குலத்திற்கும் மாறுபடும்.

இனத்தெய்வ வழிபாடு

பல்வேறு குழுவினைச் சார்ந்தவர்கள் ஒர் இனமாக நின்று வணங்கும் முறைக்கு இனத்தெய்வ வழிபாடு என்று பெயர்.

ஊர்த்தெய்வ வழிபாடு

ஊரில் உள்ள மக்களை காக்கும் தெய்வங்களை வணங்கும் வழக்கத்திற்கு ஊர்த்தெய்வ வழிபாடு என்று பெயர். பெரும்பாலும் காவல் தெய்வங்களே இந்த ஊர்த்தெய்வங்களாக வணங்கப்படுகிறார்கள்.

வெகுஜனத்தெய்வ வழிபாடு

சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் கடந்த தெய்வ வழிபாட்டிற்கு வெகுசனத்தெய்வ வழிபாடு என்று பெயராகும். மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி, சமயபுரம் மாரியம்மன், கோட்டை மாரியம்மன், வீரபாண்டி மாரியம்மன், இராஜ காளியம்மன், வெக்காளியம்மன், அய்யனார், சனீஸ்வரன் போன்ற தெய்வ வழிபாடுகள் முதலில் சிறுதெய்வ வழிபாடாக இருந்து வெகுசனத்தெய்வ வழிபாடாக மாற்றம் கொண்டவையாகும்.

சடங்குகள்

பல்வேறு குலம், இனம், மொழி என்ற பாகுபாடுகள் இருப்பதால் எண்ணில் அடக்காத சடங்குகள் கொண்டதாக சிறுதெய்வ வழிபாடு காணப்படுகிறது. இந்த சிறுதெய்வ வழிபாட்டோடு இந்து சமய சடங்குகள் பல பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக பலியிடுதல், ஆணி செருப்பணிதல், சூரைக் கொடுத்தல், கோழிக் குத்துதல் போன்ற சடங்குகள் சிறுதெய்வ வழிபாட்டிற்கு உரியன. இந்த சடங்குகளை பெருதெய்வ வழிபாட்டில் மக்கள் பின்பற்றுவதில்லை.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.