From Wikipedia, the free encyclopedia
சிரௌத்த சைவம் என்பது, ஆகமங்களை அன்றி, தனியே வேதங்களின் முதன்மைக்கு முன்னுரிமை வழங்கும் சைவப் பிரிவு ஆகும்.[1] இது சிவனே பரம் என ஏற்றுக்கொள்ளும் போதும், வேதங்கள் கூறும் வருணாச்சிரமத்துக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது. பெருமளவு சிரௌத்த சைவர்கள், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
மெய்யியல் ரீதியில் இதனை சிவாத்துவிதம், சிவ விசிட்டாத்துவிதம் என்றெல்லாம் கூறுவதுண்டு. இதற்கும் வைணவ விதப்பொருமைக்கும் ஒற்றுமைகள் அதிகமாக இருக்கும் அதேவேளை, தமிழ் மெய்கண்ட சித்தாந்தத்துடனும் மெய்யியல் நிலைப்பாட்டில் ஓரளவு ஒத்துச் செல்கின்றது. வேத முதன்மையை முன்னிறுத்துவது என்பதே சிவாகமங்களைப் போற்றும் ஏனைய சைவக் கிளைகளுடனான சிரௌத்த சைவத்தின் மிகப் பிரதானமான வேறுபாடு.[2]
சிரௌத்த சைவர்களின் கருத்துப்படி, உலகம் படைக்கப்பட்டது ஈசனின் அலகிலா ஆடலின் ஒரு அங்கமே. இவ்வுலகின் முதற்காரணியாகவும் துணைக்காரணியாகவும் அவனே விளங்குகின்றான். உலகமும் அவன் வடிவே எனினும், அதைத் தன் திருவருளான சக்தியின் மூலமே தோற்றுவிப்பதால், அவன் மாயையால் பாதிக்கப்படாதவன். மோட்சம் அடையப்படவேண்டுமெனின், அதற்கு சிவனருள் இன்றியமையாதது. வீடுபேற்றின் பின், உயிர் ஈசனோடு இரண்டறக்கலக்காது. அது, இயல்பான தன் சிவமாம் தன்மையை அடைந்து பேரின்பத்தில் திளைத்திருக்கும்.[3]
வேதாந்தக் கண்ணோட்டத்தில் முக்கியமான பிரஸ்தானத்திரயம் எனும் மூன்று நூல்களில், பிரம்ம சூத்திரத்துக்கு சைவ சித்தாந்தப் பார்வையில் உரை எழுதிய ஸ்ரீகண்ட சிவாச்சாரியாரும், அப்பைய தீட்சிதரும் சிரௌத்த சித்தாந்திகளால் போற்றப்படுகின்றனர். சிவ பரத்துவத்தைக் கூறும் சுருதிசூக்திமாலை , ஹரிஹரதாரதம்மியம் முதலான நூல்களை எழுதிய ஹரதத்தரும் சிரௌத்தருக்கு முக்கியமான ஆச்சாரியர். அப்பையரால் எழுதப்பட்ட சிவார்க்கமணிதீபிகை எனும் பிரம்மசூத்திர உரை முக்கியமானது. வேதாந்தம் சார்ந்த இந்து மெய்யியல் தளத்தில், சைவத்துக்கு இடமளித்த முக்கியமான வகுப்பு, சிரௌத்த சைவமே ஆகும்.[4]
இலிங்காயதர்கள் போல் இவர்களும் உடலில் இலிங்கத்தைத் தரித்துக் கொள்கின்றார்கள். இவர்கள் கொள்கைப்படி, ஒரு பெண்ணோ நாலாம் வருணத்தவனோ தீட்சை பெறுவதில் அல்லது, இலிங்கம் தரிப்பதில் மறுப்பு இல்லையெனினும், பெண்ணொருத்தி, ஒரு இலிங்கதாரியை மணந்தபின்னரே இலிங்கத்தைத் தாமும் தரிக்கமுடியும்; சூத்திரன் முழுமையாக தாவரவுண்ணி ஆன பின்னரே இலிங்கதாரணம் செய்யவேண்டும் என்பது இவர்தம் கொள்கை. சிரௌத்த சைவத்தை விரும்பி வரும் எவரையும் தாம் கோத்திரம், குலம் கொண்டு தள்ளிவிடுவதில்லை என்றும், அவர்களை சிவ தீட்சையளித்து ஏற்றுக்கொள்வதே வழமை என்றும் இவர்கள் கூறுகின்றனர்.[1] சிரௌத்த சைவன் ஒவ்வொருவனும் நாள்தவறாமல் சிவபூசை செய்தே ஆகவேண்டும். நேரத்தைப் பொறுத்து, ஒரு நாழிகையில் செய்யக்கூடிய "இலகு" பூசையோ, மணிக்கணக்கில் நீளும் "மகா"பூசையோ அவன் செய்யவேண்டும்.
ஏனைய சைவர்கள் போலன்றி, இந்நாட்களில் இவர்கள் மிகச்சிறிய குழுவாகவே உள்ளனர். 1995இல் நிறுவப்பட்ட ""சிவஞானலகரி" எனும் அமைப்பு, சிரௌத்த சித்தாந்தத்தை சமகாலத்தில் வளர்ப்பதில் பெரும் பங்காற்றிவருகின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.