தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
சின்னகுத்தூசி என்று பரவலாக அறியப்பட்ட இரா. தியாகராசன் (ஜூன் 15, 1934 - மே 22, 2011) என்பவர் தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர். இவர் திருவாரூரில் 1934 ல் பிறந்தார்[1]. திராவிட இயக்க முன்னோடியான குருசாமியின் எழுத்துகள் குத்தூசி போலக் குத்துவதால் குத்தூசி குருசாமி என்ற பெயரைப் பெற்றார். அவரை முன்மாதிரியாகக் கொண்டு இவர் கடுமையான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியதால் சின்னகுத்தூசி என்ற பெயரைப் பெற்றார்.
தியாகராசன் தமிழ்நாட்டின், திருவாரூரில் பிராமணக் குடும்பத்தில், இராமநாதன் கமலா இணையருக்கு மகனாக 1936, சூன் 15 அன்று ஒரே மகனாகப் பிறந்தார். இளம் பருவத்தில் திராவிட இயக்க முன்னோடிகளிடம் நட்பு கொண்டிருந்தார். ஆனால் சிறுவயதிலேயே திராவிட இயக்க கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இதனால் பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன் வாழ்வில் பூணூல் அணியவில்லை. குடும்பத்தின் வறுமையால் பள்ளிப்படிப்பை முடித்து பின்னர் படிப்பைத் தொடரமுடியாத நிலையில் இருந்தார். இதன் பின்னர் நண்பர்களிடம் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு திருச்சிராப்பள்ளியில் பெரியாரைச் சந்தித்து அவர் வழியாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இணைந்தார். வறுமையால் புத்தகங்களை வாங்கு முடியாத இவருக்கு மணியம்மையார் தேவைப்பட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். ஆசிரியர் பயிற்சி முடிந்ததும் குன்றக்குடி அடிகளாரின் உயர்நிலைப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தார்.
சிறிது காலம் திருவாரூரிலிருந்து வெளியான மாதவி என்ற கிழமை இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். பின்னர் ஈ. வெ. கி. சம்பத்தின் தமிழ்த் தேசியக் கட்சியின் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான தமிழ்ச் செய்தி கிழமை இதழில், நாளிதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றினார். தமிழ்த் தேசியக் கட்சி காங்கிரசில் இணைந்த பிறகு, நவசக்தியில் தலையங்க ஆசிரியராக பணியாற்றினர். பின்னர் அலை ஓசை, எதிரொலி, நாத்திகம், முரசொலி, நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் பல்வேறு தலைப்புகளில் சின்னகுத்தூசி, கொக்கிரகுளம் சுல்தான் முகமது, தெரிந்தார்கினியன், ஆர். ஓ. மஜாட்டோ, திட்டக்குடி அனீஃப், காமராசர் நகர் ஜான் ஆசிர்வாதம் போன்ற புனைபெயர்களில் அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[2] இவர் எழுத்துப்பணி, பொதுவாழ்க்கைக்காகத் திருமணம் செய்யவில்லை. திமுக தலைவர் மு. கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
சின்னகுத்தூசி 2010 முதல் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சை பெற்று வந்தார். தன் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து கட்டுரைகள் பல எழுதி வந்தார். சின்னகுத்தூசியை 15 ஆண்டுகளாக நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் கவனித்து வந்தார். சின்னகுத்தூசியின் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அவர்தான் மருத்துவமனையில் சேர்த்து முழு சிகிச்சைகளையும் கவனித்தார்.[3]. இந்நிலையில் சின்னகுத்தூசி 22, மே, 2011 அன்று சென்னையில் காலமானார்.
சின்னகுத்தூசியின் மறைவுக்குப் பிறகு சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் இவருடைய பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் ஒரு இலட்சம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. மேலும் மூன்று கன்னுரைகளுக்கு ச் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதுடன் பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பு வழங்கப்படுகிறது. [4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.