இந்தியாவின் பறவை மனிதர் From Wikipedia, the free encyclopedia
சலிம் அலி (சலீம் அலி) (Sálim Ali; நவம்பர் 12, 1896 – சூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் இயற்கையியல் அறிஞரும் ஆவார். சலிம் அலியின் முழுப்பெயர் சலிம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும். இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் புரவலராக விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் இவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.
சலிம் அலி Sálim Ali | |
---|---|
பிறப்பு | கேத்வாடி | 12 நவம்பர் 1896
இறப்பு | சூலை 27, 1987 90) | (அகவை
தேசியம் | இந்தியா |
துறை | பறவையியல் இயற்கையியலாளர் |
பணியிடங்கள் | பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம் |
சலிம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமின்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்தார். பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்தவை என்ற சூழியல் சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) என்ற நூற்தொகுதியும் ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) என்ற தன்வரலாற்று நூலும் சலிம் அலி எழுதிய முக்கிய நூல்களாகும்.
1958ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதினையும் 1976ஆம் ஆண்டு பத்ம விபூசண் விருதினையும் சலிம் அலி பெற்றார். பல பறவையினங்களும் சலிம் அலியின் பழந்தின்னி வெளவாலும் இரு பறவைகள் சரணாலயங்களும் ஒரு நிறுவனமும் இவரது பெயரைத் தாங்கியுள்ளன.
1896ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் நாள் அன்றைய பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி (Khethwadi) என்ற ஊரில் சலிம் அலி பிறந்தார். தன் பள்ளிப் பருவத்திலிருந்தே சலிம் அலி ஒரு வேட்டை பிரியர். பறவைகள் மீது சலிம் அலியின் ஆர்வம் திரும்பியதற்கு, அவரது இளமையில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்ச்சியே காரணம். இளம் வயதில் அலி ஒரு சின்னஞ்சிறு சிட்டுக் குருவியை சுட, அது இறந்து வீழ்ந்தது. இறந்துபோன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார் சலிம் அலி. இதற்கான காரணத்தைத் தன் சிற்றப்பாவிடம் கேட்க, அவரோ அப்போது பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த டபள்யூ. எஸ். மில்லர்ட் (W S Millard) என்பவரிடம் சாலிம் அலியை அறிமுகப்படுத்தினார். மில்லர்டின் உதவியுடன் பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களை சலிம் அலி தெரிந்துகொண்டார். அப்பொழுதிலிருந்து சலிம் அலிக்கு பறவைகள் மீது தீராத நாட்டம் பிறந்தது. பின்பு கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபோதிலும் பட்டம் ஏதும் பெறவில்லை. தன் தமையனுக்கு தொழிலில் உதவுவதற்காக இடையில் மியான்மர் சென்றுவிட்டார். மியான்மரில் தமையனுக்கு உதவுவதைவிடப் பறவைகளைக் கவனிப்பதிலேயே பெரும் கவனம் செலுத்தினார். பின்னர் 1920இல் மீண்டும் சலிம் அலி பம்பாய் திரும்பினார்.
மியன்மரிலிருந்து திரும்பியவுடன் சலிம் அலிக்கு விலங்கியல் துறையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்வி பெற்றதன் காரணமாக பம்பாய் தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில், அலிக்கு வழிகாட்டி வேலை கிடைத்தது. ஏற்கனவே பறவைகளின் வாழ்க்கை முறையில் நாட்டம் கொண்டிருந்த சாலிம் அலிக்கு இவ்வேலை மென்மேலும் பறவையியல் துறையில் ஆர்வத்தை ஊட்டியது. பறவையியலில் தன் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள சலிம் அலி ஜெர்மனி சென்று முனைவர் இர்வின் ஸ்ட்ராஸ்மன் (Dr Irwin Strassman) என்பவரிடம் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து இந்தியா திரும்பியவுடன், தன் வாழ்க்கைச் செலவுக்குப் போதிய வருமானமின்றி சலிம் அலி வாட நேர்ந்தது. அவர் ஏற்கெனவே பார்த்து வந்த வழிகாட்டி வேலையும் பண நெருக்கடி காரணமாக நிரப்பப்படவில்லை.
சலிம் அலியின் 18ஆவது வயதில், 1918 திசம்பரில் தெமினாவினை மணந்தார். சலிம் அலியின் வணிகம் காரணமாக இவர்கள் இருவரும் சிறிது காலம் மியன்மரில் வாழ்ந்தனர்.[1] திருமணமாகி குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட சலிம் அலி வேலையின்றி வாடினார். ஆனால் அவரது மனைவி தெமினா பணியில் இருந்தமையால் வறுமைத் துன்பம் பெருமளவுக்கு இவரைத் தாக்கவில்லை. வேலையின்றி இருந்த நாட்களில் சலிம் அலி தனது வீட்டுத் தோட்டத்திலிருந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு பறவைகளை நோட்டம் விடுவது வழக்கம்; அங்கிருந்த தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து, அதைப் பற்றிய எல்லா விவரங்களையும் குறித்துக் கொண்டார். 1930ஆம் ஆண்டு தான் திரட்டிய குறிப்புகளைக் கொண்டு, தூக்கணாங்குருவியின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இது முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆய்வேடு போல விளங்கியது. இக்கட்டுரை, பறவையியலில் சலிம் அலிக்குப் பெரும்புகழையும், பெயரையும் ஈட்டித்தந்தது.
சலிம் அலி பறவைகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார். பறவைகளைப் பற்றியும் அவற்றின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து, ஆய்வு செய்த பின்னரே தகுதியான முடிவுக்கு வருவது சலிம் அலியின் வழக்கம். இத்தகைய சிறந்த ஆய்வு முறைகளை மேற்கொண்டு சலிம் அலி தனது புகழ் பெற்ற “இந்தியப் பறவைகளைப் பற்றிய கையேடு (The HandBook on Indian Birds)” என்பதனை இயற்றி வெளியிட்டார். இந்தியப் பறவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள மிகவும் இன்றியமையாத நூல் இது. இந்நூல் மொத்தம் 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
சலிம் அலியின் உலகமே இந்தியப் பறவைகளோடு பின்னிப் பிணைந்ததாக விளங்கியது. இந்நிலையில் இவர் உலகப்புகழ் வாய்ந்த பறவையியல் அறிஞரான எஸ். தில்லான் ரிப்ளே (S. Dillon Ripley) என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதனால், இந்தியத் துணைக் கண்டத்துப் பறவைகளைப் பற்றி 10 தொகுதிகளைக் கொண்ட தொகுப்பு நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இத்தொகுப்பில் பறவைகளைப் பற்றிய பல்வேறு விவரங்களும், அதாவது அவற்றின் தோற்றம், உணவுப் பழக்கவழக்கம், இனப்பெருக்க முறை, வலசை போதல் போன்ற பல்வேறு செய்திகளும் அடங்கியிருந்தன. பறவைகளைப் பற்றி அறிந்து கொள்வதை தனது பொழுதுபோக்காக மட்டுமின்றி, வாழ்க்கைப் பாணியாகவே சலிம் அலி மேற்கொண்டிருந்தார். மக்கள் இவரை, “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்றே அழைத்தனர். ஏறக்குறைய 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து, தான் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட பணியில் பெரும் சாதனைகளைப் புரிந்த சலிம் அலிக்கு இப்பட்டம் மிகவும் பொருத்தமே.
சலிம் அலி 1987ஆம் ஆண்டு சூன் திங்கள் 20ஆம் நாள் முன்னிற்குஞ்சுரப்பி (prostate) புற்றுநோயால் இயற்கை எய்தினார்.
சலிம் அலி அவர்கள் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக 1985 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். *1985 Indian Rajya Sabha elections )
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.