From Wikipedia, the free encyclopedia
சர்வதேச பொருளாதார மந்தநிலை என்பது உலகளாவிய அளவில் பொருளாதார மந்தநிலை நிலவும் காலமாகும்.
சர்வதேச நாணய நிதியம் சர்வதேச பொருளாதார மந்தநிலையை வரையறுக்கும்போது பல காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறது, ஆனாலும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது 3 சதவீதம் அல்லது அதற்கு குறைவான அளவில் உள்ளபோது "சர்வதேச பொருளாதார மந்தநிலை"[1][2] நிலவுவதாக கருதலாம் என்கிறது. இந்த அளவீட்டின்படி, 1985 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது அவை: 1990–1993, 1998 மற்றும் 2001–2002.[3][4]
மேலோட்டமாக கூறுவதானால், ஒரு நாட்டின் பொருளாதார மந்தநிலை என்பது அதன் உற்பத்தி குறைவதே ஆகும். ஜூலியஸ் சிஸ்கின் என்பவர் 1974 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸில் எழுதிய கட்டுரையில் பொருளாதார மந்த நிலையைக் கண்டறிவதற்கு பல எளிய விதிகளைப் பரிந்துரைத்தார். அதில் நாட்டின் உற்பத்தியைக் குறிக்கக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகள் குறைவது ஒரு அடையாளம் என்றும் கூறுகிறார்.[5] இந்த இரு காலாண்டு அளவீடுதான் தற்போது பொருளாதார மந்தநிலையை வரையறுக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில், பொருளாதார மந்தநிலையை கண்டறியும் மையமாக தேசிய பொருளாதார ஆய்வு துறை கருதப்படுகிறது. அது ஒரு மதிப்பீட்டைச் செய்யும் முன்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை மட்டுமின்றி பல்வேறு அளவீடுகளையும் கணக்கிடுகிறது. அமெரிக்காவைத் தவிர பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலையைக் கண்டறிய மேற்கூறப்பட்ட இரு காலாண்டு விதியும் பயன்படுத்தப்பட்டது.[6]
ஒரு நாட்டின் பொருளாதார மந்தநிலை இரு காலாண்டு வளர்ச்சி வீத குறைவின் மூலம் கண்டறியப்பட்டாலும், சர்வதேச பொருளாதார மந்தநிலையை வரையறுப்பது சற்று கடினமானதாகும். ஏனெனில் வளரும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ந்த நாடுகளுடையதை விட அதிகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.[7] சர்வதேச நாணய நிதியத்தின் கருத்துப்படி, 1980 களின் பிற்பகுதியிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் உண்மையான நிலையானது வளர்ந்து வரும் நாடுகளில் அதிகரித்தும், மேம்பட்ட பொருளாதார நிலைகள் கொண்ட வளர்ந்த நாடுகளில் குறைந்தும் வருகிறது. உலக வளர்ச்சியானது 2007 ஆம் ஆண்டில் 5% இலிருந்து 2008 ஆண்டில் 3.75% க்கு குறையும் என்றும் 2009 ஆம் ஆண்டில் 2% க்கு சற்று அதிகமாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் ஏற்படும் பின்னடைவு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறாக இருக்கக்கூடும். சரக்குகளை ஏற்றுமதி செய்பவை, குறுகிய அந்நிய முதலீடு உடையவை மற்றும் ரொக்க பண சிக்கல் கொண்டவை போன்ற நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டன. கிழக்காசிய நாடுகள் (சீனாவும் அடங்கும்) மிகவும் குறைவான பின்னடைவையே சந்தித்தன. ஏனெனில் அவற்றின் பொருளாதார சூழல்கள் மிகவும் வலுவானவை. பொருட்களின் விலை வீழ்ச்சி அவற்றுக்கு நன்மையளித்தது. மேலும் அவை விரிவான பொருளாதாரக் கொள்கையை நோக்கி நகரத் தொடங்கின.[7]
எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மந்தநிலை ஏற்படுவதாக சர்வதேச நாணய நிதியம் கணக்கிட்டுள்ளது. கடந்த முப்பதாண்டுகளில் ஏற்பட்ட மூன்று சர்வதேச பொருளாதார மந்தநிலைகளின்போது உலகளாவிய தனிநபர் உற்பத்தி வளர்ச்சி வீதமானது சுழியமாக அல்லது எதிர்மறையாக[3] இருந்தது என்று சர்வதேச நாணய நிதியம் கணக்கிட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.