சரணடைதல் (படைத்துறை)

From Wikipedia, the free encyclopedia

சரணடைதல் (படைத்துறை)

படைத்துறைச் சொற் பயன்பாட்டில் சரணடைதல் என்பது, பிரதேசத்தின் மீதான கட்டுப்பாடு, போர்வீரர், அரண்கள், கப்பல்கள், ஆயுதங்கள் என்பவற்றை இன்னொரு படையினரிடம் துறந்து விடுவதைக் குறிக்கும். சரணடைதல் போர் எதுவும் இடம்பெறாமலேயே அமைதியாக நடைபெறலாம். அல்லது, போரில் ஒரு பகுதி தோல்வி அடைவதன் மூலம் ஏற்படலாம். இறைமை உள்ள நாடு ஒன்று போர் ஒன்றில் தோல்வியுற்ற பின்னர் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் அல்லது சரணடைதல் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து இடுவதன் மூலம் சரணடைவது வழக்கம். போர்க்களத்தில் தனிப்பட்ட வீரர்கள் அல்லது படைத் தலைமையின் கட்டளைப்படி மொத்தமாகச் சரணடையும் போது அவர்கள் போர்க் கைதிகள் ஆகிறார்கள்.

Thumb
முசுலிம் படைகள் இசுப்பெயின் படைகளிடம் சரணடைவதைக் காட்டும் படம்
Thumb
பாகிசுத்தான் கட்டளை அதிகாரி 93,000 படைவீரர்களுடன் இந்திய-வங்காளதேசக் கூட்டுப் படைகளிடம் சரணடையும் காட்சி.
Thumb
இரண்டாவது உலகப் போரில் இடம்பெற்ற சிங்கப்பூர்ச் சண்டையில் 80,000 பிரித்தானியப் படையினர் சரணடைவதற்கு ஜெனரல் பேர்சிவல் செல்லும் காட்சி.
Thumb
இரண்டாம் உலகப் போரில் இரண்டு அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் சரணடைவதற்காக சப்பானியப் பிரதிநிதிகள் யூ.எஸ்.எஸ் மிசூரி கப்பலில் நிற்கும் காட்சி.

வரலாறு

ஒரு வெள்ளைக் கொடி அல்லது கைக்குட்டை சரணடைவதற்கான விருப்பத்தைக் காட்டும் சைகையாகப் பொதுவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனாலும், அனைத்துலகச் சட்டங்களின்படி இது தீர்வுப் பேச்சுக்களுக்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு சமிக்ஞையையே குறிக்கும். இதன் விளைவு முறையான சரணடைதலாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம்.[1] வழமையாக சரணடைதல் ஆயுதங்களைக் கையளிப்பதை உள்ளடக்கியது. முற்கால ஐரோப்பியப் போர்களில், சரணடையும் படைகளின் கட்டளை அதிகாரி தனது வாளை வெற்றி பெற்ற கட்டளை அதிகாரியிடம் கையளிப்பார். தனிப் போர்வீரர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுக் கைகள் இரண்டையும் தலைக்கு மேல் உயர்த்துவதன் மூலம் சரணடையலாம். சரணடையும் தாங்கிக் கட்டளை அதிகாரி தாங்கியின் சுடு குழல்களை எதிர்த் தரப்பினரை நோக்காமல் திருப்பிவிட வேண்டும். சரணடைதலுக்கான சைகையாக கொடிகளும் சின்னங்களும் இறக்கப்படும் அல்லது சுருட்டப்படும். கப்பலின் கம்பத்தில் வெள்ளைக் கொடி ஏற்றுவது சரணடைதலுக்கான அடையாளம் ஆகும்.[2]

இது தரப்பும் ஏற்றுக்கொண்டால் சரணடைதல், நிபந்தனைகளுடன் கூடியதாக இருக்கக்கூடும். இதன்படி, வெற்றி பெற்ற தரப்பு சில வாக்குறுதிகளை அளித்த பின்னரே மற்றத்தரப்பு சரணடைய ஒப்புக்கொள்ளும். அல்லது சரணடைதல் நிபந்தனையற்றதாக இருக்கலாம். இவ்வகைச் சரணடைதலில், வெற்றி பெற்ற தரப்பினர், போர்ச் சட்டங்களும் வழக்கங்களும் வழங்கக் கூடியவை தவிர்ந்த வேறெந்த வாக்குறுதிகளையும் வழங்க மாட்டார்கள். இது தொடர்பான பெரும்பாலான சட்டங்களும் வழக்கங்களும், 1907 ஹேக் ஒப்பந்தம், செனீவா ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் உள்ளவை ஆகும்.[3] சரணடையும் தரப்பு போரைத் தொடர்ந்து நடத்தக்கூடிய ஆற்றலை இழந்துவிட்டால் நிபந்தனையற்ற சரணடைதலே இடம்பெறக்கூடும்.

போலிச் சரணடைதல்

போர்ச் சூழல் ஒன்றில் போலிச் சரணடைதல் ஒரு வகை நம்பிக்கை மோசடி ஆகும். செனீவா ஒப்பந்தத்தின் நடபடி 1 இன்படி இது ஒரு போர்க் குற்றம் ஆகும்.[4] எதிரியைப் பாதுகாப்பு நிலைகளில் இருந்து வெளிவரச் செய்து அவர்களைத் தாக்குவதே போலிச் சரணடைதலின் பொதுவான நோக்கம். எனினும், முற்றுகை போன்ற பெரிய நடவடிக்கைகளில் இதைப் பயன்படுத்தக்கூடும். போலிச் சரணடைதல் தொடர்பான விபரிப்புக்களை உலக வரலாற்றில் அடிக்கடி காண முடியும். ஐரிஷ் விடுதலைப் போரின்போது கில்மிச்சேலில் பிரித்தானியப் படைகள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் போலிச் சரணடைதல் ஒரு எடுத்துக்காட்டு.[5]

இவற்றையும் பார்க்கவும்

  • சரணடைதல் ஒப்பந்தம்

குறிப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.