மலையாள எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
சஞ்சயன் (Sanjayan) என்ற புனைப்பெயரால் நன்கு அறியப்பட்ட மன்னிக்கோத் ராமுன்னி நாயர் (1903-1943) ஒரு மலையாள எழுத்தாளரும், பத்திரிகையாளரும் மற்றும் மலையாள இலக்கியத்தில் நையாண்டி எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் இருக்கிறார். குறிப்பிடத்தக்க மலையாள நையாண்டிகளில் ஒருவரான ஈ.வி.கிருஷ்ணப் பிள்ளையுடன், சஞ்சயன் மொழியில் எளிய கட்டுரைகளின் வகையை உருவாக்கியதாக அறியப்படுகிறது. நையாண்டிகளைத் தவிர, இலக்கிய விமர்சனங்களையும் எழுதியுள்ளார். மேலும், இவர் ஓத்தெல்லோவை மலையாள மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
சஞ்சயன் 1903 சூன் 13 ஆம் தேதி தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி என்ற நகரத்தில் மடவில் குஞ்ஞிராமன் வைத்யர் மற்றும் மணிக்கோத் பாரு அம்மா ஆகியோருக்கு பிறந்தார்.[1] தனக்கு எட்டு வயதாக இருந்தபோது இவரது தந்தை இறந்துவிட்டார். இவரை அவரது தாயார் வளர்த்தார். இன்றைய அரசு ப்ரென்னன் மேல்நிலைப் பள்ளியான ப்ரென்னன் கிளைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைச் முடித்தார், பின்னர் அவர் அரசு ப்ரென்னென் கல்லூரி, தலசேரி, விக்டோரியா கல்லூரி, பாலக்காடு மற்றும் சென்னை கிறித்துவக் கல்லூரி ஆகியவற்றில் படித்தார். அங்கிருந்து ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் கௌரவ பட்டம் பெற்றார்.[2] இந்த நேரத்தில், இவர் ஏற்கனவே சமசுகிருத மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தார். மேலும் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் அறிவைப் பெற்றிருந்தார். பட்டம் பெற்ற உடனேயே அரசுப் பணியில் எழுத்தராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மலபார் கிறித்துவக் கல்லூரியில் கற்பித்தல் பணியில் சேருவதற்காக எழுத்தர் பனியிலிருந்து விலகினார்.[3] இந்த காலகட்டத்தில், அவர் மனம் மாறி, எஃப்.எல் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால் 1932 ஆம் ஆண்டில் மீண்டும் இளங்கலை சட்டப் படிப்பை மேற்கொண்டார். அவருக்கு ஏற்பட்ட காசநோய் காரணமாக இதுவும் பாதியிலேயே கைவிடப்பட்டது. நோய்க்கு சிகிச்சையளிக்கும் போதும், குணமடைந்தபோதும், வேதாந்தா மற்றும் இந்து சோதிடத்தைப் பயின்றார். நோயிலிருந்து மீண்ட பின்னர், 1935 ஆம் ஆண்டில் செங்கலத்து குஞ்ஞிராம மேனனால் நிறுவப்பட்ட கேரள பத்ரிகா என்ற செய்தித்தாளின் ஆசிரியர் பதவியைப் பெறுவதற்காக அவர் தனது இல்லத்தை கோழிக்கோடுக்கு மாற்றினார், ஆனால் 1938 இல், மலபார் கிறித்துவக் கல்லூரியில் மீண்டும் ஒரு ஆசிரியராக 1942 வரை பணியாற்றினார்.
சஞ்சயன் 1927 ஆம் ஆண்டில் தனது உறவினரான கார்தியாயினி அம்மாவை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தார். இவரது மனைவி குறுகிய காலமே இவருடன் இருந்தார். அவர் 1930 இல் இறந்து போனார்.[1] மேலும் இவர் தனது ஒரே மகனையும் 1939 இல் இழந்தார். சஞ்சயன் 1943 செப்டம்பர் 13, அன்று தனது 40 வயதில் தனது தலசேரி இல்லத்தில் காலமானார்.[3]
மலையாள இலக்கியத்தில் சஞ்சயனின் பங்களிப்பு முக்கியமாக சமகால சமூக அரசை விமர்சிக்கும் நையாண்டி கட்டுரைகளாகும்.[4] ஈ.வி.கிருஷ்ணப் பிள்ளையுடன், மலையாள இலக்கியத்தில் நகைச்சுவை மற்றும் எளிய கட்டுரைகளின் முன்னோடியாக அவர் கருதப்படுகிறார்.[5][6] சஞ்சயனின் எழுத்துக்களை தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் - சஞ்சயன் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சோமராஜன் பதின்ஜரிட்டம், இவரை பி.ஜி. வுட்ஹவுஸ், ஸ்டீபன் லீகாக், ஜேம்ஸ் தர்பர், மற்றும் மார்க் டுவைன் போன்ற எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டார்.[7] சமூக-அரசியல் பிரச்சினைகளை விமர்சிக்கும் போது கூட அவர் தனிப்பட்ட அவதூறுகளை நாடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஹாஸ்யஞ்சலி, சாகித்யா நிகாஷம் மற்றும் ஆறு நிரோபனங்கள் என தொகுக்கப்பட்ட இலக்கிய விமர்சனங்கள் மற்றும் வியாமாயணம் மற்றும் ஆத்யோபஹரம் போன்ற புத்தகங்களால் தொகுக்கப்பட்ட வசனங்களால் அவரது சாயல் அமைந்துள்ளது.[8] இவர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோவை மலையாளத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.[3]
1935 ஆம் ஆண்டில் கேரள பத்ரிகாவின் ஆசிரியராக நியமிக்கப்பட்டதன் மூலம் ஒரு பத்திரிகையாளராக சஞ்சயனின் வாழ்க்கை தொடங்கியது, இது 1936 இல் சஞ்சயன் என்ற பெயரிடப்பட்ட நகைச்சுவை பத்திரிகையை நிறுவும் வரை ஓராண்டு மட்டுமே நீடித்தது.[3] பின்னர், விஸ்வரூபம் என்ற நையாண்டி இதழின் தலைமை ஆசிரியராக இருந்தார். அங்கு வள்ளத்தோள் நாராயண மேனன் போன்ற பெயர்களிலும் கூட நையாண்டி கருத்துக்களை வெளியிட்டார்.[9][10] அவர் மாத்ருபூமியிலும் எழுதினார். பிரித்தன் இராணுவத்தின் அட்டூழியங்கள் குறித்த அவரது நையாண்டித் துணுக்குகளில் ஒன்று செய்தித்தாளுக்கு தற்காலிகத் தடையைப் பெற்றது.[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.