Remove ads
From Wikipedia, the free encyclopedia
சக்ரோசு மலைத்தொடர் அல்லது ஜக்ரோஸ் மலைகள் (Zagros Mountains, பாரசீகம்: رشته كوه زاگرس, குர்திஷ்: زنجیرهچیای زاگرۆس, சிரியாக்: ܛܘ̣ܪܵܢܹܐ ܕܙܵܓܪܘ̇ܣ, அரபு: جبال زغروس அராமைக்: ܛܘܪ ܙܪܓܣ,) உலகின் மிகப் பெரிய மலைகளில் ஒன்றான இது, தென்மேற்கு ஆசியா கண்டத்தில் உள்ள ஈரான், ஈராக் குர்திஸ்தான் மற்றும் தென்கிழக்கு துருக்கியின் வரம்பு வரையில் பரந்து அமைந்துள்ளது. சுமார் 1,500 கிலோமீட்டர் (932 மைல்கள்) நீளமும், சுமார் 240 கிலோமீட்டர் (150 மைல்கள்) அகலமும் உள்ள இந்த நெடிய மலைத்தொடர், ஈரானின் வடமேற்குப் பிராந்தியத்தில் தொடங்கி, கிட்டத்தட்ட ஈரான் மேற்கு பகுதியிலும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்குக் கரையிலுள்ள ஓமான் குடாவின் குருமுசு நீரிணையை முடிவாக கொண்டுள்ள இம்மலை தொடர், மேற்கத்திய மற்றும் தென்மேற்கு ஈரானியப் பீடபூமியின் முழு நீளத்திற்கும் பரவியிருக்கின்றது. இச்சக்ரோசு மலைத்தொடரில் மிக உயர்ந்த இடம் தேனா (Dena) எனப்படுவதாகும். மேலும், இந்த மலைகள், குர்தியர்களின் புனிதப் பகுதியாக கருதப்படுகின்றது.[2]
சக்ரோசு மலைத் தொடர் சார்ந்த மடிப்பு மற்றும் உந்து திணைமண்டலம் (thrust belt), "ஈரானியத் தட்டு" (Iranian Plate) மற்றும் "அரேபியத் தட்டு" (Arabian Plate) என இரண்டு தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகளின் மோதல்கள் மூலம் உருவானதாகும். இம்மலைகள் உருவாகக் காரணமான நிலவியல் மோதல், சுமார் 359.2± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 299± 0.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான கார்பனிபெரசுக் காலத்தில் நிகழ்ந்துள்ளது. மேலும் முன்னதாக நிலப்பெருங்குழிகளாக உருவாகியிருந்த ஈரானியத் தட்டு, பின்னர் முழுப் பாறைகளால் மூடப்பட்டுவிட்டன.[3] அரேபிய தட்டும், ஈரானிய தட்டும் எதிரெதிராக தள்ளப்படும் மோதல் செயல்பாடுகள் தற்போதும் தொடர்வதால், ஈரானிய பீடபூமியிலுள்ள சக்ரோசு மலைகளின் உயரம் உயர்ந்தவாரே உள்ளது.[4] ஈரானின் அண்மைய புவியிடங்காட்டி அளவீடுகள் (Global Positioning System – GPS)[5], இந்த மோதல்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகவும், இதன் விளைவாகவே சிதைவுற்று, இந்நாடுகள் சீரற்றுக் (non-uniformly) அமைந்துள்ளதாகவும் (முக்கியமாக அல்போர்சு மலை மற்றும் சக்ரோசு மலை போன்ற பிரதான மலைப்பகுதிகளில்) காட்டுகிறது.[6]
வண்டல் படிவுகளின் தோற்றம் கொண்ட சக்ரோசு மலைகள், சுண்ணக்கல்லால் ஆனவை. உயர்த்தப்பட்ட சக்ரோசு அல்லது உயர்ந்துள்ள சக்ரோசு மலை சிகரங்களிலுள்ள பலேயோசாயக்கு சகாப்த பாறைகள், பிரதானமாக சக்ரோசு மலைகளில், "புவித்தொடைத்தவறு" (earthed fault) அல்லது "பிளவு இடப்பெயர்ச்சி" (heave of fault) எனப்படும் சிகரங்களின் மேல் மற்றும் உயர் பிரிவுகளில் காணப்படுகின்றன.[7] பல சகாப்தங்களுக்கு ("பலேயோசாயக்கு சகாப்தம்" Paleozoic, Era)[8] முன்னாதாக அதாவது, 541 – 252.17 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியுள்ளது. இது தற்போதைய நிலவியல் கால அளவில் நிலவியல் யுகம் (பனேரோசாயக்கு யுகம் phanerozoic, Eon)[9] ஆகும். மேலும், சக்ரோசு மலை புவித்தொடைத்தவறுகளில் இருபுறமும் உருவான, "மெசோசோயிக்கு" (Mesozoic) பாறைகள் உள்ளன, மற்றும் இருபுறமும் "கிரிடேசியசு" (cretaceous) பாறைகள் சூழப்பட்டு, "திரியாசிக்கு" (triassic) மற்றும் "சுராசிக்கு" (jurassic) பாறைகள் ஒரு கலவையாக உள்ளன.[7] (மெசோசோயிக்கு என்பது, (புவியியல்) 251.0 தொடக்கம் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான திரியாசிக்கு, சுராசிக்கு, கிரிடேசியசு காலங்களை உள்ளடக்கிய சகாப்தமாகும்.[10] திரியாசிக்கு, 251 தொடக்கம் 199.6 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலம்.[11] சுராசிக்கு, 199.6 தொடக்கம் 145.5 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலம்.[12] கிரிடேசியசு, இற்றைக்கு 145.5 மில்லியன் ஆண்டுகள் முன்னர் தொடக்கம் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையான காலமாகும்).[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.