From Wikipedia, the free encyclopedia
குருத்தாஸ் பூங்கா {Grūtas Park) என்பது, முன்னாள் சோவியத் குடியரசான லித்துவேனியாவில் உள்ள ஒரு சிலைகள் பூங்கா ஆகும். இங்கே சோவியத் காலச் சிலைகளும், அக்காலக் கொள்கை சார்ந்த எச்சங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப் பூங்கா லித்துவேனியத் தொழில் அதிபரான வில்லியுமாஸ் மலினவுஸ்காஸ் (Viliumas Malinauskas) என்பவரால், துருஸ்கினின்காய் (Druskininkai) என்னும் லித்துவேனிய நகருக்கு அண்மையில், அவரது சொந்தச் செலவில் நிறுவப்பட்டது. இது அதிகாரபூர்வமற்ற முறையில் ஸ்டாலின் உலகம் என அழைக்கப்படுகின்றது.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் 1990 இல் லித்துவேனியா விடுதலை பெற்றபோது, சோவியத் காலச் சிலைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டிருந்தன. இச் சிலைகளை வைத்து ஒரு அருங்காட்சியகத்தை நிறுவுவதற்காக அவற்றைத் தன்னிடம் கையளிக்கும்படி மலினவுஸ்காஸ் லித்துவேனிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இப்பூங்கா சுக்கிஜா தேசியப் பூங்காவின் (Dzūkija National Park) ஈரநிலப் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இப் பூங்காவின் பல அம்சங்கள் குலாக் சிறை முகாமின் மரப் பாதைகள், காவல் கோபுரங்கள், பாதுகாப்பு வேலிகள் போன்ற அம்சங்களின் மீளுருவாக்கம் ஆகும். இப் பூங்காவில் வஞ்சப் புகழ்ச்சித் தந்திரங்கள் நிறையவே உண்டு. இது மக்களுக்கு வேடிக்கையாக அமைவது மட்டுமன்றித் தகவல்களை அளிப்பதாகவும் அமைந்துள்ளது. துன்பந் தருகின்ற பல விடயங்களையும் நினைவுக்குக் கொண்டுவரும் இந் நிறுவனம் பல கடுமையான எதிர்ப்புக்களைச் சந்தித்து வருவது மட்டுமன்றி, இன்றும் இதன் இருப்பு சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது. முன்னர் திட்டமிடப்பட்ட பல அம்சங்கள் அனுமதி கிடைக்காததால் கைவிடப்பட்டன. பார்வையாளர்களை குலாக் பாணித் தொடர் வண்டியில் ஏற்றிச் செல்வது, உணவுச் சாலைகளில் குலாக் பாணி உணவுகளைப் பரிமாறுவது என்பன இவ்வாறு கைவிடப்பட்டவற்றுள் சிலவாகும்.
இப் பூங்காவில், விளையாட்டுத் திடல்கள், சிறிய விலங்கினக் காட்சிச்சாலை, உணவுச் சாலைகள் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சோவியத் காலத்தின் நினைவு எச்சங்களைக் கொண்டவையாக உள்ளன.
இங்குள்ள காட்சிப்பொருட்கள் வெவ்வேறு செல்வாக்கு எல்லைகள் தொடர்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலைக்கும் ஒரு தகவல் பலகை உண்டு. இதில் அவை பற்றிய சிறு வரலாற்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இங்குள்ள சிலைகளில், கார்ல் மார்க்சினது தவிர்ந்த ஏனைய எல்லாச் சிலைகளும் லித்துவேனியாவைச் சோவியத் ஆக்கிரமித்ததில் செல்வாக்குச் செலுத்தியோருடையவை ஆகும். இங்கே, 46 வெவ்வேறு சிற்பிகளால் செய்யப்பட்ட 86 சிலைகள் உள்ளன. காட்சிப்பொருட்கள் பின்வரும் செல்வாக்கு எல்லைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.