கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா, இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரத்தின் அருகிலுள்ள கிலா ராய்பூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராமிய விளையாட்டுத் திருவிழா. கிராமிய ஒலிம்பிக் போட்டிகள் என்று இத்திருவிழா பரவலாக அறியப்படும்.[1][2][3]
இத்திருவிழாவில், குதிரை வண்டி பந்தயம், கயிறு இழுத்தல் போன்ற பெரும்பான்மையான பஞ்சாபி கிராமிய விளையாட்டுகளுக்கான போட்டிகள் நிகழ்த்தப்படும்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம், லூதியானா நகரத்தில், வெளிநாட்டினர் உட்பட பல விளையாட்டு ஆர்வலர்கள் குவிவர். எருதுகள், ஒட்டகங்கள், நாய்கள், கோவேருகள் மற்றும் பிற விலங்குகளின் சிறந்த இனங்கள் போட்டிகளில் பங்கேற்பதைக் காண அவர்கள் கிலா ராய்பூருக்கு வருகின்றனர். இப்போட்டிகளில் பங்கெடுத்துப் புகழ் பெற்ற வீரர் பலர். 2008 போட்டிகளில் கல்சியான் கிராமத்தைச் சேர்ந்த ஹக்கம் மற்றும் நயிப் சிங் தலிவால் குஜ்ஜரால் மற்றும் பலேவால் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தனர். இதனால் பஞ்சாபில் தலைச்சிறந்த விளையாட்டு மோகம் கொண்டவர்களாக இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
போட்டிகளின் தொடக்க வரலாறு
குரு ஹர்கோபிந்த்ஜி, தன் தொண்டர்களின் உள்ளமும் உடலும் உரம்பெற வேண்டி அவரின் அகல் தக்த் சாகிப்பின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மல்யுத்தப் போட்டிகளை நடத்தும் மரபைத் தோற்றுவித்தார். போட்டிகளுக்கு அவர் அளித்த ஆதரவும், அவர் வகுத்து வழங்கிய ஒழுக்கநெறி கோட்பாடுகளும், விளையாட்டுப் போட்டிகள் பஞ்சாபி வாழ்வுமுறையில் ஒரு பெருமைக்குரிய அங்கமாக மாறியதற்கு முக்கிய காரண்மாகக் கருதப்படுகிறது. கிராமத்தின் பொது மைதானங்களிலும், பண்டிகைகள், திருவிழாக்களின் போதும், பீர்களின் ஆசிரமங்கள், ஆசான்களின் நினைவிடங்களிலும் மல்யுத்தம் பெரும் பொழுதுபோக்காக ஆடப்பட்டது. மல்யுத்த வீரர்களை கிராமங்கள் தத்தெடுத்து அவர்களுக்கு சத்துணவுகளை வழங்கி பேணத் துவங்கின. அவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதையும் பெருமைக்குரிய செயலாகக் இன்றளவும் பஞ்சாபில் கருதப்படுகிறது.
அனந்த்பூர் சாகிப்பில் நடைபெறும் ஹோலா மொஹல்லா கொண்டாட்டங்களின் போது நிகழ்த்தப்பட்ட, கூடாரம் அடிக்கும் போட்டிகள், வில்வித்தை, வாட்போர், குதிரையேற்றப் போட்டிகள், நிஹங்குகளின் உடற்பயிற்சி கரண வித்தை காட்சிகள் முதலியவற்றிற்கு பழம்பெரும் வரலாறுண்டு. கிராமிய விளையாட்டுக்களைப் பந்தயப் போட்டிகளாக ஒருங்கிணைத்த பெருமை பஞ்சாபிகளுக்கே சாரும்.
ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கு முன்பு கரேவால் விளையாட்டுச் சங்கம் கிலா ராய்பூர் கிராமத்தில் கிராமிய விளையாட்டுப் போட்டிகளை நிகழ்த்தத் துவங்கியது.
இன்றளவில் ஏறத்தாழ 7000 கிராமங்களில் கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவ்வக்கிராம மக்களே இப்போட்டிகளை ஒருங்கிணைக்கின்றனர். போட்டியாளகளுக்கு விருந்தோம்பி வேண்டியவற்றைச் செய்வதும் கிராம மக்களே. இத்தகைய கிராம விளையாட்டுகள் கிராம மேம்பாட்டிற்குப் பெரிதும் துணை புரிந்துள்ளன.
1947-இல் இந்தியா விடுதலை பெறும் முன் கபடி மற்றும் மல்யுத்தத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின் கிராமிய விளையாட்டுகளின் வட்டம் பெருகியது. மெருகற்ற "கிடோ-கூண்டி"-க்குப் பதிலாக முறையான ஹாக்கி விளையாட்டு ஆடத் துவங்கப்பட்டது. கிடோ-கூண்டி என்றால் துணிக்கீற்றுகளால் ஆன பந்து மற்றும் முனை வளைக்கப்பட்ட மட்டை என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஹாக்கி விளையாட்டில் வசதியற்ற கிராமத்து வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இந்தியாவின் தலைச்சிறந்த பன்னிரு வீரர்கள் ஜலந்தர் மாவட்டத்தின் சன்சாபூர் என்ற ஒரே கிராமத்தில் இருந்து உருவாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலத்தில் ஏற்பட்ட விளையாட்டுத் திருவிழாக்களின் மறுமலர்ச்சி அத்தகையத் திருவிழாக்கள் பெருக வழிவகை செய்துள்ளது. இருபதாண்டுகளுக்கு முன்பு வரை பின்வருபவை மட்டுமே குறிப்பிடத்தக்க விளையாட்டுத் திருவிழாக்களாக திகழ்ந்தன.
- பபேஹலி-தி-சிஞ்ஜ்
- பக்கோவால்-தி-சிஞ்ஜ்
- ஷிகர்-மக்கியன் தி-பரேவி
- ஜவுரா-சத்ரா-தி-ப்ரேவி
- மோமே-வடாலே-தி-சிஞ்ஜ்
- கிலா ராய்ப்பூர் விளையாட்டுகள்
- ஷாங்கர்-தி-சிஞ்ஜ்
- முனன்-ஹனி-தி-சிஞ்ஜ்
தற்போது விளையாட்டுப் போட்டிகள் ஏறத்தாழ பஞ்சாப்பின் அனைத்துக் கிராமங்களிலும் நிகழ்த்தப்படுகிறது.
கிலா ராய்பூர் கிராமிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து கமல்பூரின் கல்கிதார் போட்டிகளும் அரை-நூற்றாண்டைக் கடந்தது. துதிகேவின் லாலா லஜ்பத் ராய் நினைவு விளையாட்டுப் போட்டிகள் முப்பதாண்டுகளைக் கடந்தது. இவைத் தவிர குஜர்வால், முல்லன்பூர், ஸானேவால், குங்காலி ராஜ்புத்தானா அம்பலா, தாம்தோ முதலிய கிராமியப் போட்டிகளும் மலர்ச்சியடைந்துள்ளன. லால்தோ காலான், தூர்கோட், ரவுணி, ரூர்கா காலான், பிந்தெர் காலான், துவாரே-அனா போன்ற சிறு விளையாட்டு விழாக்களும் மெல்ல மெல்ல புகழ்பெறத் துவங்கியுள்ளன.
பொதுவாக கிராமிய விளையாட்டுத் திருவிழாக்களில் மூவகைப் போட்டிகள் நடத்தப்படும். அவை பின்வருமாறு:
- கிராமிய விளையாட்டுகள் - கபடி, மல்யுத்தம், பலு-தூக்குதல் முதலியன
- நவீன விளையாட்டுப் போட்டிகள் - தடகளம், ஹாக்கி, கைப்பந்து, காற்பந்து, மிதிவண்டி, கையெறிப்பந்து முதலியன
- நிகழ்த்து விளையாட்டுகள் - கரண வித்தை, கம்பி வளைத்தல், உடல் மேல் வண்டி ஏற்றுதல் முதலியன.
தற்காலங்களில் இத்திருவிழாக்களுக்குப் புதுப்புது வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சாயங்காலங்களில் துவங்கி நள்ளிரவு வரையிலும் கிராமியப் பாடல் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்படுகின்றன. கிலா ராய்ப்பூரில் கரம்ஜீத் தூரி மற்றும் ஜக்மோகன் கவுரிடையே நிகழ்ந்த இசைப் போட்டி குறிப்பிடத்தக்கது. குஜர்வால் விழாவில் பர்மிந்தர் சந்து, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் சுரிந்தர் சிந்தா, மஜா பகுதி விழாக்களில் அமர்ஜித்தின் தூம்பி (ஒற்றை நரம்பு வாத்தியம்) இசை முதலியவைக் குறிப்பிடத்தக்கது.
இவையல்லாமல் கிராமத்தார் வளர்க்கும் எருதுகள், குதிரைகள், நாய்கள் முதலியவற்றிற்கிடையிலும் போட்டிகள் நிகழ்த்தப்படும். மாட்டுவண்டி பந்தயங்களும், வேட்டைநாய்ப் பந்தயங்களும் நடத்தப்படுகின்றன. சிலவிடங்களில் சேவற்சண்டைகளும், புறாப் பந்தயங்களும் நடத்தப்படுவதுண்டு. சில பகுதிகளில் மாடுபிடி சண்டைகளும் நடத்தப்படுகின்றது.
கிராமிய விளையாட்டுகள் பஞ்சாபிய ஆண்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
பிற விளையாட்டுகள்
திரிஞ்சென்
திரிஞ்சென் என்பது இளம்பெண்கள் இராட்டையில் நூல் நூற்றுக்கொண்டே பாடும் ஓர் தொழில் சார் பொழுதுபோக்கு விளையாட்டு. இராட்டைகளுக்கும் பெண்கள் இரவும் பகலும் தங்கத் தேவையான இடமுள்ள ஒரு வீட்டில் ஒரு சமூக சங்கம் போல திரிஞ்சென் ஒருங்கிணைக்கப்படும். பெண்கள், ஆடல் பாடல் வாயிலாகத் தத்தம் இன்ப-துன்ப உணர்வுகளையும், பிரிவுத் துயரையும், கூடும் இன்பத்தையும் வெளிப்படுத்துவர். பெண்களின் இராட்டையானது அவர்களது துணையாகவும், நட்பாகவும், வழிநடத்துவதாகவும் அவர்களின் வாழ்வு முழுதும் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்வதாகக் கருதப்படுகிறது.
கிக்லீ
இதுவும் பெண்களுக்கான விளையாட்டாகும். இரு பெண்கள் கைகளைக் கோர்த்து வட்டமிட்டு விளையாடுவதாய் அமையும்.
கீதா பத்தர்
கூழாங்கல், உடைந்த சில்லுகள் முதலியவைக் கொண்டு ஏழு கல்லாட்டம் போல் இவ்விளையாட்டு ஆடப்படும். எனினும் ஓட்டமின்றி, அமர்ந்து விளையாடுவதாய் அமையும்.
கிடு (பந்து)
பெண்கள் பந்தாடிக்கொண்டே பாடுவதாக இவ்விளையாட்டு அமையும். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பாட்டென பத்து சுற்றுகளைக் கொண்டது. பொதுவாகக் குழந்தைகள் பாட ஏதுவாக இளகுவான எதுகை-மோனையுடம் பாடல்கள் அமையும்.
கோக்லா சபக்கி
சீசோ சீச் கனேரியான்
லுகா மீடீ (அ) லுகா சுப்பி (கண்ணாமூச்சி)
கிடி கடா (அ) ஸ்தாபூ
காக்கர் பிஸ்ஸி
கபடி
ரசா கசி (வடமிழுத்தல்)
அகாராக்கள் (மல்யுத்தக் கூடங்கள்)
தற்காப்புக் கலை
பதங் பாசி (காத்தாடி பட்டம்)
குளி தண்டா (லிப்பா)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.