கிருத்திகா

From Wikipedia, the free encyclopedia

கிருத்திகா (இயற்பெயர்: மதுரம் பூதலிங்கம், 1915 - பெப்ரவரி 13, 2009) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர். வாஸவேஸ்வரம் என்னும் புதினம் மூலம் தமிழ் நாவல் உலகில் அழுத்தமான தடத்தைப் பதித்தவர். பல புதினங்கள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியவர். தமிழில் கிருத்திகா என்ற புனைபெயரிலும் ஆங்கிலத்தில் மதுரம் பூதலிங்கம் என்ற பெயரிலும் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கிருத்திகா கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகே உள்ள பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தவர். பம்பாயில் படித்து வட மாநிலங்களிலேயே அதிகம் வசித்தவ்ர். பூதப்பாண்டிக்கு அயலூரான திருப்பதிசாரத்தைச் சேர்ந்த பூதலிங்கம்பிள்ளையை மணம் செய்துகொண்டார். காலஞ்சென்ற பூதலிங்கம் அரசாங்கத்தில் பதவிகள் வகித்தவர். உருக்குத் துறையிலும், நிதித்துறையிலும் செயலாளராகப் பணியாற்றியவர். பிலாய் உருக்காலை நிர்மாணத்தில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. கிருத்திகாவின் மகள் மீனா, வேளாண்மை அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவி ஆவார்.

இந்தியா முழுவதும் பயணம் செய்தவர் கிருத்திகா. இந்தியக் கோயில்கள், கலைகள் போன்றவை குறித்துக் கலைமகளில் பல கட்டுரைகளை எழுதி வந்தார். ஆங்கிலத்தில் மிக அழகாக மேடையில் பேசக்கூடியவர். சம்ஸ்கிருதத்திலும் பெரும்புலமை படைத்தவர். குழந்தைகளுக்காக, இராமாயணம், மகாபாரதம், பாகவதம், என பல ஆங்கில நூல்களை எழுதினார். பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதிகாச மறுஆக்கம், இலக்கிய அறிமுகம், தமிழகச் சிற்பக்கலை ஆகியவற்றைப்பற்றி எழுதியிருக்கிறார். கிருத்திகா எழுதிய வாசவேச்வரம் என்ற புதினத்தை சிறீராமன் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

விமர்சகர் சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் மதித்த எழுத்தாளர்களில் கிருத்திகாவும் ஒருவர். கிருத்திகா ஒரு முன்னணி எழுத்தாளராக ஆவதற்குச் சிட்டி உறுதுணையாக இருந்தார். தில்லியிலும், பல்வேறு நகரங்களிலும் வசித்த கிருத்திகா சிட்டிக்கு எழுதிய கடிதங்களும், சிட்டி அவருக்கு எழுதிய பதில் கடிதங்களும் புகழ் பெற்றவை. இவை நூலுருப் பெறவில்லை. கிருத்திகா எழுதிய நூல்களில் 'வாசவேஸ்வரம்' என்னும் நூல் தமிழில் வெளிவ்ந்த மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றது.

எழுத்தாளர் கிருத்திகா தனது 93வது அகவையில் 2009, பெப்ரவரி 13 இல் சென்னையில் காலமானார்.

எழுதிய ஆக்கங்கள்

புதினங்கள்

  • புகை நடுவினில்
  • சத்யமேவ
  • பொன்கூண்டு
  • வாஸவேஸ்வரம்
  • தர்ம ஷேத்ரே
  • புதிய கோணங்கி
  • நேற்றிருந்தோம்

குறும் புதினங்கள்

  • யோகமும் போகமும்
  • தீராத பிரச்சனை

நாடகங்கள்

  • மனதிலே ஒரு மறு
  • மா ஜானகி

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.