இந்திய விடுதலைப் போராட்டம் From Wikipedia, the free encyclopedia
கிரிப்சின் தூதுக்குழு (Cripps' mission) என்பது 1942ல் பிரித்தானிய இந்தியாவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் அரசு அனுப்பிய ஒரு தூதுக்குழு.[1][2][3]
இரண்டாம் உலகப் போர் 1939ல் தொடங்கிய போது இந்தியாவின் வைசுராய் லின்லித்கோ பிரபு இந்திய மாகாண அரசுகளையும் அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பிரித்தானிய இந்தியாவின் நாசி ஜெர்மனி மீதான போர் சாற்றலை அறிவித்தார். இதனால் 1937 முதல் மாநில சுயாட்சி முறையின் கீழ் பெருவாரியான இந்திய மாகாணங்களில் ஆட்சி புரிந்து வந்த இந்திய தேசிய காங்கிரசு அரசுகள் பதவி விலகின. மாகாணங்களில் ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 1942ல் சப்பானியப் படைகள் கிழக்காசியாவில் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன. ஐரோப்பிய களத்திலும் பிரிட்டனின் நிலை கடும் நெருக்கடிக்காளாகியிருந்தது. போரில் வெற்றி பெற பெருமளவில் இந்தியப் படைகளும் இந்தியர்களின் ஒத்துழைப்பும் தேவை என பல பிரித்தானியத் தலைவர்கள் கருதினர். எனவே இந்தியர்களின் ஒத்துழைப்பைப் பெற ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பினர். இதற்கு பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் தலைமை தாங்கினார். இக்குழு அவரது பெயரால் “கிரிப்சின் தூதுக்குழு” என்றழைக்கப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரசில் கிரிப்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இருவேறு கருத்துகள் நிலவின. வைசுராயின் தன்னிச்சையான முடிவினால் கோபம் கொண்டிருந்த ஒரு பிரிவினர், காலனிய அரசுக்கு எதிராக ஒரு பெரும் எழுச்சியைத் தொடங்க வேண்டுமென்று விரும்பினர். சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி போன்றோர் போரில் அரசுடன் ஒத்துழைக்க வேண்டுமெனக் கருதினர். காந்தி இந்தியா போரில் ஈடுபடுவதை விரும்பவில்லை, மேலும் பிரித்தானிய அரசின் நல்லெண்ணத்தின் மீது அவருக்கு நம்பிக்கையில்லை. எனினும் ராஜகோபாலாச்சாரி, ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல் போன்ற காங்கிரசு தலைவர்கள் கிரிப்சை சந்தித்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். போர் முயற்சிக்கு ஒத்துழைப்புக்கு பதிலாக உடனடியாக இந்தியாவுக்கு விடுதலை வேண்டுமென்று கோரினர். தனிப்பட்ட முறையில் கிரிப்சு இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம் வழங்கி முழு தன்னாட்சிக்கு வழிவகுப்பதாக உறுதியளித்தார். மேலும் காலப்போக்கில் அதுவே முழு சுதந்திரமாக மாற வாய்ப்புண்டு என்றும் உறுதியளித்தார். ஆனால் வெளிப்படையாக எந்த உறுதியினையும் அளிக்க வில்லை. வைசுராயின் நிர்வாகக் குழுவில் இந்தியர்களுக்கு இடமளிக்கப்படும் என்பது போன்ற சிறு சீர்திருத்தங்களை மட்டும் முன்வைத்தார். உடனடி தன்னாட்சி வேண்டுமென்று கோரிய காங்கிரசு தலைவர்கள் இதனால் கடும் அதிருப்தி அடைந்தனர். இரு தரப்பினரும் மற்றவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையின்மையால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
கிரிப்சு தூதுக்குழு முயற்சி தோல்வியடைந்த பின்னர் காங்கிரசு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியது. இவ்வியக்கத்தை காலனிய ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கினர். எனினும், இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம், முழுத் தன்னாட்சி போன்றவை வழங்கலாம் என்ற கிரிப்சின் நிலைப்பாடு போர் முடிந்தபின்னர் ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக மாறி இந்தியாவின் விடுதலைக்கு வழிவகுத்தது.
Seamless Wikipedia browsing. On steroids.