பெருவெற்றித் தொடர் டென்னிசு போட்டிகள் (Grandslam tournaments) அல்லது நான்கு முதன்மையான டென்னிசு போட்டிகளாக[1] உலகத்தர புள்ளிகள், வழமை, பரிசுத்தொகை, பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆகியன கொண்டு அவை ஆடப்படும் காலவரிசையில் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன் மற்றும் யூ.எசு. ஓப்பன் கருதப்படுகின்றன. தற்போது ஆஸ்திரேலிய ஓப்பனும் யூ.எசு ஓப்பனும் கடினமான தரைகளில் ஆடப்படுகின்றன;பிரெஞ்சு ஓப்பன் களிமண் தரையிலும் விம்பிள்டன் புல்தரையிலும் ஆடப்படுகின்றன. ஒரே ஆண்டில் இந்த நான்கு போட்டிகளிலும் வெல்வதே பெருவெற்றி எனப்படுகிறது[2][3][4][5][6]; இருப்பினும், பல்லாண்டு பழக்கங்கள் காரணமாக இந்தப் போட்டிகளின் எந்தவொரு போட்டியுமே பெருவெற்றிப் போட்டி என அழைக்கப்படுகிறது.[7]

இந்த நான்கு முதன்மைப் போட்டிகளில் மிகப் பழமை வாய்ந்த விம்பிள்டன் போட்டிகள் 1877ஆம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகிறது. யூ.எசு. ஓப்பன் 1881ஆம் ஆண்டிலும் பிரெஞ்சு ஓப்பன் 1891ஆம் ஆண்டிலும் ஆஸ்திரேலிய ஓப்பன் 1905ஆம் ஆண்டிலும் நிறுவப்பட்டன. 1905 ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும், இரண்டு உலகப்போர்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஓப்பன் 1986ஆம் ஆண்டு தவிர்த்து, ஆடப்பட்டு வருகின்றன. 1968ஆம் ஆண்டு இந்தப் போட்டிகளில் தொழில்முறையாக விளையாடுபவர்களும் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு இவை ஓர் திறந்தநிலைப் போட்டிகளாக விளங்குகின்றன. ஆண்டின் முதல் முதன்மைப் போட்டியாக ஆஸ்திரேலிய ஓப்பன் சனவரியில் ஆடப்படுகிறது. இதனை அடுத்து பிரெஞ்சு ஓப்பன் மே-சூனிலும் விம்பிள்டன் சூன்-சூலையிலும் இறுதியாக யூ.எசு. ஓப்பன் ஆகத்து-செப்டம்பரிலும் நடைபெறுகின்றன.

ஒரே நாட்காட்டி ஆண்டில் இந்த நான்கு போட்டிகளிலும் ஒற்றையர் அல்லது இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் விளையாட்டாளர் (அல்லது அணி) பெருவெற்றி அடைந்ததாகக் கருதப்படுவர். இவர்கள் இந்த வெற்றிகளை,ஒரே நாட்காட்டி யாண்டில் அல்லாது, ஆனால் தொடர்ந்த போட்டிகளில் பெற்றிருப்பாரேயாயின், நாட்காட்டியல்லாத பெருவெற்றி பெற்றவராவர். தங்கள் வாழ்நாளில் எப்போதாவது இந்த நான்கு போட்டிகளிலும் வென்றிருந்தால், "வாழ்நாள் பெருவெற்றி" அடைந்தவராவர். 1988ஆம் ஆண்டு முதல் இந்த நான்கு போட்டிகளிலும் வென்று வேனில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் பெறுவாரேயாயின் அவர் "தங்க பெருவெற்றி" பெற்றவராக அறியப்படுவார்.[8] ஒரே ஆண்டில் இச்சாதனை புரிந்து தங்க பெருவெற்றி பெற்றவராக ஸ்டெபி கிராப் மட்டுமே திகழ்கிறார். அன்ட்ரே அகாசி மற்றும் ரஃபயெல் நதால் இந்தச் சாதனையை ஒரே நாட்காட்டி ஆண்டில் நிகழ்த்தாது "வாழ்நாள் தங்கப் பெருவெற்றி" பெற்றவர்களாக உள்ளனர்.[9]

திறந்த காலம்

பெருவெற்றித் தொடரில் (டென்னிசு) திறந்த காலம் (open era) என்பது தொழில் முறை ஆட்டக்காரர்களும் பெருவெற்றித் தொடரில் கலந்து அனுமதிகப்பட்ட காலத்தை குறிக்கும். 1968இல் இருந்து அனுமதிக்கப்படுகிறார்கள். 1968இக்கு முன்பு தொழில் முறை ஆட்டக்காரர்கள் அனுமதிக்கப்படவில்லை

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.