From Wikipedia, the free encyclopedia
கார்ல் ரோஜர்ஸ் (Carl Rogers, சனவரி 8, 1902 – பெப்ரவரி 4, 1987) ஒரு அமெரிக்க உளவியலாளர். அவரது "திசை காட்டா கருத்துரை வழங்கல்" முறை தற்கால உளச்சிகிச்சை முறைகளையும், அமைப்புக்கள் மற்றும் குழுமங்களுக்குள் விரோதங்களை நீக்க பயன்படுத்தப்படும் வழிமுறைகளையும் பெரிதும் பாதித்துள்ளது. கார்ல ரோஜர்ஸின் கருத்துக்கள் கல்வி முறையையும் ஆழமாகப் பாதித்தன. முன்பு பழக்கத்தில் இருந்த ஆசிரியர்-மைய கல்வி முறை மாணவர்-மைய கல்வி முறையாக மாறியது.
கார்ல் ரோஜர்ஸின் உளவியல் கருத்துக்களில் மனிதனின் தனித்துவத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதன் ஒரு தனி மனிதன். அவன் அவனுக்கென்ற தனித்துவமான சூழ்நிலையில் வளர்ந்து மற்றவர்கள் அனைவரையும் விட வித்தியாசமான நபராக இயல்பு பெறுகிறார். ஆகவே, அவரை கோடிக்கணக்கானோரில் ஒருவர் போல் கருதாமலும் அவர் குணாதிசயங்களை பொதுவான முறையில் ஆய்வு செய்யாமலும் அவரது தனித்துவமான திறமைகளையும் திறன்களையும் வளர்க்க நாம் உதவ வேண்டும்.
திசை காட்டா கருத்துரை வழங்கல் (Non-directive Counseling) முறையில் கருத்துரை வழங்குபவர் வாடிக்கையாளருக்கு திசைக் காட்டுவதற்கு பதிலாக, வாடிக்கையாளரே தனக்குப் பொருத்தமான திசையைத் தேட உதவி செய்கிறார். உளவியலாளர் ஒரு உதவிக்காரராக மட்டுமே செயல்படுகிறார். அவர் வாடிக்கையாளரிடம் கேள்விகள் கேட்டு கேட்டு வாடிக்கையாளரின் சிந்தனையில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டுகிறார். அவ்வாறு வாடிக்கையாளரே தன் மனதில் உள்ள குழப்பங்களை உணர்ந்து அவற்றை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வழி பிறக்கிறது.
திசை காட்டா கருத்துரை வழங்கல் முறை மனநோயாளிகளுக்கு மட்டும் அல்லாது சாதாரண மனிதர்களுக்கும் உதவியாக இருக்கிறது. பல நேரங்களில் உணர்ச்சிகள் காரணமாகவோ, மற்ற காரணங்களினாலோ ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சிந்திக்க முடியாத நிலை ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்னொருவர் ஒரு கண்ணாடி போல் நம் சிந்தனையையே நமக்கு பிரதிபலிப்பதன் மூலம் நம் சிந்தனையிலுள்ள கோளாறுகளை நாம் உணர உதவி செய்வார். இது தான் திசை காட்டா கருத்துரை வழங்கல் முறையின் அடிப்படை சித்தாந்தம்.
கார்ல் ரோஜர்ஸின் திசை காட்டா அனுகுமுறையின் பாதிப்பு கல்வி முறையிலும் பெரிதாகக் காண முடிகிறது. ஒருவர் தானே தனக்குத் உகந்த திசையைத் தேடும்போது அவருக்கென்று மிகப் பொருத்தமான திசையை நிர்ணயிக்க முடிகிறது என்று அடிப்பைடையில் அமைகிறது மாணவர் மைய கல்வி . இக்கல்வி முறையில் மாணவரே தன் தேவைக்கேற்ப தன் கல்வி தேவைகளை நிர்ணயம் செய்கிறார். ஆசிரியரின் பங்கு வெறும் ஒரு வழிநடத்துபவராகவே இருக்கும். ஆசிரியர் உரைகள் மூலமாக கற்றுக் கொடுத்து மாணவர் அதை மனப்பாடம் செய்வதல்லாமல், மாணவரே முன்சுறுசுறுப்புள்ளவனாக (proactive) கற்றுக்கொள்ளும் பணியில் இறங்குவார். அவருக்கு உதவி தேவைபடும்போது மட்டுமே ஆசிரியரை அனுகுவார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.