கருக்காலம்

From Wikipedia, the free encyclopedia

கருக்காலம் அல்லது கருத்தரிப்புக் காலம் (Gestational Age) என்பது தாயின் கருப்பையினுள் இருக்கும் முளையம் அல்லது முதிர்கருவின் வயதாகும். இது தாயின் இறுதியான மாதவிடாயின் முதல் நாளிலிருந்து கணிக்கப்படும். அல்லது கருக்கட்டல் நாளிலிருந்து 14 நாட்கள் முன்னராக வரும் நாளிலிருந்தும் கணிக்கப்படலாம். பொதுவாக மாதவிடாயின் முதலாவது நாளிலிருந்து 14 நாட்களின் பின்னரே கருக்கட்டல் நிகழும் என்ற எடுகோளைக் கொண்டே மாதவிடாய் முதல் நாளிலிருந்தான கணித்தல் முறை பின்பற்றப்படுகிறது[1]. இம்முறையின் இலகுவான தன்மையால், பொதுவாக இதுவே பயன்படுத்தப்படும் போதிலும், ஏனைய முறைகளும் பரிந்துரைக்கப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வருகின்றன[2]

உண்மையில் கருவின் வயதானது கருக்கட்டல் நிகழும் நாளின் பின்னரே தொடங்குமாயினும், இயற்கையான கருத்தரிப்பின்போது, சரியான கருக்கட்டல் நாளைத் தெரிந்துகொள்வது முடியாது என்பதனாலேயே இம்முறை பயன்பாட்டில் உள்ளது. கருக்கட்டல் நிகழுமாயின் கருப்பையில் புதிய கருவணு தங்கியதும், இயக்குநீர் செயற்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மாதவிடாய் ஏற்படல் தற்காலிகமாகத் தடைப்படும். மாதவிடாயானது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். இறுதி மாதவிடாய் ஏற்பட்டு 14 நாட்களில் புதிய கருமுட்டை சூலகத்தில் இருந்து வெளிவரும். எனவே இறுதி மாதவிடாய் நிகழ்ந்து 14 நாட்களில், அதாவது 2 கிழமைகளில் கருக்கட்டல் நிகழ்வதற்கான சாத்தியம் ஏற்படுகின்றது. பெண்களில் கருக்கட்டல் நிகழ்ந்து 38 கிழமைகளில் பொதுவாக குழந்தை பிறப்பு நிகழும். எனவே மாதவிடாய் ஒழுங்காக நிகழும் பெண்களில், இறுதி மாதவிடாய் ஆரம்பித்த நாளில் இருந்து 40 கிழமைகளில் குழந்தை பிறப்பு நிகழும். இறுதி மாதவிடாய் வந்த காலத்தைக் கருத்தில் கொண்டே, குழந்தை பிறப்பதற்கான நாள் தீர்மானிக்கப்படுவதனால், இந்தக் காலமே, அதாவது 40 கிழமைகளே முழுமையான கருக்காலம் அல்லது கருத்தரிப்புக் காலம் எனக் கணக்கிடப்படுகின்றது[1]. .

கருவளர் நிலைகள்
மேலதிகத் தகவல்கள் கருக்காலம் (கிழமை/நாட்களில்), வகைப்பாடு ...
கருக்காலம் (கிழமை/நாட்களில்)வகைப்பாடு
37/0 க்கு முன்னர்குறைப்பிரசவம்
37/0 - 38/6தவணைக்கு முன்னதான பிரசவம்[3]
39/0 - 40/6சரியான தவணையில் பிரசவம்[3]
41/0 - 41/6தவணைக்குப் பிந்திய பிரசவம்[3]
42/0 - க்குப் பின்னர்முதிர் பிறப்பு[3]
மூடு

மீயொலிப் பரிசோதனையின்போது முதிர்கருவை அளந்து பார்த்து, எப்போது கருக்கட்டல் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதைக் கணித்தும் குழந்தை பிறப்பிற்கான நாள் தீர்மானிக்கப்படும். இந்தக் கணிப்பானது கருக்கட்டல் நிகழ்ந்த நாளிலிருந்து, குழந்தையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கணிக்கப்படுகின்றது. குழந்தைப் பிறப்பிற்கான மிகச் சரியான நாளைத் தீர்மானிக்க முடியாத போதிலும் 8 - 18 கிழமைகளில் எடுக்கப்படும் அளவீடானது ஓரளவு திருத்தமான கணிப்பீடாக இருக்குமென கூறப்படுகின்றது[1].

இந்தக் கணிப்பீட்டின்படி 40 கிழமை கருக்காலத்திற்கு 2 கிழமைகள் முன்னராகவோ, 2 கிழமைகள் பின்னராகவோ, அதாவது (38-42 கிழமைகளில்), பொதுவாக குழந்தைப் பிறப்பு நிகழும். குழந்தை பிறப்பு 38 கிழமைக்கு முன்னர் நிகழுமாயின் அது குறைப்பிரசவம் அல்லது தவணைக்கு முன்னான பிறப்பு என்றும், 42 கிழமைகளின் பின்னர் நிகழுமாயின் முதிர் பிறப்பு அல்லது தவணைக்குப் பின்னான பிறப்பு எனவும் அழைக்கப்படும்.

அமெரிக்க பிரசவ மருத்துவர், பெண்ணோயியலாளர் குழுவின்[4] (ACOG) அறிக்கையின்படி, கருத்தரிப்புக் காலத்தை அளவிடுவதற்கான முக்கிய மூன்று முறைகள்[5]:

  • இறுதி மாதவிடாயின் ஆரம்ப நாள் (LMP) - ஆரம்பகால மீயொலிப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டால் அல்லது மீயொலிப் பரிசோதனை செய்யாவிட்டால்
  • மாதவிடாய் வந்த நாள் தெரிந்திராவிட்டால், ஆரம்பகால மீயொலிப் பரிசோதனை மூலம்
  • செயற்கை கருத்தரிப்பு முறையால் கருத்தரிப்பு நிகழ்ந்திருப்பின், கருக்கட்டல் நிகழ்ந்த நாள்

அடிக்குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.