நடு ஆசியாவிலுள்ள ஒரு நாடு From Wikipedia, the free encyclopedia
கசக்கஸ்தான் (/ˌkɑːzəkˈstɑːn/ (ⓘ) அல்லது /ˌkæzəkˈstæn/; காசாக்கு மொழி: Қазақстан Qazaqstan, உருசியம்: Казахстан [kəzɐxˈstan]), அதிகாரபூர்வமாக கசாக்குசுத்தான் குடியரசு, என்பது நடு ஆசியாவிலுள்ள ஒரு கண்டம் கடந்த தொடர்ச்சியான நாடாகும். இதன் ஒரு சிறுபகுதி கிழக்கு ஐரோப்பாவில் யூரல் ஆற்றுக்கு மேற்கே அமைந்துள்ளது.[2] கசாக்குசுத்தான் உலகின் மிகப்பெரிய நிலம்சூழ் நாடாகவும் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாகவும் உள்ளது. 2,727,300 சதுர கிலோமீட்டர்கள் (1,053,000 sq mi) பரப்பளவு கொண்ட இதன் பகுதி மேற்கு ஐரோப்பாவிலும் பெரியதாகும்.[2][7] இதன் எல்லைகளாக (வடக்கிலிருந்து வலஞ்சுழியாக) உருசியா, சீனா, கிர்கித்தான், உசுபெகித்தான், துர்க்மெனித்தான் மற்றும் கசுபியன் கடலின் பெரும்பகுதியும் காணப்படுகின்றன. கசக்குத்தானின் நிலவமைப்பு வெட்டவெளிகள், புல்வெளிகள், தைக்கா காடுகள், மலைப் பள்ளத்தாக்குகள், மலைகள், கழிமுகங்கள், பனிச்சிகரங்கள் மற்றும் பாலைவனங்களைக் கொண்டுள்ளது.இதன் மக்கள்தொகை (2013 கணிப்பீடு) 17 மில்லியனாகும்.[8] மக்கள்தொகை அடிப்படையில் கசாக்குசுத்தான் 62ம் இடத்திலுள்ளது. எனினும் இதன் மக்கள்தொகை அடர்த்தி சதுரக்கிலோமீற்றருக்கு 6 பேருக்கும் குறைவாகும். (சதுர மைலுக்கு 15 பேர்). 1997ல் இதன் தலைநகர் அல்மாடியிலிருந்து அஸ்தானாவுக்கு மாற்றப்பட்டது.
கசக்கஸ்தான் குடியரசு
| |
---|---|
நாட்டுப்பண்: Менің Қазақстаным மெனின் கசக்கஸ்தானிம் எனது கசக்கஸ்தான் | |
தலைநகரம் | நூர் சுல்தான் |
பெரிய நகர் | அல்மாத்தி |
ஆட்சி மொழி(கள்) | |
இனக் குழுகள் (2009[1]) |
|
மக்கள் | கசாக்[2] |
அரசாங்கம் | ஓரவை சனாதிபதி ஆட்சி |
• சனாதிபதி | நர்சுல்தான் நசர்பாயேவ் |
• பிரதமர் | செரிக் அக்மதோவ் |
சட்டமன்றம் | பாராளுமன்றம் |
• மேலவை | செனட் சபை |
• கீழவை | மஜிலிசு |
சுதந்திர நாடு சோவியத் ஒன்றியத்திடமிருந்து | |
பரப்பு | |
• மொத்தம் | 2,724,900 km2 (1,052,100 sq mi) (9வது) |
• நீர் (%) | 1.7 |
மக்கள் தொகை | |
• 2013 மதிப்பிடு | 16,967,000[3] (61வது) |
• அடர்த்தி | 5.94/km2 (15.4/sq mi) (224வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2012 மதிப்பீடு |
• மொத்தம் | $231.787 பில்லியன்[4] |
• தலைவிகிதம் | $13,892[4] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2012 மதிப்பீடு |
• மொத்தம் | $196.419 பில்லியன்[4] |
• தலைவிகிதம் | $11,772[4] |
ஜினி (2008) | 28.8[5] தாழ் |
மமேசு (2013) | 0.754[6] உயர் · 69வது |
நாணயம் | தெங்கே (₸) (KZT) |
நேர வலயம் | ஒ.அ.நே+5 / +6 (West / East) |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +7-6xx, +7-7xx |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | KZ |
இணையக் குறி |
|
கசக்குத்தானின் பகுதிகளில் வரலாற்றுக்காலம் முதல் நாடோடிக் குழுக்கள் குடியேறியுள்ளனர். 13ம் நூற்றாண்டில் செங்கிசு கான் நாட்டைக் கைப்பற்றிய பின் இது மாற்றமுற்றது. எனினும் அவனது குடும்பத்தினரின் அதிகாரப் போட்டி காரணமாகக் கசக்குத்தானின் ஆட்சி நாடோடிக் குழுக்களிடம் கைமாறியது. 16ம் நூற்றாண்டில் கசாக்குகள் ஒரு தனித்துவமான குழுவாக எழுச்சி பெற்றதுடன் மூன்று கோத்திரங்களாகவும் பிளவுற்றனர்.18ம் நூற்றாண்டளவில் உருசியர்கள் கசாக்கு சுடெப்பீ புல்வெளிகள் நோக்கி முன்னேறியதுடன் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கசக்குத்தானின் சகல பகுதிகளும் உருசியப் பேரரசின் ஒரு பகுதியாகியது. 1917ன் உருசியப் புரட்சியின் பின்பும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போரைத் தொடர்ந்தும், கசக்குத்தானின் பகுதிகள் மீளமைக்கப்பட்டு 1936ல், கசாக்கு சோவியத் சமவுடமைக் குடியரசு எனும் பெயரில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியானது.
1991ல் சோவியத் ஒன்றியத்தின் சிதறலையடுத்து இறுதியாக விடுதலையை அறிவித்த நாடு கசக்குத்தானாகும். தற்போதைய சனாதிபதியான நர்சுல்தான் நசர்பாயேவ் அவர்களே 1990இலிருந்து நாட்டின் தலைவராக உள்ளார். நாட்டின் அரசியலில் நசர்பாயேவ் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளார். விடுதலையடைந்ததிலிருந்து கசாக்குசுத்தான் ஒரு சமநிலை வாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதுடன் தனது பொருளாதாரத்தை விருத்தி செய்வதிலும், குறிப்பாகத் தனது ஐதரோகாபன் கைத்தொழிலை விருத்தி செய்வதிலும் ஈடுபட்டுள்ளது.[9]
கசாக்குசுத்தான் கலாசார மற்றும் இனப்பல்வகைமையுடைய நாடாகும். சோசப் சுடாலினின் ஆட்சியின்போது பல்வேறு இனக்குழுக்களின் நாடுகடத்தலும் இதற்குக் காரணமாகும். கசக்கஸ்தானின் சனத்தொகை 16.6 மில்லியனாக இருப்பதோடு 131 இனக் குழுக்களும் காணப்படுகின்றது. இவற்றுள் கசாக்குகள், உருசியர், உக்ரேனியர், செருமானியர், உசுபெக்கியர், தாத்தார்கள் மற்றும் உய்குர்கள் என்போர் குறிப்பிடத்தக்கோர். சனத்தொகையில் 63%மானோர் கசாக்குகளாவர்.[1] கசாக்குசுத்தான் சமயச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது. கசாக்குசுத்தான் ஓரளவு மதச் சகிப்புத்தன்மையுள்ள நாடாகும். ஆயினும் பிற்காலத்தில், மதச் சுதந்திர மீறல்களுக்காகச் சர்வதேச கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரந்துக்கான ஆணைக்குழு 2013ல் வெளியிட்ட அறிக்கையில், "இரண்டு வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட இறுக்கமான சட்டங்களின் பிரயோகம் காரணமாகக் கசாக்ஸ்தானினின் சர்வதேச மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதோடு பல கசாக்கு மக்களின் சமயச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளது.[10] சனத்தொகையில் 70%மானோர் இசுலாமியராக இருப்பதோடு, 26%மானோர் கிறித்தவராவர்.[11] நாட்டின் தேசிய மொழியாகக் கசாக்கு மொழி இருப்பதோடு, உருசிய மொழி உத்தியோகபூர்வ நிலையிலுள்ளது. சகல மட்டங்களிலுமுள்ள ஆவணங்களிலும் இரு மொழிகளும் இடம்பெற்றுள்ளன.[2][12]
"கசாக்கு" எனும் சொல் சீனா, ரசியா, துருக்கி, உசுபெகிசுத்தான் மற்றும் அருகில் உள்ள நாடுகளில் வாழும் கசாக்குகளின் வழித்தோன்றல்களை அழைக்கப் பயன்படுத்தப்படுவதோடு, "கசாக்குசுத்தானி" ([қазақстандық qazaqstandyk] error: {{lang-xx}}: text has italic markup (உதவி) ; உருசியம்: казахстанец kazakhstanyets) எனும் சொல் கசாக்குசுத்தானில் வாழும் அனைவரையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[13] "கசாக்கு" எனும் இனப் பெயர் "சுதந்திரம்; விடுதலை உணர்வு" எனப் பொருள்படும் பண்டைய துருக்கிய மொழிச் சொல்லிலிருந்து உருவானது. இக் கருத்து கசாக்குகளின் நாடோடி வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. பாரசீகப் பின்னொட்டான "இசுத்தான்" என்பது "இடம்" அல்லது "நிலம்" எனும் பொருளைத் தரும். ஆகவே கசாக்குசுத்தான் என்பது "கசாக்குகளின் நிலம்" எனும் பொருளைத் தரும்.
புதிய கற்காலப்பகுதியிலிருந்தே கசாக்குசுத்தானில் குடியிருப்புக்கள் இருந்துள்ளன. இப்பகுதியின் காலநிலையும் நிலப்பண்பும் கால்நடைவளர்ப்புக்கு உகந்ததாக இருந்ததால் நாடோடிகளின் வாழ்க்கைக்கும் உகந்ததாக இருந்தது. தொல்பொருளாய்வாளர்களின் கூற்றுப்படி இப்பகுதியில் காணப்படும் பரந்த தெப்பி புல்வெளியில் முதன்முதலில் மனிதர் குதிரைகளை வளர்த்துள்ளதாகத் தெரியவருகிறது.
மத்திய ஆசியாவில் உண்மையில் குடியேறியோர் இந்தோ-ஈரானியராவர். இவர்களுள் குறிப்பிடத் தக்க குழுவினர் நாடோடிகளான சித்தியர் ஆவர்.[14] கிபி 5ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியளவில் துருக்கிய மக்கள் ஈரானியர் மீது ஆக்கிரமிப்பு நடத்தினர். இவர்கள் மத்திய ஆசியாவில் செல்வாக்கு மிக்கோராக மாறினர். கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பட்டுப்பாதையின் வழித்தட நிலையங்களாகத் தராசு (ஓலி-அதா) மற்றும் அசுரத்து-இ துருக்கிசுத்தான் ஆகியன செயற்பட்டிருந்தாலும், உண்மையான அரசியல் ரீதியிலான ஒன்றிணைப்பு 13ம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட மங்கோலிய ஆக்கிரமிப்பின் பின்னரே ஆரம்பித்தது. மங்கோலியப் பேரரசின் கீழ், நிருவாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதோடு, இவை பின்னர் எழுச்சிபெற்றுவந்த கசாக்கு கானகத்தின் கீழ் வந்தன.
இக்காலப்பகுதியில், நாடோடி வாழ்க்கையும் கால்நடைவளர்ப்பின் அடிப்படையிலான பொருளாதாரமும் தெப்பி புல்வெளியில் ஆதிக்கம் செலுத்தின. 15ம் நூற்றாண்டில், துருக்கியக் குழுக்களிடையே தனித்துவம் மிக்க கசாக்கு அடையாளம் எழுச்சிபெறத் தொடங்கியதோடு, 16ம் நூற்றாண்டளவில் கசாக்கு மொழி, பண்பாடு மற்றும் பொருளாதாரம் என்பன உறுதிநிலை பெற்றது.
இதுதவிர, இப்பகுதி சுதேச கசாக்கு ஆமிர்களுக்கும் தெற்கே வசித்த பாரசீக மொழி பேசும் மக்களுக்குமிடையிலான அதிகரித்த குழப்பங்களுக்கும் நிலைக்களனாக விளங்கியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில், இனக்குழுக்களுக்கிடையிலான மோதல்கள் காரணமாகக் கசாக்கு கானகம் அல்லலுற்றது. இதனால், இதன் சனத்தொகை பெரும், மத்திய மற்றும் சிறு குழுக்களாகப் பிரிவடைந்தது. அரசியல் பிரிவினைகள், இனக்குழு மோதல்கள் மற்றும் கிழக்கு மற்றும் மேற்குக்கிடையிலான வர்த்தகப் பாதை முக்கியத்துவமிழப்பு என்பன கசாக்கு கானகத்தை வீழ்ச்சிப்பாதைக்கு இட்டுச் சென்றன. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கீவா கானகம் மங்கிசுலாக்கு குடாவை இணைத்துக் கொண்டது. ரசியர்களின் ஆக்கிரமிப்பு வரை இரண்டு நூற்றாண்டுகளுக்கு இங்கு உசுபெக்கு ஆட்சி நிலைத்திருந்தது.
17ம் நூற்றாண்டளவில் கசாக்குகள், சங்கார்கள் உள்ளிட்ட மேற்கு மங்கோலிய குழுக்களின் கூட்டமைப்பான ஒய்ராத்துகளுடன் போரிட்டனர்.[15] 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கசாக்கு கானகம் அதன் உச்சநிலையை எட்டியது. சங்கார்களின் கசாக்கு பகுதிகளின் மீதான "பேரழிவு" ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, இக்காலப்பகுதியில் சிறு குழுப் பகுதி 1723-1730 போரில் சங்கார்களுக்கு எதிராகப் போரிட்டது. சங்கார்கள், தோல்வியுற்ற கசாக்குகளின் புல்நிலங்களைக் கைப்பற்றியதோடு, பலரைச் சிறைப்பிடித்ததோடு பல இனக்குழுக்களின் கட்டமைப்பையும் சிதறடித்தனர்.[16] அபுல் கைர் கானின் தலைமையின் கீழ் கசாக்குகள், 1726ல் புலந்தி நதிக்கரையிலும் 1729ல் அன்ரகாய் போரிலும் சங்கார்களுக்கெதிராகப் பெருவெற்றி பெற்றனர்.[17] 1720களிலிருந்து 1750கள் வரை சங்கார்களுக்கெதிராக இடம்பெற்ற முக்கிய போர்களில் பங்குபற்றிய அப்லாய் கான், மக்களால் மாவீரராகப் போற்றப்படுகிறார்.மேலும் கசாக்குகள், வொல்கா கல்மிக்குகளின் தொடர்ச்சியான கொள்ளையடிப்புக்களுக்கும் இலக்காயினர். சங்கார்கள் மற்றும் கல்மிக்கு ஆக்கிரமிப்புகள் காரணமாகப் பலவீனமடைந்திருந்த கசாக்கு இனக்குழுக்கள்மீது படையெடுத்த கொகாந்து கானகம், 19ம் நூற்றாண்டின் முதல் கால்பகுதியில் கசாக்குசுத்தானின் தலைநகராயிருந்த அல்மாடி உள்ளிட்ட இன்றைய கசாக்குசுத்தானின் தென்கிழக்குப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். மேலும், ரசிய வருகைக்கு முன், சிம்கென்ட் பகுதியைப் புகாரா அமீரகம் ஆட்சி புரிந்தது.
19ம் நூற்றாண்டில், ரசியப் பேரரசு மத்திய ஆசியா நோக்கி விரிவடைந்தது. "பெரு விளையாட்டு" காலப்பகுதி பொதுவாக 1813லிருந்து 1907ன் ஆங்கில-ரசிய உடன்பாடு வரையான காலப்பகுதியாகக் கருதப்படுகிறது. தற்போதைய கசாக்குசுத்தானியக் குடியரசின் பகுதிகளை அப்போதைய சார் மன்னர்கள் சிறப்பாக ஆட்சி புரிந்தனர்.
பிரித்தானியப் பேரரசுடனான "பெரும் விளையாட்டு" ஆதிக்கப் போட்டியில், மத்திய ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில், இங்கு ரசியப் பேரரசு ஒரு நிர்வாகப் பொறிமுறையை அறிமுகப்படுத்தியதோடு காவலரண்களையும் நிர்மாணித்தது. முதலாவது ரசியக் காவலரணான ஓர்சுக்கு 1735ல் கட்டப்பட்டது. மேலும் அனைத்துப் பாடசாலைகள் மற்றும் அரசாங்க அமைப்புக்களிலும் ரசிய மொழி கட்டாயமாக்கப்பட்டது. ரசியாவினால் அதன் முறைமைகளை அறிமுகப்படுத்தும் செயற்பாடு கசாக்கு மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. கசாக்கு மக்களின் பாரம்பரிய நாடோடி வாழ்க்கை முறைமீதும் கால்நடை வளர்ப்பு அடிப்படையிலான பொருளாதார முறைமீதும் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் சில கசாக்கு இனக்குழுக்களையே அடியோடு அழிக்கக் காரணமாயிருந்த பஞ்சம் என்பன காரணமாக, 1860ம் ஆண்டளவில் பெரும்பாலான கசாக்குகள் ரசிய இணைப்பை அடியோடு எதிர்த்தனர். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான கசாக்கு தேசிய இயக்கம், தம்மீதான ரசியப் பேரரசின் அடக்குமுறையை எதிர்ப்பதனூடாகத் தமது சுதேச மொழியையும் தமது இன அடையாளத்தையும் பாதுகாக்கப் போராடியது.
1890களிலிருந்து, ரசியப் பேரரசிலிருந்து பாரியளவிலான குடியேற்றக்காரர்கள் கசாக்குசுத்தானின் பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். இவ்விடங்களில் செமிரெச்யே மாகாணம் குறிப்பிடத் தக்கதாகும். 1906ல் அமைத்து முடிக்கப்பட்ட, ஓரென்பேர்க்கிலிருந்து தாசுகென்ட் வரையிலான ஏரல் கடப்பு புகையிரதப் பாதையின் காரணமாக,குடியேற்றக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் இக்குடியேற்றச் செயற்பாடு புனித.பீட்டர்சுபேர்க்கில் விசேடமாக உருவாக்கப்பட்ட குடிப்பெயர்வுத் திணைக்களத்தினால் (Переселенческое Управление) மேற்பார்வை செய்யப்பட்டது. 19ம் நூற்றாண்டில், 400,000 ரசியர்கள் கசாக்குசுத்தானுக்கு குடிபெயர்ந்ததோடு, 20ம் நூற்றாண்டின் முன் மூன்றிலொரு காலப்பகுதியில் ஒரு மில்லியன் சிலாவியர், செருமானியர், யூதர் மற்றும் ஏனையோர் இப்பகுதியில் குடியேறினர்.[18] வசீலி பலபானோவ் என்பவர் இக்குடியேற்றப் பகுதிகளின் நிருவாகியானார்.
கசாக்குகளுக்கும் புதிய குடியேற்ற வாசிகளுக்குமிடையில் நிலம் மற்றும் நீருக்காக ஏற்பட்ட போட்டி காரணமாகச் சாரிய ரசியாவின் இறுதிக் காலப் பகுதியில் குடியேற்றவாத ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. இவற்றுள் மிகவும் கொடிய கிளர்ச்சி 1916ல் ஏற்பட்ட மத்திய ஆசியக் கலகமாகும். கசாக்குகள், ரசியர்கள் மற்றும் கொசாக்கு குடியேற்றக்காரர்களையும் இராணுவக் காவலரண்களையும் தாக்கினர். இக்கலகம் காரணமாகப் பல மோதல்கள் உருவானதோடு இருதரப்பினராலும் கொடூரப் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன.[19] 1919ன் இறுதிப் பகுதிவரை இரு தரப்பினரும் பொதுவுடமை அரசாங்கத்தை எதிர்த்தனர்.
ரசியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட கொந்தளிப்பான ஒரு குறுகிய காலப்பகுதியில் கசாக்குசுத்தான் சுயாட்சி (அலாசு சுயாட்சி) பெற்றிருந்தது. இதன் பின், கசாக்குசுத்தான் சோவியத் ஆட்சிக்குள் உள்வாங்கப்பட்டது. 1920ல், இன்றைய கசாக்குசுத்தான் பகுதி, சோவித் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரு சுயாட்சிக் குடியரசாகியது.
மேல்தட்டு வர்க்கத்தினர் மீதான சோவியத் அடக்குமுறை மற்றும் 1920கள் மற்றும் 1930களில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயக் கூட்டுப்பண்ணைத் திட்டம் காரணமாகப் பெரும் பஞ்சம் ஏற்பட்டதுடன் கலகங்களும் உருவாகின.[20][21] 1926க்கும் 1939க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பட்டினி மற்றும் குடியகல்வு என்பன காரணமாகக் கசாக்கு மக்கள்தொகை 22% வீழ்ச்சியடைந்தது. இன்றைய மதிப்பீடுகளின் படி பட்டினியும் குடியகல்வும் ஏற்படாதிருந்தால் கசாக்குசுத்தானின் மக்கள்தொகை சுமார் 20 மில்லியனாக இருக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.[சான்று தேவை] 1930களில், அடக்குமுறை மற்றும் கசாக்கு அடையாளம் மற்றும் பண்பாட்டை அழித்தல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு, பல புகழ்பெற்ற கசாக்கு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வரலாற்றியலாளர்கள் போன்றோர் ஸ்டாலினின் ஆணையின் கீழ் கொல்லப்பட்டனர். சோவியத் ஆட்சி நிறுவப்பட்ட பின், கசாக்குசுத்தானை சோவியத் முறைமையுடன் ஒன்றிணைக்கும் வகையில் சமவுடைமை அரசொன்றும் செயற்படத் தொடங்கியது. 1936ல் கசாக்குசுத்தான் ஒரு சோவியத் குடியரசாக உருவானது. 1930கள் மற்றும் 1940களில் சோவியத் ஒன்றியத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து நாடுகடத்தப்பட்டோரின் உள்வருகையைச் சந்தித்தது. கசாக்குசுத்தானின் இன மரபுரிமைகள் அல்லது நம்பிக்கைகள் காரணமாக நாடுகடத்தப்பட்டோரில் பெரும்பாலானோர் கசாக்குசுத்தான் அல்லது சைபீரியாவுக்கே நாடுகடத்தப்பட்டனர். உதாரணமாக, சூன் 1941ல் செருமானிய ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 400,000 வொல்கா செருமானியர் உக்ரேனிலிருந்து கசாக்குசுத்தானுக்கு மாற்றப்பட்டனர்.
நாடுகடத்தப்பட்டோர் பாரிய சோவியத் தொழிலாளர் முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவற்றுள் அசுதானாவுக்கு வெளியே அமைக்கப்பட்ட அல்சைர் முகாமும் அடங்கும். இம்முகாமில் "மக்களின் விரோதிகள்" எனக் கருதப்படுவோரின் மனைவிமார் அடைக்கப்பட்டிருந்தனர்.[22] இரண்டாம் உலகப்போரின்போது சோவியத் ஒன்றியத்தின் சார்பில் கசாக்குசுத்தானிலிருந்து ஐந்து படைப்பிரிவுகள் சேவையாற்றின. போர் முடிந்து இரண்டாண்டுகளின் பின், அதாவது 1947ல், செமே நகருக்கு அண்மையில் அமைக்கப்பட்ட செமிபலாடின்சுகு பரிசோதனைக்களம், சோவியத் ஒன்றியத்தின் முக்கிய அணுவாயுதப் பரிசோதனைக் களமாகச் செயற்பட்டது.
இரண்டாம் உலகப்போரின்போது, போர் முயற்சிகளுக்கு ஆதரவாகக் கைத்தொழில்மயமாக்கலும் கனிய அகழ்வும் அதிகரித்தன. எவ்வாறாயினும், சோவியத் தலைவர் ஸ்டாலினின் இறப்பு வரை, கசாக்குசுத்தான் பெரும்பாலும் விவசாயப் பொருளாதாரத்தையே கொண்டிருந்தது. கசாக்குசுத்தானின் பாரம்பரியப் புல்வெளிகளைச் சோவியத் ஒன்றியத்தின் பாரிய தானிய விளைநிலங்களாக மாற்றும் பொருட்டு, 1953ல், சோவியத் தலைவர் நிகிட்டா குருசேவ் விளைநிலத் திட்டத்தை முன்னெடுத்தார். இத்திட்டம் பொதுப்படையான விளைவுகளையே அளித்தது. எனினும், சோவியத் தலைவர் லியோனிட் பிரெசினேவின் பின்னைய நவீனமயமாக்கல் திட்டங்கள் காரணமாக, கசாக்குசுத்தான் மக்கள்தொகையில் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமாகக் காணப்பட்ட விவசாயத்துறையில் துரித அபிவிருத்தி ஏற்பட்டது. 1959ம் ஆண்டளவில், கசாக்குகள் மக்கள்தொகையில் 30%மாகவும், ரசியர்கள் 43%மாகவும் காணப்பட்டனர்.[23]
1980களில் சோவியத் சமுதாயத்தில் அதிகரித்த முறுகல்கள் காரணமாக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்பற்றிய கோரிக்கைகள் முதன்மை பெற்றன. 1949ல், லாவ்ரென்டி பேரியாவால், கசாக்கு சோவியத் சமவுடமைக் குடியரசின் செமே பகுதியில் அணுகுண்டுப் பரிசோதனை நடத்த எடுக்கப்பட்ட முடிவு இதற்கு முக்கிய காரணமாகும். இதன் காரணமாகப் பாரிய சூழலியல் மற்றும் உயிரியல் அனர்த்தங்கள் ஏற்பட்டன. இது பல வருடங்களுக்குப் பின்னரே உணரப்பட்டது. இதன் காரணமாகச் சோவியத் ஒன்றியம்மீது கசாக்குகளின் எதிர்ப்பு அதிகரித்தது.
டிசெம்பர் 1986ல், கசாக்கு சோவியத் சமவுடமைக் குடியரசின் பொதுவுடமைக் கட்சிப் பொதுச் செயலாளராக இருந்த தின்முகாமெத் கோனாயேவ் என்பவருக்குப் பதிலாக ரசிய சோவியத் கூட்டுச் சமவுடமைக் குடியரசின் கென்னடி கொல்பின் என்பவரை நியமித்தமைக்கு எதிராக, கசாக்கு இளைஞர்களால், பின்னர் செல்தோக்சான் கலகமென அழைக்கப்பட்ட, பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கப் படைகள் கலகத்தை அடக்கின. பல மக்கள் கொல்லப்பட்டதோடு, ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரும் சிறையிலிடப்பட்டனர். சோவியத் ஆட்சியின் இறுதி நாட்களின்போது, ஆட்சிக்கெதிரான அதிருப்தி அதிகரித்ததோடு, சோவியத் தலைவர் மிகேல் கோர்பச்சேவின் கிளாசுனொசுட் கொள்கைக்கெதிரான கருத்துக்களும் தோன்றின.
டிசம்பர் 16, 1991ல் இது சுதந்திரமடைந்தது. இதுவே இறுதியாகச் சுதந்திரம் பெற்ற சோவியத் குடியரசாகும். பொதுவுடமைக் காலத் தலைவரான நர்சுல்தான் நசர்பாயேவ் நாட்டின் முதல் சனாதிபதியானதோடு, அடுத்த இரண்டு தசாப்த காலத்துக்கு அவரே பதவி வகித்தார். நாட்டின் அரசியல் மீது நசர்பாயேவ் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.
சுயாட்சி வேண்டிய சோவியத் குடியரசுகளின் கருத்துக்களை உள்வாங்கியமையால், ஒக்டோபர் 1990ல் கசாக்குசுத்தான், சோவியத் சமவுடமைக் குடியரசுகளின் ஒன்றியத்தினுள்ளேயே தன்னை ஒரு இறைமையுள்ள குடியரசாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது. ஆகத்து 1991ல் மாசுகோவில் நடத்தப்பட்ட தோல்வியடைந்த கிளர்ச்சி நடவடிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு என்பவற்றைத் தொடர்ந்து, டிசெம்பர் 16, 1991ல் கசாக்குசுத்தான் தனது சுதந்திரத்தை அறிவித்தது. சோவியத் குடியரசுகளிலேயே இறுதியாகச் சுதந்திரத்தை அறிவித்தது கசாகுசுத்தானாகும்.
சுதந்திரத்துக்குப் பின்னான ஆண்டுகளில் சோவியத் சார்புப் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலை என்பவற்றில் குறிப்பிடத் தக்க சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1989ல் கசாக்குசுத்தான் பொதுவுடமைக் கட்சியின் தலைவராகவும், பின்னர் 1991ல் கசாக்குசுத்தானின் சனாதிபதியாகவும் தெரிவுசெய்யப்பட்ட நர்சுல்தான் நசர்பாயேவின் ஆட்சியின் கீழ் கசாக்குசுத்தான் சந்தைப் பொருளாதாரத்தை விருத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
1998ல் கசாக்குசுத்தானின் தலைநகர், நாட்டின் மிகப்பெரிய நகரான அல்மாடியிலிருந்து, அசுதானாவுக்கு மாற்றப்பட்டது.
தனியாள் கூட்டமைப்புச் செயற்திட்டம் எனப்பட்ட ஒப்பந்தம் சனவரி 31, 2006ல், NATO, உக்ரேன், ஜோர்ஜியா, அசர்பைசான் மற்றும் ஆர்மீனியா ஆகியவற்றுக்கிடையில் கையெழுத்திடப்பட்டது. (பின்னர் இணைந்த நாடுகள், மோல்டோவா, பொசுனியா மற்றும் எர்சகோவினா மற்றும் மொன்டெனேக்ரோ என்பனவாகும்.)
யூரல் நதியின் இருபுறமும் அமைந்துள்ளதால், இரு கண்டங்களில் அமைந்துள்ள நிலம்சூழ் நாடு எனும் சிறப்பைக் கசாக்குசுத்தான் பெற்றுக் கொள்கிறது.
2,700,000 சதுர கிலோமீட்டர்கள் (1,000,000 sq mi) பரப்பளவைக் கொண்டு, கசாக்குசுத்தான் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாகவும், உலகின் மிகப்பெரிய நிலம்சூழ் நாடாகவும் உள்ளது. இதன் பரப்பளவு மேற்கு ஐரோப்பாவின் பரப்பளவுக்கு இணையானது. சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்கையில், கசாக்குசுத்தானின் சில பகுதிகள் சீனாவின் சின்சியாங் பகுதிக்கும்[சான்று தேவை] உசுபெகிசுத்தானின் கரகல்பகுசுத்தானுக்கும் அளிக்கப்பட்டன. இது ரசியாவுடன் 6,846 கிலோமீட்டர்கள் (4,254 mi) நீளமான எல்லையையும், உசுபெகிசுத்தானுடன் 2,203 கிலோமீட்டர்கள் (1,369 mi) நீளமான எல்லையையும், சீனாவுடன் 1,533 கிலோமீட்டர்கள் (953 mi) நீளமான எல்லையையும், கிர்கிசுத்தானுடன் 1,051 கிலோமீட்டர்கள் (653 mi) நீளமான எல்லையையும், துருக்மெனிசுத்தானுடன் 379 கிலோமீட்டர்கள் (235 mi) நீளமான எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது. முக்கிய நகரங்கள் அசுதானா, அல்மாடி, கரகண்டி, சிம்கென்ட், அடிரௌ மற்றும் ஒசுகெமென் என்பனவாகும். இது வட அகலாங்கு 40°, வட அகலாங்கு 56°, கிழக்கு நெட்டாங்கு 46° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 88° ஆகியவற்றுக்கிடையில் அமைந்துள்ளது. இது பெரும்பாலும் ஆசியாவில் அமைந்துள்ளபோதிலும், கசாக்குசுத்தானின் சிறுபகுதி யூரல் மலைகளுக்கு மேற்கே கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது.[24]
கசாக்கு நிலப்பகுதி மேற்கே கசுபியன் கடலிலிருந்து கிழக்கே அல்டாய் மலைத்தொடர் வரையிலும், வடக்கே மேற்குச் சைபீரியச் சமவெளியிலிருந்து தெற்கே மத்திய ஆசியப் பாலைவனங்கள் மற்றும் பாலைவனச்சோலைகள் வரையிலும் பரந்துள்ளது. 804,500 சதுர கிலோமீட்டர்கள் (310,600 sq mi) பரப்பளவு கொண்ட கசாக்கு தெப்பீ நாட்டின் மூன்றிலொரு பகுதியை உள்ளடக்கியுள்ளதோடு, உலகின் மிகப்பெரிய உலர் தெப்பி வலயமாகவும் காணப்படுகிறது. தெப்பீ நிலப்பரப்பு பாரிய புல்வெளிகளையும் மணற் பகுதிகளையும் கொண்டுள்ளது. ஏரல் கடல், இலி நதி, இர்திசு நதி, இசிம் நதி, யூரல் நதி, சிர் தர்யா, சாரின் நதி மற்றும் பள்ளத்தாக்கு, பல்காசு ஏரி மற்றும் சேசான் ஏரி என்பன குறிப்பிடத் தக்க நதி மற்றும் ஏரிகளாகும்.
நாட்டின் காலநிலை வெப்பமான கோடைகாலம் மற்றும் குளிரான குளிர்காலம் என்பன கொண்ட கண்டக் காலநிலையாகும். படிவு வீழ்ச்சியின் படி இது வறள் மற்றும் அரை வறள் வலயத்தினுள் அமைந்துள்ளது.
சாரின் பள்ளத்தாக்கு 150–300 மீற்றர் ஆழமும், 80 கிலோமீட்டர்கள் (50 mi) நீளமும் கொண்டது. இது செம்மணற்கல் நிலத்தினூடாகச் சென்று வடக்கு தியான் சானில் ("சொர்க்கத்து மலைத்தொடர்கள்", அல்மாடிக்குக் கிழக்கே 200 km (124 mi)) உள்ள சாரின் நதிப் பள்ளத்தாக்கு வரை விரிகிறது. செங்குத்தான மலைச்சரிவுகள், மலைத்தூண்கள் மற்றும் வளைவுகள் என்பன 150-300 மீற்றர் உயரம் வரை வேறுபடுகின்றன. மலைப்பள்ளத்தாக்கு அணுகவியலாத் தன்மை கொண்டுள்ளதால், இது பனி யுகக் காலத்தில் காணப்பட்ட அரிய வகைச் சாம்பல் மரத்தின் புகலிடமாக விளங்குகிறது. இம்மரம் தற்போது ஏனைய பகுதிகளிலும் வளர்கிறது. பிகாச் குழி என்பது பிளியோசீன் அல்லது மையோசீன் காலத்து எரிகற்குழியாகும். இதன் விட்டம் 8 km (5 mi) ஆகும். 5±3 மில்லியன் ஆண்டுகள் பழமையான இதன் அமைவிடம் 48°30′N 82°00′E ஆகும்.
கசாக்குசுத்தான் 14 மாகாணங்களாகப் ([облыстар, oblıstar] error: {{lang-xx}}: text has italic markup (உதவி)) பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்கள் மேலும் மாவட்டங்களாகப் ([аудандар, awdandar] error: {{lang-xx}}: text has italic markup (உதவி)) பிரிக்கப்பட்டுள்ளன.
அல்மாடி மற்றும் அசுதானா நகரங்கள் தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு எந்த மாகாணங்களுடனும் இணைக்கப்படவில்லை. பைக்கானூர் நகர் சிறப்பு நிலை பெற்றுள்ளது. ஏனெனில் இது 2050 வரை பைக்கானூர் ஏவுதளத்துடன் சேர்த்து ரசியாவுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது.[2]
ஒவ்வொரு மாகாணத்துக்கும் சனாதிபதியால் நியமிக்கப்படும் அகிம் (மாகாண நிர்வாகி) தலைமை வகிப்பார். நகர அகிம்கள் மாகாண அகிம்களால் நியமிக்கப்படுவர். டிசம்பர் 10, 1997ல் கசாக்குசுத்தான் அரசாங்கம் தனது தலைநகரை அல்மாடியிலிருந்து அசுதானாவுக்கு மாற்றிக்கொண்டது.
இரண்டாம் நிலைக்கல்வி வரை அனைவருக்கும் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம் 99.5%மாகும். கல்வி மூன்று கட்டங்களாகக் காணப்படுகிறது. முதல் நிலைக் கல்வி (படிவம் 1-4), அடிப்படைப் பொதுக் கல்வி (படிவம் 5-9) மற்றும் உயர்நிலைக் கல்வி (படிவம் 10-11 அல்லது 12) என்பனவாகும். இவை தடர் பொதுக் கல்வி மற்றும் தழிற்கல்வியென இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (முதல் நிலைக் கல்விக்கு முன் ஓராண்டு முன்பள்ளிக் கல்வி உண்டு.) இவ்வெவ்வேறு கட்டங்களை ஒரே பாடசாலையிலோ அல்லது வெவ்வேறு பாடசாலைகளிலோ கற்க முடியும் (உதாரணமாக முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்லூரிகளில் தனித்தனியே கற்க முடியும்). அண்மைக் காலங்களில் சில இரண்டாம் நிலைக் கல்லூரிகள், விசேட பாடசாலைகள், உடற்பயிற்சி அரங்குகள், மொழியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தொழிற்கல்வி, தொழிற்பயிற்சி அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகளில் அளிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் பல்கலைக்கழகங்கள், கல்வியியற் கல்லூரிகள், கல்வி நிறுவகங்கள், இசைக்கல்லூரிகள் மற்றும் உயர் கல்லூரிகள் என்பன காணப்படுகின்றன. இவ்வுயர் கல்வியில் மூன்று நிலைகள் உள்ளன. முதலாம் நிலை, அடிப்படை உயர் கல்வியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாடத் துறையில் அடிப்படைத் தகைமையை வழங்கி இளமாணிப் பட்டத்துக்கு இட்டுச் செல்கின்றது. அடுத்த நிலையில், குறித்த தெரிவுப் பாட நெறியில் சான்றிதழ்ப் பட்டக் கல்வி வழங்கப்படுகிறது. இறுதி நிலையில் விஞ்ஞான ரீதியிலான உயர்கல்வி மூலம் முதுமாணிப்பட்டம் வழங்கப்படுகிறது. பட்டப்பின் படிப்பின்மூலம் கலாநிதிப் பட்டத்தைப் பெற முடியும். கல்வி மற்றும் உயர்கல்வியில் கொண்டுவரப்பட்ட சட்டங்களின் மூலம் தனியார்க் கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கசாக்குசுத்தானில் உள்ள 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட மொத்தத் தொகை 9 மில்லியன் டொலர்களாகும். அதிகளவான மாணவர் கடன்கள் அல்மாடி, அசுதானா மற்றும் கிசிலோர்தா ஆகிய நகரங்களில் பெறப்பட்டுள்ளன.[25]
கசாக்குசுத்தானியக் கல்வியமைச்சினால் "போலாசாக்" எனப்படும் புலமைப்பரிசில் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 5,000 கசாக்குசுத்தான் குடிமகன்களுக்கு வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிசிலின் மூலம் உதவி பெறுவோருக்கு, கல்விக்கான நிதி, வெளிநாட்டில் வாழ்வதற்கான வாழ்க்கைச் செலவு என்பவற்றோடு வருடத்தில் ஒருமுறை பல்கலைக்கழகத்திலிருந்து வீடு வந்து திரும்புவதற்கான பயணச் செலவு என்பன வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரி வெளிநாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் கல்விகற்கத் தேவையான நிபந்தனைகளைத் திருப்தி செய்திருந்தால் குறித்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் இணைய முடியும். புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் எடின்பரோ பல்கலைக்கழகம், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம், ஆர்வார்டு பல்கலைக்கழகம், லண்டன் அரசுக் கல்லூரி, டொரன்டோ பல்கலைக்கழகம், ஒக்சுபோட்டுப் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, பேர்டூ பல்கலைக்கழகம், மசாசூசெட்சு தொழில்நுட்ப நிறுவகம், சிட்னிப் பல்கலைக்கழகம், மியூனிச் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், லண்டன் இம்பீரியல் கல்லூரி, தோக்கியோ பல்கலைக்கழகம், வார்விக் பல்கலைக்கழகம் மற்றும் பல கல்வி நிறுவகங்களில் கல்வி பயில முடியும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர்கள் கட்டாயமாக மீண்டும் நாட்டுக்குத் திரும்பி, தொடர்ச்சியாகக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பது இப்புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொள்வதில் உள்ள முக்கிய விதிமுறையாகும்.
நவம்பர் 2012ல், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 183 உறுப்பு நாடுகள் மனித உரிமைகள் அமைப்பில் மூன்று வருடக் காலத்துக்குச் சேவையாற்றும் வகையில் கசாக்குசுத்தானைத் தேர்ந்தெடுத்தன. இவ்வமைப்பு உலகெங்கிலுமுள்ள அடக்கப்பட்ட மக்களின் மனித உரிமைச் சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் அமைப்பாகும்.[26]
2009ல் கசாக்குசுத்தான் ஒரு மனித உரிமைகள் செயற்திட்டமொன்றை வெளியிட்டது.[27]
கசாக்குசுத்தான் 2002ல் மனித உரிமைகள் குறைகேளதிகாரிப் பதவியை உருவாக்கியது. இதன்மூலம், அரச அதிகாரிகள்மூலம் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகள் குறைக்கப்பட்டு பாதுகாப்பான சட்ட அமுலாக்கம் ஏற்படுத்தப்படுவதோடு கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தலும் விரிவாக்கலும் நடைமுறைப்படுத்தப்படும்.[28]
2002 மார்ச் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆணையொன்றில் (அரசாங்கத்தை வாதியாகக் குறிப்பிட்டு) "ரெசுபப்லிகா" பத்திரிகையை அச்சிடுவதை மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.[29] எனினும், இவ்வாணையை ஏய்க்கும் வகையில் அப்பத்திரிகை வேறு தலைப்புகளில் (உதாரணமாக, "நொட் தற் ரெசுபப்லிகா" - அந்த ரெசுபப்லிகா அல்ல) வெளியிடப்பட்டது.[29]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.