ஒருங்கியம் என்பது ஏதொன்றும் அதன் உறுப்புகளோடு சேர்ந்து, ஒருங்கிணைந்து, முழுவதுமாக சேர்ந்து இயங்கும் ஒன்று. எடுத்துக்காட்டாக மாந்தனின் உடல் ஓர் ஒருங்கியம். உடலின் உறுப்புகள் (இதயம், நுரையீரல், குடல், கண், காது முதலியன) ஒன்றுடன் ஒன்று பல்வேறு வகைகளில் தொடர்பும் உறவும் கொண்டு உடல் என்னும் ஒன்றை சேர்ந்து இயக்குவதால் (இயங்குவதால்), உடல் ஓர் ஒருங்கியம்.
ஒருங்கியம் என்பது பருப்பொருட்களால் மட்டும் ஆனதாக இல்லாமல், கருத்துப்பொருளாகவும், நுண்புலமாகவும் (abstract) கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக எண்களும் அவற்றின் இடையே வரையறை செய்த உறவுகளும் (கூட்டல், பெருக்கல் முதலானவை) எல்லாமும் சேர்ந்த ஓர் அறிவுப்பரப்பையும் ஓர் ஒருங்கியம் எனலாம். மேற்பட்டப் படிப்புக்காக ஒரு மாநிலத்தில் அமைக்கப்பட்ட பல பல்கலைக்கழகங்களையும் அவற்றின் இயக்கப்பாடுகளையும் ஒருசேர எண்ணும் பொழுது அவற்றைப் பல்கலைக்கழக ஒருங்கியம் எனலாம். எனவே ஒருங்கியம் என்பது ஒன்றின் உறுப்புகளும், அவை ஒருங்கிணைந்து இயங்கும் முழுவதுமான ஒன்றும் சேர்ந்த ஒன்றாகும் . ஒருங்கியம் என்பதை அமைப்பு, அமையம், சமைதியம், முறை, முறைமை என்றும் சில சூழல்களில் அழைக்கப்படும்.
அறிவியல், பொறியியல், மருத்துவம், சமூகவியல் (குமுகவியல்) போன்ற பல அறிவுத்துறைகளில் ஒருங்கியம் என்னும் கருத்தும் அதன் பண்புகளும் விரிவாக அலசப்படுகின்றன.
ஒருங்கியத்தின் பொதுவான பண்பியல்புகளைக் கீழ்க்காணுமாறு கொள்ளலாம்:
ஒருங்கியம் என்பது உண்மையில் உள்ள ஒன்றின் கருத்தளவிலான உருவகம். நுண்புல கருத்துருவாக்கம்.
ஒருங்கியம் என்பது தனக்கென ஓர் உள்கட்டமைப்பும் உறுப்புகளும் உறவுகளும் கொண்டிருக்கும்
ஒருங்கியம் என்பது தனக்கென ஓர் இயக்கப்பாடு, நடத்தை, இயங்குமுறை கொண்டிருக்கும்
ஒருங்கியம் என்பது தன்னைச் சூழ்ந்துள்ள சூழகத்துடன், ஏதேனும் வகைகளில் ஆற்றல், பொருள் போன்றவற்றை கொடுக்கல்-வாங்கல் உறவுகளுடன் இயங்கும்.
ஒருங்கியம் அல்லது முறை, முறைமை, அமையம், அமைப்பு, சமைதியம் என்பது, ஆங்கிலத்தில் System என்றும் மேற்கு ஐரோப்பிய மொழிகளில் தொடர்பான சொற்களாலும் குறிக்கப்பெறுகின்றது. இச்சொல் கிரேக்க மொழியில் உள்ள σύστημα (systēma, ˘சி˘ச்"டீமா) என்னும் சொல்லில் இருந்தும் அதன்வழி இலத்தீன் மொழியில் உள்ள systēm (˘சி˘ச்"டீம்) என்னும் சொல்லில் இருந்தும் பெற்றது.
19 ஆவது நூற்றாண்டில் ஒருங்கியம் (system) என்னும் கருத்துருவை இயற்கை அறிவியலில் முதன் முதல் பயன்படுத்தியவர் பிரான்சிய இயற்பியலாளர் நிக்கொலா லியோனார்டு சாடி கார்னோ. இவர் 1824 இல் வெப்ப இயக்கவியல் பற்றி ஆய்வு செய்தபொழுது நீராவி இயந்திரத்தில், நிராவிப் பொருளை “இயங்கும் பொருள்” என்னும் கருத்தில் “system” என்னும் கருத்தை ஆண்டார். இந்த இயங்கும் பொருள் தன்னிடம் இருந்து வெப்பத்தைத் தரவும், வெப்பத்தை ஏற்கவும், உடன் இயங்கும் உந்துகையை (piston) இயக்கவும் உதவுவதாக எண்ணி ஆய்ந்தார்.
1850 இல் வெப்ப இயக்கவியலில் அடிப்படை ஆய்வுகள் செய்த டாய்ட்சு (செருமன்) இயற்பியலாளர் உருடோல்ஃவு கிளௌசியசு (Rudolf Clausius) இக் கருத்தை விரிவு செய்து பொதுமைப்படுத்தி, சூழ்ந்திருக்கும் சூழல் நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு “இயங்கும் உருப்படி” ("working body") என்று System ஐ (ஒருங்கியத்தைக்) குறித்தார்.
பொது ஒருங்கியக் கொள்கை (கருத்தியம்) (general systems theory) என்பதின் முன்னோடி லூடுவிக் வான் பெர்டலான்ஃவி(Ludwig von Bertalanffy) என்னும் உயிரியல் அறிஞர். இவர் 1945 இல் “பொதுமைப் படுத்தப்பட்ட ஒருங்கியங்களுக்கும் அவற்றின் துணை இயக்கங்களுக்கும், அவை எப்படிப்பட்ட வகை என்று கவலைகொள்ளாமலும் அவற்றின் இயல்பும் அவற்றின் உறுப்புகளும், அவற்றின் தொடர்புகளும், அவற்றிடையே உள்ள விசைகளையும் அறியாமலே, அவ் ஒருங்கியங்களுக்கான ஒப்புருக்களும், கொள்கைகளும், விதிகளும்” (models, principles, and laws that apply to generalized systems or their subclasses, irrespective of their particular kind, the nature of their component elements, and the relation or 'forces' between them.)[1] என்னும் கருத்தை முன்வைத்தார்.
சிசிட்டம் (ஒருங்கியம்) என்னும் கருத்துருவை குறிப்பிடத்தக்க வகையில் கணித அடிப்படையில் வளர்த்தெடுத்தவர்களில் நோர்பெர்ட் வீனெர் (Norbert Wiener), இராசு ஆழ்சுபி (Ross Ashby) ஆகியோர் அடங்குவர் [2][3].
1948, Cybernetics: Or the Control and Communication in the Animal and the Machine. Paris, France: Librairie Hermann & Cie, and Cambridge, MA: MIT Press.Cambridge, MA: MIT Press.