ஒட்டுண்ணி வாழ்வு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
Remove ads
ஒட்டுண்ணி வாழ்வு (Parasitism) என்பது, ஓருயிரானது மற்றோருயிரைச் சார்ந்து, அதனின்றும் தனக்கு வேண்டிய உணவைப் பெற்று வாழ்ந்து வருமானால், அது ஒட்டுண்ணி எனப்படும். ஒட்டுண்ணி ஒட்டியுள்ள உயிர், ஆதாரவுயிர் அல்லது ஊட்டுயிர் (Host) அல்லது ஓம்புயிர் எனவும் அழைக்கப்படும். இதில், ஒரு உயிரினம், மற்ற உயிரினத்துடன் நீண்டகால, நெருக்கமான தொடர்பை வைத்துக்கொண்டு பயன் பெறுகின்றது. இங்கே முதல் உயிரினம் ஒட்டுண்ணி எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தொடர்பின் மூலம் ஓம்புயிருக்குப் பாதிப்பு உண்டாகின்றது. பொதுவாக ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களிலும் மிகவும் சிறிய உருவத்தினைப் பெற்று இருக்கும். ஒட்டுண்ணிகள் தமது வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு சிறப்பாக்கம் பெற்றிருப்பதுடன்; ஓம்புயிர்களிலும் விரைவாகவும், பெருமளவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. ஒட்டுண்ணிகளோ, ஓம்புயிர்களிலிருந்து உணவு, வாழிடம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு பரவுவதன் மூலம், தங்கள் உடல்நலத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. ஒட்டுண்ணிகளில் தாவரங்களும், பிராணிகளும், தீநுண்மம் என பலவகை உயிர்கள் உள்ளன. தாவரம் தாவரத்திற்கும் பிராணிக்கும், பிராணி பிராணிக்கும் தாவரத்திற்கும் ஒட்டுண்ணியாக இருக்கின்றன.


Remove ads
சார்பு
ஒட்டுண்ணி வாழ்வினால், இதில் தொடர்புடைய உயிரினங்களின் உடல் நலம் தொடர்பில் பயன் அல்லது பாதிப்பு விளைகிறது. ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களில் பலவகையில் உடல் நலக் குறைவை ஏற்படுத்துகின்றன. இது, பலவகையான நோய்க் குறியியல் பாதிப்புக்கள், துணைநிலைப் பாலியல் இயல்புக் குறைபாடுகள் முதல் ஓம்புயிர்களின் நடத்தை மாற்றங்கள் வரையிலான பாதிப்புக்களாக அமையக்கூடும். நாடாப்புழுக்கள், பிளாஸ்மோடியம் இனங்கள், பேன்கள் முதலிய பலவகை உயிரினங்கள், முதுகெலும்பிகளான, ஓம்புயிர்களுடன் கொண்டுள்ள தொடர்பு ஒட்டுண்ணி வாழ்வு ஆகும். எலுமிச்சையில் புல்லுருவியும், மனிதன் தோலில் படர் தாமரையும், மாட்டுக்குப் பிடிக்கும் உண்ணியும், அவரை செடியைத் தாக்கும் அசுகுணியும் முறையே எடுத்துக்காட்டுகள் ஆகும். எல்லா உயிர்களும் உணவுக்காக, ஒன்றையொன்று பல வழிகளில் சார்ந்திருக்கின்றன. பெரும்பாலும் எல்லாப் பிராணிகளும் தங்களுக்கு வேண்டிய உணவைத் தாவரங்களிலிருந்தோ, அத்தாவரங்களைத் தின்று வாழும் வேறு விலங்குகளிலிருந்தோ பெறவேண்டும். எல்லா உயர்நிலைத் தாவரங்களும், விலங்குகளும் தங்களின் உடலின் முக்கியப் பொருளானப் புரோட்டோபிளாசத்தை உருவாக்க மற்ற உயிரினங்களையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. இதில் முக்கியமானது நைட்ரசன் ஆகும். இது தாவரத்தின் புரதச்சத்தில் இருந்தோ, விலங்கினத்தின் புரதத்தில் இருந்தோ பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. உயர் தாவரங்கள் இந்த வேதிப்பொருளை, நிலத்தில் இருந்தோ, நீரில் இருந்தோ நைட்ரேட்டுக் கூட்டுப்பொருட்களில் இருந்து பெறுகின்றன. மேலும், சிறுநீர், சாணம் போன்றவற்றைச் சிதைக்கும் சாறுண்ணிகள் நைட்ரசனை உருவாக்கும் இயல்பைப் பெற்று இருக்கின்றன. மேலும், சில நுண்ணுயிரிகளும் இதனைச் செய்கின்றன. இவ்வாறாக, தாவரங்களுக்கு நைட்ரசன் கிடைக்கிறது. இந்த நைட்ரசன் சத்தானாது, விலங்குகளுக்கு மாற்றமடைந்து காய்கறிகளாகவோ, கனியாகவோ, அல்லது இறைச்சியாகவோ, உயர் விலங்குகளுக்குக் கிடைக்கின்றன. ஒட்டுண்ணிகளோ ஒரு உயிரின் உடல் உள்ளே இருந்து,நைட்ரசன் போன்றி மிக முக்கியமானச் சத்துக்களைப் பெறுகின்றன. இந்த ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பக்கவிளைவுகளே நோய் அறிகுறிகளாகத் தோன்றுகின்றன.
Remove ads
வகைமை
ஒட்டுண்ணிகளின் இயல்பைக் கொண்டு, மூன்று பெரும் வகையாகப் பிரிக்கலாம்.
இறந்த உயிர்களைச் சிதைத்து, சாறுண்ணும் வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள சாறுண்ணிகள் ஒருவகையாகும். இந்த சாறுண்ணிகள் ஏதேனும் ஒரு வகையில் உயிருடன் இருக்கும் உடலுக்குள் சென்றுவிட்டால், அது முதலில் குடலிலும், பிறகு பல்வேறு முக்கிய உடல் உறுப்புகளான மண்ணீரல், ஈரல்,[1] தசை,[2] மூளை[3] போன்ற பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள உயிரணுக்களைச் சிதைத்து வாழும்.
உயிரோடு வெளியில் வாழும் சில ஒட்டுண்ணிகள், உணவு, நீர் போன்ற காரணிகளால் உடலுக்குள் சென்றுவிட்டால், அது அங்கிருந்து தேவையற்ற உடல் இயக்கத்தினை உருவாக்கும். எடுத்துக்காட்டாக, அமீபா மனித உடலுக்குள் சென்று விட்டால், வயிற்றோட்டம் ஏற்படும்.
உடலுக்கு வெளியே இருந்து உடலின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் தலைப்பேன், உண்ணி போன்றவற்றைச் சொல்லலாம்.
Remove ads
மேற்கோள்கள்
இதனையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads