ஏ. பெரியதம்பிப்பிள்ளை
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை (சனவரி 8, 1899 - நவம்பர் 2, 1978) கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டக் கவிதைப் பாரம்பரியத்தின் சிறப்பு மிக்க ஒருவராக விளங்குகின்றார். இவர் கவிஞர் மாத்திரமல்ல, கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், இலக்கிய ஆய்வாளர், மேடைப் பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி.
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை | |
---|---|
பிறப்பு | சனவரி 8, 1899 மண்டூர், மட்டக்களப்பு |
இறப்பு | நவம்பர் 2, 1978 79) | (அகவை
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | புலவர், தமிழறிஞர் |
மட்டக்களப்பு மாவட்டம், மண்டூரில் ஏகாம்பரப்பிள்ளை வண்ணக்கர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் பெரியதம்பிப்பிள்ளை. மண்டூரில் உவெசுலியன் மிசன் தமிழ்ப் பாடசாலையில் வே. கனகரத்தினம், மு. தம்பாப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பக்கல்வியைக் கற்ற இவர் யாழ்ப்பாணத்துப் புலோலியைச் சேர்ந்த சந்திரசேகர உபாத்தியாயர் என்பாரிடம் தமிழ் படிக்கத் தொடங்கினார்.[1] தொடர்ந்து உயர்கல்வியினைக் கல்முனையிலும் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் சென்று நாவலர் காவியப் பாடசலையில் சேர்ந்து தனது கல்வியைத் தொடர்ந்தார். நாவலர் காவியப்பாடசாலையில் புலவர்மணி அவர்களோடு, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையும் சக மாணவராகக் கல்வி பயின்றார். அங்கே புலவர்மணி ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் முறையாகக் கற்றுத் தமிழில் பாண்டித்தியம் அடைந்தார். அவர் காவியப் பாடசாலையில் மாணாக்கராயிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பண்டிதர் மயில்வாகனனாரிடத்திலும் (சுவாமி விபுலாநந்தர்) இடையிடையே சென்று பாடங்கேட்டு வந்தார்.
1926 ஆம் ஆண்டில் திருகோணமலை இந்துக் கல்லூரி, கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மட்டுநகர் அரசினர் உயர்தரக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
வெண்பா யாப்பினைக் கையாண்டு கவிதை இயற்றுவதில் புலவர்மணி மிகவும் திறமைமிக்கவராக விளங்கினார். எளிமையான சொற்களைக் கையாண்டு எல்லோருக்கும் இலகுவாக விளங்கக் கூடியவகையில் புலவர்மணி கவிதை புனைந்தார்.
புலவர்மணி கவிதைகள் என்ற தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகள் அவரது கவித்துவத்தைப் பறைசாற்றுகின்றன. சுவாமி விபுலானந்தருடன் புலவர்மணி கொண்டிருந்த தொடர்பைக் காட்டும் "யாழ்நூல் தந்தோன்", "விபுலானந்த மீட்சில் பத்து" என்னும் கவிதை நூல்கள் அவரது கவித்துவச் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றன.
அவரது பகவத்கீதை மூன்று பாகங்களும் அப்பாடல்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களும் இவரது புலமையை உணர்த்தி நிற்கின்றன. இப்புலமைச் சிறப்பினைக் கண்டு 1950 ஆம் ஆண்டில் மட்டுநகர் தமிழ்க் கலைமன்றம் "புலவர்மணி" என்னும் விருது வழங்கிக் கவுரவித்தது. மதுரகவி, சித்தாந்த ஞானபானு போன்ற பல பட்டங்களும், கௌரவமும் வழங்கப்பட்டபோதும் "புலவர்மணி" என்ற பட்டத்தை மாத்திரமே அவர் தமது பெயருடன் இணைத்துக் கொண்டார்.
புலவர் மணி தாம் வாழ்ந்த எழுபத்தொன்பது ஆண்டு காலப்பகுதியில் தமக்கெனவொரு பாரம்பரியத்தை உருவாக்கிச் சென்றுள்ளார். சுவாமி விபுலானந்தருடைய பாரம்பரியத்திலே புலவர் மணியும் பெயர் விளங்கச் செயற்பட்டார். யோகர் சுவாமிகளது தொடர்பும் இவருக்கிருந்தது.
தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்காக இலங்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட 20 அம்சத் திட்டக் குழுவில் இவரது அங்கத்துவம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது[2].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.