Remove ads
From Wikipedia, the free encyclopedia
எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford, ஆகஸ்ட் 30, 1871- அக்டோபர் 19, 1937) நியூசிலாந்தைச் சேர்ந்த[2] புகழ்பெற்ற, முன்னோடியான அணு இயற்பியல் அறிஞர் ஆவார். அணுவின் அமைப்பை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி அணுவைப் பிளக்க இயலும் என்னும் கருதுகோளுக்கும் அடித்தளம் நாட்டியவர். அணுவின் தொடர்ந்த சிதைவினால் ஏற்படும் கதிரியக்கம் பற்றிய ஆய்வுக்கு வழி வகுத்தவரும் இவரே. தனிமங்களின் கதிரியக்கம் மற்றும் கதிரியக்கச் சேர்மானங்கள் குறித்த இவரது கண்டுபிடிப்பிற்காக இவர் 1908 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசைப் பெற்றார்[3]. அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற ஓர் அடிப்படையான உண்மையை தன்னுடைய தங்க மென்தகடுவழி ஏற்பட்ட சிதறல்களினால் கண்டுபிடித்ததால் இவரை 'அணுக்கரு இயற்பியலின் தந்தை' எனப் போற்றுவர்.[4]
எர்னசுட்டு ரூதர் போர்டு | |
---|---|
நெல்சனின் பிரபு ரதர்ஃபோர்டு[1] | |
பிறப்பு | பிரைட் வாட்டர், நியூசிலாந்து | 30 ஆகத்து 1871
இறப்பு | 19 அக்டோபர் 1937 66) கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து | (அகவை
வாழிடம் | நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், கனடா |
குடியுரிமை | நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
துறை | இயற்பியல், வேதியல் |
பணியிடங்கள் | மெக்கில் பல்கலைக்கழகம் University of Manchester |
கல்வி கற்ற இடங்கள் | University of Canterbury கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
கற்கை ஆலோசகர்கள் | Alexander Bickerton ஜெ. ஜெ. தாம்சன் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | நீல்சு போர் ஜேம்ஸ் சாட்விக் |
அறியப்படுவது | அணுக்கருவியலின் தந்தை நேர்மின்னி கண்டுபிடிப்பு |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (1908) |
1871 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி ஜேம்ஸ் ரதர்ஃபோர்டு என்ற விவசாயிக்கு, 12 குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். இவரதுகுடும்பத்தில் 7 ஆண்களும் 5 பெண்களும் பிறந்தனர். ரதர்ஃபோர்டுஅவர்கள் நியூசிலாந்தில் நெல்சன் என்னும் இடத்தருகே உள்ள ஸ்பிரிங் குரோவ் (தற்பொழுது பிரைட்வாட்டர் என அழைக்கப்படுகின்றது) என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தாயார் மார்த்தா தாம்சன் என்பவர் ஆங்கிலேயர்.[5] பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அதுமட்டுமல்லாது அவருடைய தந்தையின் பணியைப் பொறுத்து குடும்பம் முழுவதும் வெவ்வேறு இடங்களுக்கு அவ்வப்போது குடி பெயர்ந்து பல பணிகளில் ஈடுபட்டதுடன் அங்கங்கே விவசாயத்தையும் மேற்கொண்டு வந்தது.
கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரதர்ஃபோர்டு தன்னுடைய தொடக்கக் கல்வியை அரசுப் பள்ளியில் தொடங்கினார். பள்ளி சென்று வந்ததும் அவர்களுடைய வேலை பசுமாடுகளிடம் பால் கறப்பது, சுற்று வட்டாரங்களில் அலைந்து திரிந்து சுள்ளி பொறுக்குவது. ரதர்ஃபோர்டு தனது பத்தாவது வயதில் ஃபாக்சுஹில் என்ற இடத்தில் பள்ளியில் பயிலும்போது முதன் முதலாக அறிவியல் புத்தகத்தைப் பெற்றார். அப்புத்தகத்தில் கண்ட ஆய்வுகளை உடனுக்குடன் செய்து குடும்பத்தினரை ஆச்சாரியத்தில் மூழ்கடித்தார். இவருக்குப் பயிற்சி அளித்த ஆசிரியரோ கிராமத்துப் பள்ளி ஆசிரியர். ஓரளவிற்கே பயிற்சி பெற்றவர். அப்பள்ளியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.
பின்னர் 1887 இல் உதவித் தொகை பெற்று நெல்சனில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். இங்கு மூன்றாண்டுகள் பயின்றார். இங்கு இரண்டாம் முறையாக இவருக்கு மீண்டும் உதவித் தொகை கிடைத்தது.[6] நெல்சன் கல்லூரியில் கல்வி கற்ற பின்னர், 1890 இலிருந்து 1894 வரை கிரைஸ் மாதாகோவில் உள்ள நியூசிலாந்து பல்கலைக்கழகத்தின் கான்ட்டர்பரி கல்லூரியில் படிக்க படிப்பூதியம் பெற்றார். இவர் கல்லூரி மானவராக இருந்த காலங்களில் ரக்பி போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டினார். மாணவருக்கான விவாத அரங்குகளில் பங்கேற்றர். அதன் செயல்களில் பங்கு கொண்டார். இடையில் 1892 இல் கணிதம், இலத்தீன், இயற்பியல், ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய பொஆடங்கள் அடங்கிய பி. ஏ. இளங்கலைத் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றார். நியூசிலாந்தில் கணிதத்திற்காக வழங்கப்பட்ட உதவித் தொகை இவருடைய கணிதத்திறமையினால் இவருக்குக் கிடைத்தது. பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு எதிர்மின்கதிர்களைக் கண்டறிந்த ஜெ. ஜெ. தாம்சன் என்பவரின் மாணவரானார். இங்கு இயற்பியலில் சில ஆய்வுகளைச் செய்தார். இரண்டு மின்சுற்றுகளுக்கு மிகக் குறுகிய நேரத்தில் மாறி இயங்கக் கூடிய கருவி ஒன்றை உருவாக்கினார். டெஸ்லா என்பவர் உருவாக்கிய மின்கந்தச்சுருள் இவரைக் கவர்ந்தது.
1893ல் முதுகலை பட்டங்கள் பெற்றார் கணிதம், இயற்பியல், கணித இயற்பியல், மின்சாரவியல், காந்தவியல் ஆகியவற்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். படிப்பு முடிந்ததும் பள்ளி ஆசிரியராக முயன்றார். ஆனால் இயலவில்லை. 1894 இல் பொருட்காட்சித் துறையின் சார்பாக அறிவியல் உதவித் தொகை இவருக்குக் கிடைத்தது. கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். அங்கு கேவண்டிஷ் ஆய்வுச் சாலையில் ஜெ. ஜெ. தாம்சனின் கீழ் ஆய்வு மாணவராகப் பயிற்சி பெற்றார். 1897 இல் சிறப்புத் தகுதி பெற்ற ஆய்வு மாணவராக முனைவர் பட்டம் பெற்றார். கனடாவில் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் 'இயற்பியலின் மெக்டொனால்டு' என்ற இயற்பியல் துறைத் தலைமைப் பொறுப்பு இவருக்கு வழங்கப்ப்பட்டது.[7] 1898 இல் அப்பொறுப்பை இவர் ஏற்றார். 1900 இல் மேரி நியூட்டன் என்ற பெண்ணை மணந்துகொண்டார். இத்தம்பதியினருடைய ஒரேமகள் எய்லீன் என்பவராவார்.
1907 இல் இங்கிலாந்த்து திரும்பிய ரதர்ஃபோர்டு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியரானார்.[8][9] இவருடைய முதல் ஆய்வு நியூசிலாந்தில், இரும்பின் காந்தப் பண்புகளை ஆய்ந்ததுதான். அதிக அதிர்வெண் அலைவில் உள்ளபோது, அதிக அதிர்வெண் இறக்கத்தில் இரும்பின் காந்தப் பண்புகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான். அடுத்து 'மேக்னடிக் விஸ்கோசிட்டி' என்ற இவரது நூல் நியூசிலாந்து இன்ஸ்டிடியூட் மூலம் வெளியிடப்பட்டது. அடுத்த ஆய்வு கால இடைவெளியைப் பற்றி அளப்பதான கருவியைப் பற்றியது. இவர் மின்காந்த அலைகளைக் கண்டுபிடிக்க ஒரு கருவியை உருவாக்கினார். வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை பற்றி தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். எக்ஸ் கதிர்களைச் செலுத்தும் போது அவை அடையும் மாறுதல்களை ஆராய்ந்தார்.[10] அக்காலத்தில் பல நாடுகளில் கதிர் வீச்சு மூலக்கூறுகளைப் பற்றிய ஆய்வு, அதனைத் தனிமைப்படுத்தும் முறை இவற்றில் பல அறிஞர்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர். ரதர்ஃபோர்டும் அது போன்ற ஆய்வினில் ஈடுபட்டார். யுரேனியத்தின் கதிர்வீச்சுப் பற்றி ஆராயத் தொடங்கினார். மின்புலத்தின் வலிமைக் கேற்ப அயனிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல்கள் பற்றி ஆராய்ந்தார். யுரேனியக் கதிர்வீச்சில் ஆல்பா பீட்டா கதிர்கள் வெளிவருவதைக் கண்டறிந்து அவற்றின் பண்புகளை ஆராய்ந்தார்.[11]
மாண்ட்ரீயேலில் இந்த ஆய்வைத் தொடர்ந்து செய்தார். ஆல்பா கதிர்கள் வெளிப்பாடு பற்றித் தீவிரமாக ஆராய்ந்தார். தோரியம் என்ற தனிமத்தின் கதிர்வீச்சைப் பற்றி ஆராயும்போது அவற்றை 'ரேடான்' என்ற வாயுவின் மூலம் அனுப்பும் போது ரேடானின் ஐசோடோப்பான 'தோரான்' என்பதைக் கண்டுபிடித்தார். பிரெடரிக் சோடி (Frederick Soddy) என்பவர் ரூதர்போர்டுடன் சேர்ந்து ரேடியக் கதிரியக்கச் சிதைவைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அணுவின் தன்மைகள் குறித்து, மூலக்கூறுகளின் அடிப்படையில் அல்லாமல் அணுக்கருப் பிளவைக் கண்டறிந்த 'ஆட்டோ ஹான்' என்பவரும் ரதர்ஃபோர்டுடன் இணைந்து ஆய்வுகளைச் செய்தார்.
இந்த ஆய்வின் போது ஓர் ஆல்பாத் துகளைக் கண்டுபிடிக்கவும், ரேடியத்திலிருந்து வெளிப்படும் கதிர்களைக் கணக்கிடவும் கெய்கர் என்பவருடன் இணைந்து ஒரு கருவியை உருவாக்கினார். இந்த ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்ட பின்னர் அணுவிற்கு ஓர் உட்கரு உண்டு என்பதையும், அதில் ஆல்பாத் துகள்கள் பொதிந்துள்ளதையும் கண்டறிந்தார்.[12] இதுவே பின்னர் புரோட்டான் எனப் பெயரிடப்பட்டது. இவர் தொடங்கி வைத்த இந்த ஆய்வுகள், இவருடனும் இவருக்குப் பின்னரும் நீல்சு போர், மாக்ஸ் பிளாங்க், மோஸ்லி, பிளாக்கெட், காக் கிராப்ட், வால்டன், ஜி. பி. தாம்சன், பவெல், ஆஸ்டன், எல்லிஸ் என்று பல்வேறு அறிஞர்களால் தொடரப்பட்டு பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மூலக்கூறுகளின் உருமாற்றம் பற்றிய இவருடைய கண்டுபிடிப்புகள் இவருடைய புகழுக்கு மேலும் சிறப்பை அளித்தது.[13]
இவர் கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் இருந்தபொழுது செய்த ஆய்வின் பயனாக 1908ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.[14] வேதியலில் கதிரியக்கத் தனிமங்கள் பற்றிய வேதியல் கருத்துகளுக்காகவும், தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு பற்றிய கண்டுபிடிப்புகளுக்காகவும் இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. சில அணுவில் இருந்து வெளிப்படும் கதிரியக்கமானது அணுவின் தன்னியல்பாய் தானே வெளிவிடும் கதிர்வீச்சு என கண்டுபிடித்தார். கதிரியக்கம் தரும் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்து அதன் பாதியாகக் குறைய ஒரே அளவுக் காலம்தான் எடுக்கின்றன என்று அறிந்தார். இதன் பயனாகக் கதிரியக்க அணுவின் வாழ்வு அரைக்காலம் என்னும் கருத்தை நிறுவினார்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் 1937 ஆம் ஆண்டு அக்டோபர் 19 இல் ரதர்ஃபோர்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.[16] இவருடைய உடல் மறைந்த அறிஞர்கள் லார்டு கெல்வின், சர். ஐசக் நியூட்டன் இவர்களுடைய சமாதிகளுக்கு நடுவே அடக்கம் செய்யப்பட்டது.[17]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.