Remove ads
தாவரக் குடும்பம் From Wikipedia, the free encyclopedia
ஏபியேசியே அல்லது உம்பெலிபெரே (Apiaceae or Umbelliferae ) என்பது பெரும்பாலும் நறுமணப் பூக்கும் தாவர இனங்களைக் கொண்ட தாவரக் குடும்பமாகும். இதற்கு ஏபியம் மாதிரி பேரினத்தின் பெயரிடப்பட்டது. மேலும் இக்குடும்பம் பொதுவாக செலரி, கேரட் அல்லது வோக்கோசு குடும்பம் அல்லது அம்பெல்லிஃபர்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது பூக்கும் தாவரங்களில் 16 வது பெரிய குடும்பமாகும். இதில் சுமார் 446 பேரினங்களும், 3,800க்கும் மேற்பட்ட இனங்களும் உள்ளன.[1] இந்த குடும்பத்தில் ஓமம், ஏஞ்சலிகா, சோம்பு, பெருங்காயம், கேரவே, மஞ்சள் முள்ளங்கி, சிவரிக்கீரை, தோட்டப் பூண்டு , கொத்தமல்லி, சீரகம், சதகுப்பி, பெருஞ்சீரகம், லோவேஜ், மாட்டு வோக்கோசு, வோக்கோசு, பார்ஸ்னிப், கடல் ஹோலி, சில்பியம், போன்ற நன்கு அறியப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியமான தாவரங்களும், அடையாளம் தெளிவாக இல்லாத மற்றும் அழிந்து போகக்கூடிய ஒரு தாவரங்களும் உள்ளன.[2]
ஏபியேசியே | |
---|---|
Apiaceae: Apium leaves and tiny inflorescences, Daucus habit, Foeniculum inflorescences, Eryngium inflorescences, Petroselinum root. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | |
வரிசை: | Apiales |
குடும்பம்: | Apiaceae Lindl. |
மாதிரிப் பேரினம் | |
Apium L. | |
Subfamilies | |
| |
வேறு பெயர்கள் | |
Umbelliferae |
பெரும்பாலான அம்பெலிபெரீ குடும்பத் தாவரங்கள் ஆண்டுத் தாவரங்கள், இருபருவத் தாவரங்கள் அல்லது பல்லாண்டு குற்றுச் செடிகளாக உள்ளன. இருப்பினும் சிறு எண்ணிக்கையில் மரப் புதர்கள் அல்லது புப்ளூரம் ஃப்ருட்டிகோசம் போன்ற சிறிய மரங்கள் உள்ளன.[3] :35இவற்றின் இலைகள் தனி யொழுங்குள்ளவை. அவற்றின் இலைக்காம்பானது கணுவில் தண்டைச் சுற்றித் தழுவியிருக்கும். இலையடிச் சிற்றிலை கிடையாது. இலைகள் மிகவும் மெல்லிய பாகங்களாகப் பிரிந்திருக்கும்.[4] பொதுவாக, இவற்றின் இலைகளை நசுக்கும்போது குறிப்பிடத்தக்க ஒரு வாசனையை வெளியிடுகின்றன.
இவற்றின் பூங்கொத்துகள் பெரும்பாலும் கூட்டுக் குடைமஞ்சரியாகும். சிலவற்றில் தனிக்குடை மஞ்சரியாக இருக்கும். மலர் பெரும்பாலும் இருபால் உள்ளதாக, ஒழுங்கான அமைப்பு கொண்டது. சில சமயம் ஒருபால் பூக்களும் உண்டு. அடிக்கடி ஒரு மஞ்சரியின் ஓரத்திலுள்ள பூக்கள் ஒழுங்கற்றவையாயும் ஒருதளச் சமமாயும் இருக்கும். புல்லி சிறியது. மிகச் சிறிய 5 இதழ்கள் உண்டு. சிலவற்றில் புல்லியே இராது. அல்லி 5 தனி; பெரும்பாலும் வெண்மை அல்லது மஞ்சள். நுனி மடிந்திருக்கலாம். கேசரம் 5. சூலகம் பூவின் கீழுள்ளது. 2 சூலிலைக் கூட்டுச் சூற்பையின்மேல் ஆதான மண்டலம் உண்டு. அதில் பூந்தேன் சுரக்கும். சூல் தண்டு இரண்டு. சூற்பை இரண்டு அறையுள்ளது. அறைக்கு ஒரு சூல். கனி பிரிசுவர் வெடிகனி ஆகும். கனி இரண்டு பிளவாகப் பிரியும். ஒவ்வொரு பிளவின் மேலும் பழுக்களைப்போல உப்பிக்கொண்டு 5 வரம்புகள் உண்டு. வரம்புகளுக்கு நடுவே தவாளிப்புப்போன்ற பள்ளங்கள் உண்டு. இந்தப் பள்ளங்களின் அடியில் எண்ணெய்க் குழாய்கள் இருக்கின்றன. இவற்றில் வாசனைத் திரவியம் இருக்கிறது. விதையில் முளைசூழ் தசையுண்டு. புரோட்டீனும், எண்ணெயும் இதிலிருக்கும் உணவுப் பொருள்கள். கரு மிகச் சிறியது.
இந்தப் பூக்களில் முதலில் கேசரங்கள் முதிரும். பூந்தேன் மேலேயே இருப்பதால் பூச்சிகளுக்கு எளிதாக தேன் அகப்படும். குறுநாக்குடைய பூச்சிகளாகிய ஈயும் வண்டும் இந்தப் பூக்களுக்கு வருகின்றன. மொக்கில் கேசரங்கள் உள் மடிந்திருக்கின்றன. அவற்றை அல்லி இதழ்கள் மூடிக் காக்கின்றன. இவை ஒவ்வொன்றாக நீண்டு, இவற்றின் பைகள் வெடிக்கின்றன. பிறகு ஒவ்வொன்றாக உதிர்ந்து விடுகின்றன. இதனால் ஒரு பூவிற்குப் பூச்சிகள் சில நாட்கள் வரையில் வந்து கொண்டிருக்கலாம்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.