From Wikipedia, the free encyclopedia
எருசலேம் கோவில் (Temple in Jerusalem) என்பது பழைய எருசலேம் நகரில், முன்னாட்களில் "கோவில் மலை" (Temple Mount) என்றும், இந்நாட்களில் அல்-அக்சா மசூதி அமைந்துள்ள இடமாகவும் உள்ள பகுதியில் வரலாற்றுப் போக்கில் உருவாக்கப்பட்ட வழிபாட்டுக் கட்டடங்களைக் குறிக்கும்.[1]
எருசலேம் கோவில் எபிரேய மொழியில் Beit HaMikdash (בֵּית־הַמִּקְדָּשׁ), அல்லது விவிலிய வழக்கில் Beyth HaMiqdash என்று அழைக்கப்படுகிறது. இதற்கு "தூய்மையின் இல்லம்" என்பது பொருள்.
யூதர்களின் வழிபாட்டு இடமாக விளங்கிய எருசலேம் கோவில் இருமுறை கட்டி எழுப்பப்பட்டது. முதலாவது கட்டப்பட்ட கோவில் "சாலமோனின் கோவில்" (அல்லது "முதல் கோவில்") என்றும் அது அழிக்கப்பட்ட பின் எழுந்த கோவில் "இரண்டாம் கோவில்" என்றும் அழைக்கப்படுகின்றன.
"இரண்டாம் கோவில்" அழிந்த பின்னர் எருசலேம் கோவில் மீண்டும் கட்டப்படவில்லை. வருங்காலத்தில் "மூன்றாம் கோவில்" கட்டி எழுப்பப்படும் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.
பழைய ஏற்பாட்டு வரலாற்றுப்படி, எருசலேம் கோவில் கி.மு. 957இல் சாலமோன் மன்னரால் (ஆட்சிக்காலம்: கி.மு. சுமார் 970 முதல் 930 வரை) கட்டப்பட்டது. அதற்கு முன்னால், மோசேயின் தலைமையில் இசுரயேல் மக்கள் பாலைநிலத்தில் வழிநடந்த போது, தம்மோடு எடுத்துச் செல்லும் விதத்தில் ஒரு தூயகத்தை உருவாக்கியிருந்தார்கள். பின்னர் மலைப் பகுதிகளில் பீடங்கள் எழுப்பப்பட்டு பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
சாலமோன் அரசர் காலத்தில் பலவாக இருந்த வழிபாட்டு இடங்களை விட்டுவிட்டு, ஒரே இடத்தில் வழிபாடு நிகழும் வண்ணம் தலைநகர் எருசலேமில் கோவில் கட்டப்பட்டது.
சாலமோன் கட்டிய கோவில் ஒருசில பத்தாண்டுகளுக்குப் பிறகு எகிப்தின் பர்வோனாக இருந்த முதலாம் ஷெஷோங்க் என்பவரால் சூறையாடப்பட்டது. கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப சில முயற்சிகள் நடந்தன. யூதா அரசன் யோவாசு கி.மு.835இல் கோவிலைப் பழுதுபார்த்தார். ஆனால் அசீரிய மன்னர் செனாகரிப் கி.மு. சுமார் 700ஆம் ஆண்டில் கோவிலைச் சூறையாடினார்.
பாபிலோனிய ஆதிக்கத்தின்போது, கி.மு. 586ஆம் ஆண்டு எருசலேம் கோவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டது.
விவிலிய நூலாகிய எஸ்ரா தரும் தகவல்படி, இரண்டாம் கோவில் கட்டுவதற்காக பாரசீக மன்னர் சைரசு இசைவு வழங்கினார். அதைத் தொடர்ந்து, கி.மு. 538இல் கோவில் கட்டடப் பணி தொடங்கியது. அதற்கு முந்திய ஆண்டுதான் பாபிலோனியப் பேரரசு வீழ்ச்சியைச் சந்தித்தது.
கோவில் கட்டடம் 23 ஆண்டுகளுக்குப் பின் நிறைவுற்றது. அது டாரியுஸ் மன்னனின் 6ஆம் ஆட்சியாண்டு, அதார் திங்கள் மூன்றாம் நாள் என்று விவிலியத் தகவல் உள்ளது (எஸ்ரா 6:15). எனவே, கோவில் கட்டடம் கி.மு. 515ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12ஆம் நாள் நிறைவுற்றது என அறிகிறோம். யூத ஆளுநர் செருபாபேல் கோவிலை அர்ப்பணித்தார்.
இந்த இரண்டாம் கோவில் அதற்கு முந்திய கோவிலைப் போல பிரமாண்டமாக இல்லாவிட்டாலும், பாரசீக ஆட்சிக்காலம் முழுவதும் அது ஒரு முக்கிய கட்டடமாக விளங்கியது.
மகா அலெக்சாண்டர் படையெடுப்பின்போது எருசலேம் கோவில் அழிந்து போகின்ற ஆபத்து எழுந்தது. யூத மக்கள் அலெக்சாண்டரைத் தெய்வம் என்று வழிபட மறுத்தார்கள். அதனால் அரசன் கோபமுற்றதாகவும், அவரைப் புகழ்ந்து பேசி முகமன் கூறியதன் பயனாக கோபம் தணிந்ததால் கோவில் அழிவிலிருந்து தப்பியதாகவும் தெரிகிறது.
அலெக்சாண்டர் கிமு 323, சூன் 13ஆம் நாள் இறந்தார். அவரது பேரரசும் பிளவுண்டது. தாலமி வம்சத்தினர் ஆட்சியின் கீழ் யூதேயாவும் எருசலேம் கோவிலும் வந்தன. தாலமியரின் ஆட்சியின்போது யூதர்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டன.
கிமு 198இல் செலூசிட் வமசத்தைச் சார்ந்த மூன்றாம் அந்தியோக்கசு என்பவர் தாலமியரின் படையை முறியடித்தார். அதிலிருந்து யூத மக்கள் மீது கிரேக்க கலாச்சாரத்தைத் திணிக்கும் முயற்சி தொடங்கியது. கிரேக்க கடவுளரின் சிலைகள் யூதர்களின் கோவிலுள் வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து யூத மக்கள் கிளர்ச்சி செய்தனர். அது வன்முறைகொண்டு அடக்கப்பட்டது.
பின்னர் நான்காம் அந்தியோக்கசு எப்பிபானசு என்பவர் காலத்தில் யூத மக்கள் மீது கிரேக்க கலாச்சாரம் வலிந்து திணிக்கப்பட்டது. யூதர்களின் ஒய்வுநாள் அனுசரணையும், விருத்தசேதனமும் தடைசெய்யப்பட்டன. கிரேக்க தெய்வமாகிய சூஸ் என்னும் கடவுள் சிலையை எப்பிபானசு எருசலேம் கோவிலுக்குள் நிறுவி, அங்கு யூதர்கள் அசிங்கம் என்று கருதுகின்ற பன்றியைப் பலியாக ஒப்புக்கொடுத்தது யூதர்களுக்கு மீண்டும் சினமூட்டியது.
யூதர்கள் மத்தத்தியா என்பவரின் தலைமையில் கிமு 167இல் கிளர்ச்சி செய்தனர். அவருடைய மகன் யூதா மக்கபே என்பவர் தீட்டுப்பட்ட எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தி, கிமு 165இல் மீண்டும் அர்ச்சித்து அர்ப்பணித்தார். இந்த வரலாறு விவிலியப் பகுதியாகிய 1 மக்கபேயர் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.
யூதர்கள் மீண்டும் செய்த கிளர்ச்சி கிமு 43இல் அடக்கப்பட்டது.
கிமு 20ஆம் ஆண்டளவில் மகா ஏரோது எருசலேம் கோவிலை மிகப் பெரிய அளவில் விரிவாக்கிக் கட்டினார். "இரண்டாம் கோவில்" எரோதினால் விரிவாக்கப்பட்ட பிறகு "ஏரோதின் கோவில்" என்னும் பெயராலும் அழைக்கப்பட்டது. கோவில் வேலை நடந்தபோது வழிபாடுகளும் தொடர்ந்தன.
ஏரோது மன்னன் எருசலேம் கோவிலை மிகப்பெரும் அளவில் விரிவுபடுத்தி, தம் புகழை நிலைநாட்ட எண்ணினார். கோவில் வேலை 46 ஆண்டுகள் நடந்ததாக விவிலியக் குறிப்பு உள்ளது (காண்க: யோவான் 2:20.
டைட்டசு என்னும் உரோமைத் தளபதியின் தலைமையில் எருசலேமுக்குள் புகுந்த உரோமைப் படை எருசலேம் கோவிலை கிபி 70ஆம் ஆண்டில் தரைமட்டமாக்கியது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் உரோமை ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யத் தொடங்கியிருந்தனர்.
கோவில் அழிந்த பிறகு ஏரோது கோவிலின் எஞ்சிய பகுதியாக இருப்பது "மேற்குச் சுவர்" ("Western Wall")[2] என்பதின் கீழ்ப்பகுதி மட்டுமே ஆகும். உரோமை மற்றும் பிசான்சிய மன்னர்கள் எருசலேம் கோவிலின் கற்களைக் கொண்டு வேறு கட்டடங்களைக் கட்டி எழுப்பினர்.
பின்னர், கிபி 687-691 ஆண்டுகளில் எருசலேம் கோவிலின் எல்லாப் பகுதிகளும் அழிக்கப்பட்டு, கோவில் இருந்த "கோவில் மலை" (Temple Mount) இடத்தில் "பாறைக் குவிமாடம்" (Dome of the Rock)[3] என்னும் கட்டடம் கட்டப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.