எய்ன் சக்ரி காதலர்
From Wikipedia, the free encyclopedia
எய்ன் சக்ரி காதலர் என வழங்கும் சிற்றுரு, இஸ்ரேல் நாட்டின் பெத்லகேமுக்கு அருகில் உள்ள எய்ன் சக்ரி குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சுண்ணக்கல் சிற்பங்களுள் ஒன்று.[1] 11,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தத நூத்துபியப் பண்பாட்டுக் காலத்திய இச்சிற்பம், இருவர் பாலியல் உடலுறவு கொள்வதைக் காட்டும் மிகப்பழங்காலப் படைப்பு ஆகும்.[2]
![]() | |
செய்பொருள் | சுண்ணக்கல் (கல்சைட்டு உருள்கல்) |
---|---|
அளவு | 102 மிமீ உயரம் |
உருவாக்கம் | கிமு 9000 |
கண்டுபிடிப்பு | பெத்லகேமுக்கு அருகில் உள்ள வாடி கரெய்ட்டூனில் எய்ன் சக்ரி குகைகளில் |
தற்போதைய இடம் | பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன் |
அடையாளம் | 1958,1007.1 |
கண்டுபிடிப்பு
1933 ஆம் ஆண்டில், பெத்லகேமில் பிரெஞ்சு மதபோதகர்களுக்குக் கிடைத்த சில அரும்பொருட்களைப் பார்வையிட்டபோது பிரெஞ்சுத் தூதரும்,[3] முன்வரலாற்றாளருமான ரெனே நுவில்[4] (René Neuville) என்பவர் இச் சிற்பத்தை அடையாளம் கண்டார். அபே பிரெயில் (Abbé Breuil) என்பவருடன் சிறிய அருங்காட்சியகம் ஒன்றுக்குச் சென்றிருந்தபோதே இது நிகழ்ந்தது.[5] இது ஒரு முக்கியமான பொருள் என்பதை உடனடியாகவே கண்டுகொண்ட நுவில், அதை வாடி கரெய்ட்டூன் என்னும் இடத்தில் கண்டெடுத்த பெதுயினின் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். எய்ன் சக்ரி குகைகளுக்குள் அமைந்திருந்த இவ்விடத்துக்கு நுவில் சென்று பார்த்தார். இக்குகைகளின் பெயரைத் தழுவியே இச் சிற்பத்துக்குப் பெயர் ஏற்பட்டது. இக் குகைகளில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள், இவ்விடம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழிடமாக இருந்ததைக் காட்டின. அத்துடன், இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் நத்தூபியப் பண்பாட்டுக்கு உரியவை என்றும் தெரியவந்தது. இக்குகைகள் வாழிடமாகப் பயன்பட்டதால், இங்கு காணப்பட்ட இச் சிற்பமும் வீட்டுப் பொருளாகப் பயன்பாட்டில் இருந்ததேயன்றி அடக்கப் பொருளாகப் பயன்படவில்லை எனக் கருதப்பட்டது.[1]
தோற்ற அமைப்பு
இச் சிற்பம் ஒற்றைக் கல்சைட்டு உருள் சுண்ணக்கல்லில் செதுக்கப்பட்டது. கூரிய கல்லைக் கொண்டு இந்த உருள்கல்லின் பகுதிகள் எடுக்கப்பட்டு இரண்டு உருவங்கள் தெரியுமாறு செய்யப்பட்டு உள்ளது.[1] இச்சிற்பத்தில் முகம் போன்ற விபரங்கள் இல்லாவிட்டாலும், இது திறமையாக உருவாக்கப்பட்ட ஒரு சிற்பம் எனக் கருதப்படுகிறது. பார்ப்பவர்களில் நோக்கைப் பொறுத்து இச்சிற்பம் வெவ்வேறு விதமாகத் தெரியக்கூடியது என மார்க் குயின் (Marc Quinn) என்னும் சிற்பக்கலைஞர் கூறியுள்ளார். இந்த வகையில், இதை இரு காதலராகவும், ஆண்குறியாகவும், மார்பகங்களாகவும், பெண்குறியாகவும் பார்கமுடியும் என்று இவர் கூறுகிறார்.[6] தொலைவுக் காட்சிகளையும், அண்மைக் காட்சிகளையும் கொண்ட தற்காலத்துப் பாலுணர்வுப் படங்களோடு இதை அவர் ஒப்பிடுகிறார். இதில் உள்ள உருவங்கள் ஒன்றை ஒன்று பார்த்தபடி இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இவ்வுருவங்கள் ஆணா பெண்ணா என்பது ஒரு ஊகம் தான். எவ்வகையில் பார்த்தாலும் இது ஒரு பாலுணர்வு சார்ந்த சிற்பம் என்பது தெளிவு.[7]
கொள்வனவு
1958 ஆம் ஆண்டில், என். வை. நூவிலின் சொத்துக்கள் ஏலத்தில் விற்கப்பட்டபோது, பிரித்தானிய அருங்காட்சியகம் இச்சிற்பத்தை விலைக்கு வாங்கியது.
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.