From Wikipedia, the free encyclopedia
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (Eelam People Democratic Party - EPDP) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சியும், அரசு-சார்பு துணை இராணுவப் படையும் ஆகும். இதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். இக் கட்சி இலங்கை அரசில் பங்களிக்கின்றது. இக்கட்சி பொதுவாக தமிழ்த் தேசியத்திற்கு எதிரான மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி Eelam People's Democratic Party | |
---|---|
நிறுவனர் | டக்ளஸ் தேவானந்தா |
செயலாளர் | டக்ளஸ் தேவானந்தா |
தொடக்கம் | நவம்பர் 1987 |
பிரிவு | ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி |
தலைமையகம் | 121 பார்க் வீதி, கொழும்பு 05 |
செய்தி ஏடு | தினமுரசு |
தேசியக் கூட்டணி | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள் | 2 / 225 |
தேர்தல் சின்னம் | |
வீணை | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
epdpnews.com | |
இலங்கை அரசியல் |
டக்ளசு தேவானந்தா ஆரம்ப ஈழ இயக்கங்களில் ஒன்றான ஈரோஸ் என அழைக்கப்படும் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். 1980 ஆம் ஆண்டில் ஈரோசில் இருந்து பத்மநாபா, அ. வரதராஜப் பெருமாள் ஆகியோர் பிரிந்து சென்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்) என்ற இயக்கத்தை ஆரம்பித்தனர். இவர்களுடம் தேவானந்தாவும் இணைந்து கொண்டார். 1986 ஆம் ஆண்டில் ஈபிஆர்எல்எஃப் தலைவர் தேவானந்தாவுக்கும், பத்மநாபாவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து, இக்கட்சி ரஞ்சன் குழு, தேவானந்தா குழு என மேலும் இரண்டாகப் பிரிந்தது. தேவானந்தா ஆரம்பத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து பிரிந்த பரந்தன் ராஜன் என்பவருடன் இணைந்து ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எஃப்) என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். ராஜன் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றியதை தேவானந்தா ஏற்க மறுத்தார், அத்துடன் ஈழப்போரில் இந்திய அமைதிப்படையின் ஊடுருவலையும் ஏற்க மறுத்து சென்னையில் இருக்கும் போது ஈழ மக்கள் சனநாயகக் கட்சி என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்..[1]
ஈபிடிபி நிதிப்பற்றாக்குறையை எதிர்நோக்கியது, இதனை சமாளிக்க தேவானந்தா சென்னையில் வாழும் இலங்கைத் தமிழரைக் கடத்திச் சென்று கப்பம் கேட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.[2] 1989 இல் தேவானந்தாவும் மேலும் 25 பேரும் கீழ்ப்பாக்கத்தில் 10 வயது சிறுவனைக் கடத்திய குற்றத்திற்காக இந்தியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[2][3][4] இவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
1990 இல் தேவானந்தா இலங்கை திரும்பினார். இவருக்கும் துணைப் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவிற்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.[2] விடுதலைப் புலிகளிடம் இருந்து தமக்குப் பாதுகாப்பு தரும்படியும், பதிலாக ஈபிடிபி கட்சியை இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசும் இதனை ஏற்றுக் கொண்டது.[2] இதன் மூலம் ஈபிடிபி துணை இராணுவக் குழுவாக மாறியது.
இலங்கை, இந்தியாவில் உள்ள அனைத்து ஈபிடிபி உறுப்பினர்களும் கொழும்பில் கூடினர். இலங்கை அரசு அவர்களுக்குப் பெருமளவு நிதியுதவி வழங்கியது.[2] யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவுப் பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியதை அடுத்து, அத்தீவுகளை ஈபிடிபி அரச இராணுவத்தின் உதவியுடன் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.[2] அத்தீவுகளில் மக்களிடம் இருந்து வரி அறவிட ஆரம்பித்தது.[2] கொழும்பில் வாழும் தமிழர்களிடம் இருந்தும் பணம் கப்பங்களாகப் பெறப்பட்டன.[2]
ஈபிடிபி வன்முறைகளைக் கைவிட்டு விட்டதாக அறிவித்திருந்தாலும், அதன் துணை இராணுவக் குழு தொடர்ந்து இயங்கி வந்தது.[5][6][7] அல்லைப்பிட்டி படுகொலைகளில் இலங்கைக் கடற்படைக்கு துணையாக செயற்பட்டதாக ஈபிடிபி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.[8][9]
ஈபிடிபி 1994 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டது. யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானோர் தேர்தலைப் புறக்கணித்தனர். இதனால், ஈபிடிபி ஒன்பது நாடாளுமன்ற இடங்களை 10,744 வாக்குகளில் (0.14%) வென்றது. இவற்றில் 9,944 வாக்குகள் ஈபிடிபியின் கட்டுப்பாட்டில் இருந்த தீவுப் பகுதிகளில் வாக்களித்தவர் ஆவர். ஈபிடிபி அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மக்கள் கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைத்தது.
2000 நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி 50,890 வாக்குகள் (0.59%) பெற்று நான்கு இடங்களைக் கைப்பற்றியது. 2000 அக்டோபரில் குமாரதுங்கவின் அமைச்சரவையில் தேவானந்தா வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2001 நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி 72,783 வாக்குகள் (0.81%) பெற்று இரண்டு இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், அரசாங்கம் மாறியதை அடுத்து தேவானந்தா அமைச்சர் பதவியை இழந்தார்.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி 24,955 வாக்குகள் (0.27%) பெற்று,ஒரு இடத்தை மட்டும் கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் அமைச்சரவையில் தேவானந்தா மீண்டும் அமைச்சரானார்.[10]
2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி 33,481 வாக்குகள் (0.30%) பெற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு இடத்தைக் கைப்பற்றியது.
2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி தேசிய வாரியாக 61,464 வாக்குகள் (0.53%) பெற்று[11] யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு இடத்தையும்,[12] வன்னி மாவட்டத்தில் ஒரு இடத்தையும்[13] கைப்பற்றியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.