From Wikipedia, the free encyclopedia
இ. பத்மநாப ஐயர் (இரத்தின ஐயர் பத்மநாப ஐயர், பிறப்பு: ஆகத்து 24, 1941) ஈழத்து இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றி வரும் இலக்கிய ஆர்வலர். ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமல்ல, தமிழக இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்ட ஐயர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகின்ற இவர், பன்முகப் பார்வை கொண்ட நவீன படைப்பிலக்கிய முயற்சிகளின் உந்துசக்தி. வெளியீட்டுத் துறையிலும் ஆக்கங்களைத் தொகுப்பதிலும் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். தரமான, நேர்த்தியான பல நூல்களைப் பதிப்பித்தவர். தனது வாழ்வில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கியத் துறையிலும் வெளியீட்டுத் துறையிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்துக்கொண்டவர். பல அறிவியல்-சார் கட்டுரைகளை ஈழத்துப் பத்திரிகைகளில் இ. பத்மநாபன் என்ற பெயரில் எழுதியுள்ளார். இலக்கியப் பங்களிப்புக்காக இயல் விருது பெற்றவர். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் இப்பொழுது இலண்டனில் வசித்துவருகிறார்.
இ. பத்மநாப ஐயர் | |
---|---|
பிறப்பு | இ. பத்மநாபன் ஆகத்து 24, 1941 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் |
மற்ற பெயர்கள் | ஐயர், கோபாலன் |
அறியப்படுவது | இலக்கிய ஆர்வலர், பதிப்பாளர், |
வாழ்க்கைத் துணை | சொர்ணவல்லி |
பத்மநாப ஐயர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் பிறந்தவர். இவரின் துணைவியார் சொர்ணவல்லி ஒரு இலக்கிய ஆர்வலர். பத்மநாப ஐயரின் இலக்கிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு வழங்கிவந்த அவர் இடையில் மரணித்துவிட்டார். அவரது இறப்புக்குப் பின்னும் பத்மநாப ஐயர் தனது இலக்கியப்பணியைத் தொடர்கிறார். சொர்ணவல்லி எழுதிய இலங்கையில் தோட்டப்பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும் என்ற நூலும் பத்மநாப ஐயரால் வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் தந்தையுடனும் கல்வி, தொழில் நிமித்தம் பல இடங்களிலும் வசிக்க நேர்ந்ததில் இலக்கிய நேசிப்பாளர்கள் பலரை நண்பர்களாக்கியும் கொண்டார். இவரது அறிவியல் கட்டுரைகள் அறிவொளி, நவீன விஞ்ஞானி போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.
இவர், தரமான நூல்களும் இதழ்களும் ஈழத்து வாசகர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதிலும், ஈழத்துப் படைப்புக்கள் நூல்வடிவம் பெற வேண்டும் என்பதிலும் அறுபதுகளிலிருந்து தொடர்ந்து அக்கறை செலுத்திவருகின்றார்.
தமிழியல் பதிப்பகத்தின் மூலம் பல நூல்களை வெளியிட்டு வருகிறார். கண்ணில் தெரியுது வானம் முதலிய குறிப்பிடத்தக்க நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதில் பங்காற்றியுள்ளார். காலச்சுவடு, நூலகம் திட்டம் போன்றவற்றின் ஆலோசகராகவும் இருக்கிறார்.
அச்சிடலின் முன்மாதிரியான தொகுப்புக்களைக் கொண்டுவந்ததில் ஓவியர் மார்க் அவர்களின் 'தேடலும் படைப்புலகமும்' (1987) நூலாகும். வடிவமைப்பில் புதுமுயற்சியாகவும் இது கருதப்பட்டது. மேலும், 31 கவிஞர்களின் 82 சமகால அரசியல் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து 'மரணத்துள் வாழ்வோம்' (1985) எனும் தொகுப்பாக இன்றும் பேசப்படுகிற தொகுப்பாக்கித் தந்துள்ளார்.
ஈழநாடு ஆசிரியர் சபாரத்தினம் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து 'ஊரடங்கு வாழ்வு'(1985) தமிழியல் வெளியீடாக வெளியிட்டு உலகிலேயே முதலில் வந்த ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பெனும் பெருமையையும் தந்துள்ளது.
நூலகக் கனவின் ஒரு படியாகவே, ஈழத்து நூல்களை மதுரைத் திட்ட இணைய நூலகத்தில் கணிசமான நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பதும், ஈழத்து நூல்களுக்கான நூலக திட்டத்தின்படி இணைய நூலகம் ஒன்று மின்னம்பலத்தில் பவனி வரச் செய்தார். ஈழ நூலகத் திட்டத்தின் அறங்காவலர் சபையின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் வழங்கும் இயல் விருது 2004 ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. கனடாவிலிருந்து வெளிவரும் காலம் சஞ்சிகை பத்மநாப ஐயரின் பணிகளைக் கௌரவிக்குமுகமாகச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.