From Wikipedia, the free encyclopedia
விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை 1978 இல் இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறை ஆகும். இலங்கை அரசியல் சட்டத்தின் 14 ஆவது அத்தியாயம் இது தொடர்பான விடயங்கள் பற்றிக் கூறுகின்றது. இலங்கையில், நாடாளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இம் முறைப்படியே நடைபெறுகின்றன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தொடக்கத்தில் இலங்கையில் இது ஒரு மூடிய கட்சிப் பட்டியல் முறையாகவே அறிமுகப்படுத்தபட்டது எனினும், பின்னர் தேர்தல்கள் எதுவும் நடைபெற முன்னரே உடனடியாக இது ஒரு திறந்த கட்சிப் பட்டியல் முறையாக மாற்றப்பட்டது.
இலங்கையில் தேர்தல்கள் தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிடும் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்களைப் பெறுகின்றன. நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்காக 22 தேர்தல் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 20 தேர்தல் மாவட்டங்கள் நாட்டின் நிர்வாக மாவட்ட எல்லைகளையே தங்கள் எல்லைகளாகவும் கொண்டுள்ளன. ஏனைய இரண்டு மாவட்டங்களில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு நிர்வாக மாவட்டங்களையும், வன்னித் தேர்தல் மாவட்டம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களையும் தம்முள் அடக்கியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு உள்ளூராட்சிச் சபைகளினதும் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் ஒரே அலகாகக் கொள்ளப்படுகின்றது.
இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் கட்சிப் பட்டியல் மூலம் அல்லது சுயேச்சைக் குழுக்களின் பட்டியல் மூலமே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றார்கள். இலங்கையில் அங்கீகாரம் பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் தாங்கள் நியமிக்கும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்களுடன் தங்கள் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்வார்கள். ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்கும் தனித்தனியாக நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு குழுவின் பட்டியலிலும், அந்தந்த மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை விட மூன்று மேலதிக வேட்பாளர்கள் அடங்கியிருக்கவேண்டும்.
இலங்கையில் வாக்களிப்பு திறந்த கட்சிப் பட்டியல் முறையில் நடைபெறுவதால், கட்சியிலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர்களின் ஒழுங்குவரிசையைக் கட்சிகள் தீர்மானிப்பதில்லை. ஒவ்வொரு வாக்காளரும், தாங்கள் விரும்பிய கட்சி அல்லது குழுவுக்கும், அக் கட்சி அல்லது குழுவினால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்களில் குறைந்தது மூன்று பேருக்கும் வாக்களிக்க முடியும். இவ்வாறு தனிப்பட்ட வேட்பாளர்கள் பெறும் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களினதும் ஒழுங்கு வரிசை தீர்மானிக்கப்படுகின்றது.
முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும். அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழுவுக்குரிய போனஸாக அக்கட்சியிலிருந்து ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவார்.
உறுப்பினர்களை ஒதுக்குவதற்காகத் தகுதி பெறும் ஒரு கட்சியோ அல்லது குழுவோ குறைந்த பட்சம் மொத்த வாக்குகளில் இருபதில் ஒரு பகுதியையாவது (5%) பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு பெறாத கட்சிகளும், குழுக்களும் நீக்கப்படும்.
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு எண்ணிக்கையிலிருந்து தகுதி பெறாத கட்சிகளும் குழுக்களும் பெற்ற வாக்குகள் கழிக்கப்படும். மிகுதி, அத்தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து ஒன்றைக் குறைத்து வரும் எண்ணினால் பிரிக்க வரும் ஈவு, ஆரம்பச் சுற்றில் ஒரு உறுப்பினரைப் பெறுவதற்குத் தேவையான வாக்கு எண்ணிக்கையாகும். மேற்படி ஈவினால் தகுதிபெற்ற கட்சிகளும், குழுக்களும் பெற்ற வாக்குகளை வகுக்கும் போது கிடைக்கும் ஈவுகளுக்குச் சமனான எண்ணிக்கையில் முதற் சுற்றில் உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவார்கள்.
முதற் சுற்றின் பின்னர் இன்னும் ஒதுக்குவதற்கு இடங்கள் இருப்பின் முதற் சுற்றில் வகுக்கும்போது கிடைத்த மிச்சங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். கூடுதலாக மிச்சம் கிடைத்த கட்சிக்கு மிகுதியாகவுள்ள இடங்களில் முதலாவது இடம் வழங்கப்படும். முற்றாக ஒதுக்கி முடியும் வரை ஏனைய இடங்களும் இவ்வாறே கூடிய மிச்சம் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு உறுப்பினரும் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு கட்சி அல்லது குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அக்கட்சி அல்லது குழுவில் கூடிய எண்ணிக்கை வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டம் ஒன்றின் தேர்தலில் வாக்களிப்பு விபரங்கள் கற்பனையாகத் தரப்பட்டுள்ளன.
தேர்தல் மாவட்டம்-X | ||
---|---|---|
| ||
கட்சி | பெற்ற வாக்குகள் | வீதம் |
கட்சி-A | 111747 | 38.71% |
கட்சி-B | 76563 | 26,52% |
கட்சி-C | 55533 | 19.24% |
கட்சி-D | 42121 | 14.59% |
சுயேச்சை-1 | 1611 | 0.56% |
சுயேச்சை-2 | 1130 | 0.39% |
மேலே காணப்படும் தேர்தல் முடிவுகளின்படி கட்சி A கூடிய வாக்குகள் பெற்றிருப்பதால் இத் தேர்தல் மாவட்டத்துக்குரிய போனஸ் இடம் கட்சி-A க்கு வழங்கப்படும்.
இரண்டு சுயேச்சைக் குழுக்களும் 5% இலும் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதால் அவை உறுப்பினரைப் பெறும் தகுதியை இழக்கின்றன.
அவ்விரு குழுக்களும் பெற்ற வாக்குகள் மொத்த வாக்குகளிலிருந்து கழிக்கப்படும்.
தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை = 7, ஒரு உறுப்பினர் ஏற்கனவே கட்சி A இற்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மிகுதி = 6. எனவே:
கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒரு உறுப்பினருக்குரிய வாக்கினால் வகுக்க:
கட்சி | - | ஈவு | மிச்சம் |
---|---|---|---|
கட்சி-A | 111,747 / 47,661 | 2 | 16,425 |
கட்சி-B | 76,563 / 47,661 | 1 | 28,902 |
கட்சி-C | 55,533 / 47,661 | 1 | 7,872 |
கட்சி-D | 42,121 / 47,661 | 0 | 42,121 |
இப்பொழுது கட்சி நிலைவரம்:
கட்சி | போனஸ் | சுற்று | மொத்தம் | |
---|---|---|---|---|
1 | 2 | |||
கட்சி-A | 1 | 2 | - | 3 |
கட்சி-B | 0 | 1 | - | 1 |
கட்சி-C | 0 | 0 | - | 1 |
கட்சி-D | 0 | 0 | - | 0 |
மொத்தம் 5 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இன்னும் 2 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன. இனி ஒவ்வொரு கட்சிக்கும் மிச்சமாக உள்ள வாக்குகளைப் பார்க்கவேண்டும். கட்சி-D ஆகக்கூடிய மிச்சமாக 42,121 வாக்குகளையும், கட்சி-B அடுத்ததாக 28,902 வாக்குகளையும் கொண்டுள்ளன. இதனால் கட்சி-D க்கும், கட்சி-B க்கும் தலா ஒரு உறுப்பினர் கிடைக்கும்.
முடிவில் கட்சி நிலைவரம்:
கட்சி | போனஸ் | சுற்று | மொத்தம் | |
---|---|---|---|---|
1 | 2 | |||
கட்சி-A | 1 | 2 | 0 | 3 |
கட்சி-B | 0 | 1 | 1 | 2 |
கட்சி-C | 0 | 1 | 0 | 1 |
கட்சி-D | 0 | 0 | 1 | 1 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.