அர்பா கேவுன்[1] என்பவர் பாரசீகத்தில் இருந்த மங்கோலிய அரசான ஈல்கானரசின் சிதைவின்போது ஆட்சி செய்த ஈல்கான் ஆவார்.
வாழ்க்கை
அர்பாவின் இளமைப் பருவம் பற்றி அதிக தகவல்கள் அறியப்படவில்லை. எனினும் இவர் டொலுயின் மகன் அரிக் போகேயின் வழி வந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.[2] இவரது தாத்தா மிங்கன் கேவுன் என்பவர் மாலிக் தெமூர் மற்றும் எமீகன் கதுனின் மகன் ஆவார். 1306ஆம் ஆண்டின் கோடை காலத்தில் ஒல்ஜைடுவின் ஆட்சியின் போது ஈரானுக்கு மிங்கன் கேவுன் வந்தார்.[3]
ஆட்சி
இவரை அரியணைக்கு அபு சயித்தின் உயரதிகாரியான கியாசல்தீன் முன்மொழிந்தார். இதற்குப் பிறகு ஐந்து நாட்கள் கழித்து கராபக்கில் இவர் முடிசூட்டிக் கொண்டார்.[4] தங்க மகுடத்தை அணிவதற்கு பதிலாக ஒரு தோல் கூடாரத்தில் வசித்த இவர், எளிமையான ஒரு இடுப்புப் பட்டையை அரசன் என்ற அடையாளத்திற்காக உடுத்தினார்.[5] சீக்கிரமே தங்க நாடோடிக் கூட்டத்தின் உஸ்பெக்கால் நடத்தப்பட்ட படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை இவருக்கு வந்தது. இவர் இந்தப் படையெடுப்பைத் தோற்கடித்தார். இந்தப் படையெடுப்பைக் காரணமாகக் கூறி அபு சயித்தின் விதவையான பாகுதது கதுனை மரண தண்டனைக்கு உட்படுத்தினார். அபு சயித்திற்கு உஸ்பெக்குடன் இணைந்து பாகுதது கதுன் விடம் வைத்ததாக அர்பா கேவுன் குற்றம் சாட்டினார்.[6] பிறகு அபு சயித்தின் சகோதரியும் சுபனின் விதவையுமான சதி பெக்கைத் தன்னுடைய ஆட்சிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைப்பதற்காகத் திருமணம் செய்து கொண்டார்.[7] 1336ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாருசு மாகாணத்தின் முன்னாள் ஆட்சியாளரான மகமுது ஷா இஞ்சுவையும் இவர் மரண தண்டனைக்கு உட்படுத்தினார். மகமுது இஞ்சு ஏற்கனவே அபு சயித்தைக் கொல்ல முயன்றதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அர்பா கேவுன், தன்னுடைய இராணுவங்களின் ஒட்டுமொத்த தலைமையைச் சேக் அசனிடம் கொடுத்தார்.
இவர் முஸ்லிம் பழக்க வழக்கங்களைப் பின்பற்றாதவராகக் கருதப்படுகிறார். செங்கிஸ் கானின் யசாவிற்கு அதிக ஆதரவு அளித்தார். கசன் மற்றும் அபு சயித் போன்ற முஸ்லிம் கான்களின் சட்டங்களைப் பெரும்பாலும் தவிர்த்தார்.[8] ஒயிரட்டுகளின் ஒரு பிரிவினர் இவரது ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. பகுதாதுவின் ஆளுநரான அலி பாட்ஷா, அபு சயித்தின் உறவினர் ஆவார். அவர் ஒயிரட்டுகளின் தலைவராகவும் இருந்தார். அவருக்கும் அரியணைமீது ஒரு ஆசை இருந்தது. அபு சயித்தின் மனைவி தில்சாத் கதுன் கர்ப்பமாக இருப்பதைக் கூறி இவர் மூசா என்பவரை வளர்த்தார். முசா பய்டுவின் பேரன் ஆவார். மூசாவை அரியணைக்கு உரிமையுள்ளவர் என்று இவர் கூறினார். அரிக் போகேயின் வழித்தோன்றல்களுடன் ஒயிரட்டுகளுக்கு இருந்த பாரம்பரிய எதிர்ப்பே இந்தக் கிளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[9]
செக் அசனை நடுநிலையாளராக்கிய பிறகு அர்பாவுடன் போர் புரிய அலி பாட்ஷா மரகாவுக்கு அருகில் இருந்த ஜகாடு சமவெளிக்கு 29 ஏப்ரல் 1336ஆம் ஆண்டு சென்றார். அர்பாவின் இராணுவத்திற்கு 60 அமீர்கள் தலைமை தாங்கினர். அவர்களில் முக்கியமானவர்கள் ஹாஜி தகே, உய்குர் தளபதியான ஓக்ருஞ்ச், தோருத், அல்குவின் மகனான ஒர்துக் ஷா மற்றும் சுபனின் மகனான சோர்கன் சீரா ஆகியோர் ஆவர். எனினும் சீக்கிரமே சில அமீர்கள் அலி பாட்ஷா பக்கம் கட்சி தாவினார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மகமுது எசன் குத்லுக் மற்றும் சுல்தான் ஷா நிக்ருசு ஆகியோர் ஆவர். இந்த யுத்தமானது அர்பாவுக்கு ஒரு தோல்வியாக முடிந்தது. சீக்கிரமே இவர் சுல்தானியாவில் கைது செய்யப்பட்டார். 15 மே 1336 அன்று இவரை மகமுது ஷாவின் மகனான அமீர் ஜலாலல்தீன் மசூத் ஷா கொன்றார்.[10]
உசாத்துணை
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.