அரசியல் விடுதலை

From Wikipedia, the free encyclopedia

அரசியல் விடுதலை அல்லது அரசியல் தன்னாட்சி (Political freedom) என்பது மக்கள் தாங்களாக தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக அவர்களின் நலத்துக்காக ஆட்சி செய்யும் உறவில் அமைந்த ஒரு நிலை. அப்படி இல்லாமல் மற்றவர்களின் வல்லாண்மையின் கீழ் உரிமைகள் கீழ்மைப்படுத்தப்பட்ட நிலையில் இல்லாமலும்[1], வலுவாக ஒடுக்கப்பட்டு ஒத்துப்போகச் செய்யாமலும்[2], தனிமாந்தர்கள் விரும்பியவாறு செயற்படுத்துவதை தடுக்காமலும்[3], பொருளாதாரம் போன்ற வழிகளில் பல்வேறு அழுத்தங்களும் வலியுறுத்தல்களும் இல்லாத[4], நிலையாகக் கருதப்படுகின்றது. அரசியல் விடுதலை அல்லது தன்னாட்சி என்பது அரசியல் அறிவியலில் (political science) ஒரு முக்கியமான கருதுகோளாக, கருத்துருவாக கருதப்படுகின்றது. குறிப்பாக மேற்குலக அரசியல் வரலாற்றில் மக்களாட்சி அமைப்புகளில் இது ஒரு முக்கியக் கருத்துருவாகக் கருதப்படுகின்றது(எ,கா அன்னா அரெண்ட்டு[5].)

பெரும்பாலான நேரங்களில் அரசியல் விடுதலை என்பது பல்வேறு புற அழுத்தங்களில் இருந்து விடுபடுதல் என்னும் நோக்கில் (இல்லாமை என்னும்) எதிர்மறையாக[6] கூறப்பட்டாலும், மக்கள் தங்களின் தனிமாந்த உரிமைகளையும் கூட்டு, குழு உரிமைகளையும் நிலைபெறச்செய்தல்,[7] என்றும் நேர்நிலையாகப் (positive) புரிந்துகொள்ளலாம். இக்கருத்துருவானது மக்கள் தங்களுக்குள் இருக்கும் தன்னகத் தடைகள், கட்டுப்பாடுகளில் (பேச்சு, செயற்பாடுகளில்) இருந்து விடுபடுதல் என்னும் நோக்கிலும், புறவயமான குமுக எதிர்பார்ப்புகளுக்குக் கட்டுப்பட்டு நடத்தல்[8] என்பதில் இருந்தும் விடுபாட்டுடன் சிந்தித்தல் செயல்படுதல் என்னும் நோக்கிலும் விடுதலை என்று உணரப்படுகின்றது. அரசியல் விடுதலை அல்லது தன்னாட்சி என்பது குடிசார் உரிமைகள் பெற்றிருப்பதுடன், நடத்தை (பேச்சு செயல்) முதலியவற்றில் முழு உரிமைகளோடும், மாந்த நேய அடிப்படை உரிமைகளோடும் சட்டத்தின் பாதுகாப்போடு வாழ்தல் என்பதைக் குறிக்கும்.

வரலாறு

பல மேற்குலக அரசியல் அறிஞர்களின் கருத்துப்படி கிரேக்க நாட்டின் அரசியல் கோட்பாடுகளில் இருந்தும் செயற்பாடுகளில் இருந்தும் அரசியல் விடுதலை என்னும் கருத்து உருவானது. (எ.கா அன்னா அரெண்ட்டு (Hannah Arendt)[9]). அரெண்ட்டு அவர்களின் கருத்துப்படி அரசியல் விடுதலை என்பது அரசியல் செயற்பாடு ("Action") என்பதில் இருந்து பிரித்தறிய முடியாதது. அரசியல் செயற்பாடுகளை நடத்துவது என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் நிறைவு எய்தியவர்களால் மட்டுமே இயலும் என்றார். அரெண்ட்டின் கருத்துப்படி விடுதலை (விடுபாட்டுநிலை) என்பது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு கிறித்தவக் கருதுகோளாகக் கருதப்பட்ட தன்னுரிமை ("free will or freedom of the will") அல்லது தன்னுள் விடுபாட்டுநிலைமை என்பதோடு தொடர்புடையது. இப்படி அரசியல் செயற்பாட்டுக்கு முக்கிய காரணமான விடுபாட்டுநிலைமை (விடுதலை) இருந்தபோதிலும், இது அரசியல் செயற்பாட்டில் ஒரு முக்கியக் கூறாக விளங்கவில்லை.

இக் கருதுகோள் பற்றிய கருத்துகள்

உண்மையில் அரசியல் விடுதலை (விடுபாட்டுநிலை) என்றால் என்ன என்று பல குழுவினர் பல்வேறு வகையான கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர்.

இடதுசாரி அரசியல் கருத்துடையோர் ஒரு தனி மாந்தனோ, குழுவோ தன் அலல்து தம் உள் திறமையை முற்றிலுமாக எட்ட முற்படுவது எட்டுவது என்று பொருள் கொள்கின்றனர். இதனைத் தடைகள், கட்டுகள் மீறி விடுபடுவது என்னும் எதிர்மறையாக அணுகும் கருத்தாகக் கொள்ளாமல் நேர்முறையாக தன்/தம் திறனை வாய்ப்புக்கூறுகளை எட்டுதல் தன்னுரிமையைத் தானாகப் பெற்றிருத்தல் என்று கொள்கின்றனர். அரசிய அறிவியலில் இதனை நேர்முறை விடுதலைக் கொள்கை என்கிறார்கள்.

பிரீடரிச் அயாக்கு (Friedrich Hayek) என்னும் நன்கு அறியப்பட்ட மரபியல் தாராண்மையாளர் இதனை விடுதலை என்பதன் பிறழ்ச்சியான உள்வாங்கல் என்று மறுத்துரைத்தார்:

[T]he use of "liberty" to describe the physical "ability to do what I want", the power to satisfy our wishes, or the extent of the choice of alternatives open to us ... has been deliberately fostered as part of the socialist argument ... the notion of collective power over circumstances has been substituted for that of individual liberty.[10]

(மொழிபெயர்ப்பு) "எனக்கு வேண்டுவதை நான் செய்யும் ஆற்றலை", நம் விருப்பங்களை நிறைவு செய்வதற்கு, அல்லது நமக்கு உள்ள தெரிவுகளைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றை விடுதலை என்று விளக்கியுரைப்பது, சோசலிசவாதமாக (குமுகவியல் கோட்பாடாக) வேண்டுமென்றே முன்வைப்பதாகும் ...தனி மாந்த விடுதலைக்காக கூட்டாக பலருடைய வலிமையைப் கொண்டு நிறுத்துவதாகும்."

தற்கால விடுதலைக் கொள்கையை முழுமைப்படுத்தும் இருகூறுகளாக நேர்முறை, எதிர்மறை விடுதலைக் கருதுகோள்களைப் பல குமுகாய (சமுதாய) அரசுமறுப்பாளர்கள் கருதுகிறார்கள். எதிர்மறை விடுதலை கருதுகோளை மையமாகக் கொண்டதை முதலாளியச் சாய்வு கொண்ட "தன்னல விடுதலை" ("selfish freedom") என்று கருதுகிறார்கள்.[11]

அலசிடேயர் மாக்கின்ட்டாயர் (Alasdair MacIntyre) போன்ற குறிப்பிடத்தக்க மெய்யியலாளர்கள் இந்த விடுதலை என்பது ஒருவருக்கு ஒருவர் தேவை என்னும் குமுக உறவாட்டத்தின் அடிப்படையில் அமைந்தது என்று கருதுகின்றனர்.[12]

அரசியல் மெய்யியலாளர் நிக்கோலசு கொம்ப்பிரிடிசு (Nikolas Kompridis) என்பாரின் கருத்துப்படி தற்காலத்தில் விடுதலையை எட்டுவது என்பதை இரண்டு உந்துதல்களின் அடிப்படையில் அணுகலாம்: விடுதலை என்பதைத் தன்னாட்சி அல்லது விடுபாடு ("independence") என்று கொள்ளுதல் அல்லது கூட்டுறவாக புதிய ஒரு தொடக்கத்தை எட்டுவது விடுபாடு எய்துதல் என்பது[13]

அரசியல் விடுதலை என்பது "அதிகாரப் பகிர்வுறவு" அல்லது "வினைக்கு மேல் வினை ஆற்றும்" ஆற்றல் என்னும் விதமாக கருதப்படுகின்றது என்கிறார் மிசேல் ஃவூக்கால்ட்டு (Michel Foucault) [14] இதனை கலை அல்லது பண்பாட்டு வழக்கமாகவும் கருதுகின்றார்கள் பலர் (கார்னேலியசு காசிட்டோரிஆடிசு (Cornelius Castoriadis), அந்தோனியோ கிராமாசி (Antonio Gramsci), எர்பெர்ட்டு மார்க்கியூசு (Herbert Marcuse), இழாக்கு இரான்சியே (Jacques Ranciere), தியோடோர் அடோமோ (Theodor Adorno)).

அரசியல் விடுதலை என்னும் கருத்தியலில் சுற்றுச்சூழலியல் பற்றிய சில கட்டுப்பாடுகள் இருத்தல் வேன்டும் என்று சுற்றுச்சூழலியலாளர்கள் கூறுகின்றனர். விடுதலை என்னும் கருத்து "மாசுபடுத்த விடுதலை" அல்லது "காட்டை அழிக்க விடுதலை" என்பதாகக் கொள்ளல் இயலாது; புறத்தே தீய சூழல் உருவாகுவதைத் தடுக்கக் கட்டுப்பாடுகள் கொண்டிருத்தல் வேண்டும் என்கின்றனர். கோல்ஃவு (Golf) மைதானம், எசுவி (SUV) போன்ற பெரிய தானுந்துகள் பயன்படுத்தல் போன்றவை சூழலை அதிகம் மாசுபடுத்துகின்றது என்பதால் பல்வேறு கருத்துமோதல்கள் இருக்கும் என்று கருதுகின்றனர்.

சான் தால்பெர்கு-ஆக்டன் (John Dalberg-Acton) கூறியவாறு, ஒரு நாடு உண்மையிலேயே விடுதலை பெற்றுள்ளதா என்று அறிய வேண்டும் எனில் அதில் உள்ள சிறுபான்மையருக்கு எந்த அளவு பாதுகாப்பு உள்ளது என்பதைப் பார்க்கவேண்டும்.[15]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.