பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது மொழி, பண்பாட்டு பன்மையையும் உலகின் பல மொழிகளையும் மேம்படுத்தலுக்கான விழிப்புணர்வை வென்றெடுக்க கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் முதலில் யுனெசுக்கோவால் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 இல் அறிவிக்கப்பட்டது.[1] இது பன்னாட்டுத் தீர்மானம் 56/262 வழி பன்னாட்டுப் பொதுமன்றில் முறையாக 2002 இல் ஏற்கப்பட்டது[2].தாய்மொழி நாள் என்பது பன்னாட்டவையில் 2007 ஆம் ஆண்டு மே 16 இல் முன்னெடுத்த 61/266 தீர்மானத்தின்படி "உலக மக்கள் மொழிகளைப் பேணி வளர்த்தலையும் பாதுகாத்தலையும் வென்றெடுக்கும் விரிவான முன்முயற்சியின்" ஒரு பகுதியே ஆகும்.[3] இத்தீர்மானம் 2008 ஆம் ஆண்டை பன்னாட்டு மொழிகளுக்கான ஆண்டாகவும் அறிவித்தது.[4][5][6][7]

விரைவான உண்மைகள் பன்னாட்டுத் தாய்மொழிநாள், அதிகாரப்பூர்வ பெயர் ...
பன்னாட்டுத் தாய்மொழிநாள்
Thumb
சாகிது மினார் (உயிரீந்த மாணவர் நினைவுத் தூண்) 1952, பிப்ரவரி, 21 வங்காள மொழிப் போராட்டத்தைக் கொண்டாடுகிறது.
அதிகாரப்பூர்வ பெயர்பன்னாட்டுத் தாய்மொழி நாள்
கடைப்பிடிப்போர்உலக முழுவதும்
முக்கியத்துவம்அனைத்து மொழிகளையும் மேம்படுத்தலும் காத்தலும்
நாள்21 பிப்ரவரி
நிகழ்வுஆண்டுதோறும்
மூடு
Thumb
சாகிது மினார்: பெப்ரவரி 21, 1952 இல் உயிர்நீத்த மாணவர்கள் நினைவாக தாக்காவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண்


1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாக்கித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.[8] வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 அன்று பொதுமன்ற மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெசுக்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" (“Mother tongues and books - including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது[9]

வரலாறு

1999 ஆம் ஆண்டில் பிப்ரவரி 21 ஆம் திகதியை பன்னாட்டு தாய்மொழி நாளாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. முதல் உலகம் முழுவதிலும்  2000 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21 ஆம் திகதி பன்னாட்டு தாய்மொழி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

1947 ஆம் ஆண்டில் கிழக்கு பாக்கித்தான் (தற்போது வங்காளதேசம்), மேற்கு பாக்கித்தான் (தற்போது பாக்கித்தான்) ஆகிய இரு வெவ்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டு பாக்கித்தான் எனும் நாடு உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு இடையில் மேற்கிலும் கிழக்கிலும் பிரிக்கப்பட்ட இரு பகுதிகளும் மொழியிலும் பண்பாட்டிலும் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டிருந்தன.

கிழக்கு பாக்கித்தானில் (வங்களாதேசம்) உள்ள பெரும்பான்மை மக்களால் வங்காள மொழி பேசப்பட்டாலும் 1948 ஆம் ஆண்டின் அப்போதைய பாக்கித்தான் அரசு உருது மொழியை ஒருமித்த பாக்கித்தான் நாட்டின் ஒரே தேசிய மொழியாக அறிவித்தது. இதற்குக் கிழக்கு பாக்கித்தான் மக்க தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கிழக்கு பாக்கித்தான் மக்கள் அவர்களது தாய் மொழியான வங்காள மொழியைக் குறைந்தது தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டுமென்று கோரினார்கள். இந்தக் கோரிக்கை முதலில் தேரேந்திரநாத் தத்தா அவர்களால் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் நாளன்று பாக்கித்தான் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.

இதற்காக, தாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பொது மக்களின் ஆதரவுடன், மாபெரும் பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்தனர். போராட்டத்தை முடக்குவதற்காக பாக்கித்தான் அரசாங்கம் பொதுக் கூட்டத்தையும் பேரணிகளையும் தடை செய்தது. 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி நடைப்பெற்ற பேரணியில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டினால் அப்துசு சலாம், அப்துல் பார்கத், இரபீக் அகமது, அப்துல் ஜபார், சபியூர் இரகுமான் ஆகிய மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தாய்மொழிக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த இந்த நிகழ்ச்சி வரலாற்றில் பதியப்பட்ட அரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். .[10][11] இதற்குப் பிறகு வங்காளத் தேச மக்கள் பன்னாட்டுத் தாய்மொழி நாளை ஓர் துயரம் தோய்ந்த நாளாகக் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் தாய்மொழிக்காக உயிரீந்த மாணவ்ரின் நினைவிடமான சாகிது மினாரை அடைந்து ஒவ்வோர் ஆண்டும் தம் ஆழ்ந்த அவலத்தையும் மதிப்பையும் நன்றிக் கடப்பாட்டையும் நினைவேந்தலூடாக வெளிப்படுத்தி வருகின்றனர்.[சான்று தேவை][12][13]

தற்போது வங்காளத் தேசத்தில் பன்னாட்டுத் தாய்மொழி நாள் ஒரு பொது விடுமுறை நாளாகவே(தேசிய நாளாகவே) கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் கனடாவில் வாங்கூரில் வாழும் வங்க தேச நாட்டவராகிய இரபுக்குள் இசுலாமாலும் அப்துசு சலாமாலும் முதலில் முன்மொழியப்பட்டது. இவர்கள் 1998 ஜனவரி 9 இல் கோபி ஆன்னுக்கு ஒரு கடிதம் வழி உலக மொழிகள் மறையாமல் காத்திட பன்னாட்டுத் தாய்மொழி நாளைக் கொண்டாடுவதற்கான தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொண்டனர். இதற்கு இரபிக்குல் 1952 இல் நடந்த மொழி இயக்கத்தின்போது தாக்காவில் கொல்லப்பட்ட பிப்ரவரி 21 ஆம் நாளை முன்மொழிந்தார்.

மொழிகள் நம் அக, புற மரபைப் பேணி வளர்க்கும் திறன்வாய்ந்த கருவிகளாகும். தாய்மொழிகளை மேம்படுத்திப் பரப்பித் தன்வயப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மொழிப்பன்மையையும் பன்மொழிக் கல்வியையும் ஊக்குவிப்பதோடு மொழி, பண்பாட்டு மரபுகளுக்கான விழிப்புணர்வை வென்றெடுத்து உலக மக்களிடையே புரிந்துணர்வையும் உரையாடலையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுக்கும்.

From the United Nations International Mother Language Day microsite[14]

இரபிக்குல் இசுலாமின் முன்மொழிவு வங்க தேச நாடாளுமன்றத்தில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாளடைவில் இந்த முன்மொழிவு அந்நாட்டு முதன்மை அமைச்சராகிய சேக் அசீனாவால் வங்க தேச அரசுவழி யுனெசுக்கோவுக்கு அனுப்பப்பட்டது. இந்த முன்மொழிவை அன்றைய பிரான்சு நாட்டுக்கான வங்க தேசத் தூதுவரும் யுனெசுக்கோவுக்கான நிலையானப் பேராளருமான சையத் முவாசெம் அலி யுனெசுக்கோ ஒழுங்குமுறை அமைப்பின் ஊடாக வழிப்படுத்தினார். இப்பணியில் முன்னாள் உனெசுக்கோ பொது செயலாளராக இருந்த பெதரிக்கோவுக்குச் சிறப்பு அலுவலராக இருந்த தோசெம்மல் தோனி கக்கும் உடன் துணைபுரிந்துள்ளார். இறுதியாக யுனெசுக்கோ 20 ஆம் பொதுமன்றம் 1999 ஆண்டு நவம்சர் 17 ஆம் நாளன்று ஒருமனதாக "ஒவ்வோராண்டும் பிப்ரவர் 21 ஆம் நாளை 1952 இல் தாய்மொழிக்காகத் தம் உயிரீந்த மாணவரது நினைவாக பன்னாட்டுத் தாய்மொழி நாளாக உலகமுழுதும் கடைபிடிக்கலாம்" எனத் தீர்மானித்தது.[15]

கால நிரல்

Thumb
பன்னாட்டுத் தாய்னொழி நாள் நினைவுத் தூண், ஆழ்சுபீல்டு பூங்கா, சிட்னி, 19 பிப்ரவரி 2006
Thumb
கனடாவில்பன்னாட்டுத் தாய்மொழி நாள் கொண்டாட்டத்தில் மக்கள் மலர்தூவல்
  • 1952: வங்கள மொழி இயக்கம்
  • 1955: வங்காள தேச முதல் மொழி இயக்க நாள் கடைபிடித்தல்[16]
  • 1999: யுனெஸ்கோ பிப்ரவரி 21 ஆம் நாளை பன்னாட்டுத் தாய்மொழி நாளாக பறைசாற்றல்
  • 2000: பன்னாட்டுத் தாய்மொழி நாள் கொண்டாட்டத் தொடக்கம்[சான்று தேவை]
  • 2002: ஆண்டுப் பொருண்மை: மொழிப் பன்மை போற்றல், அழிநிலையில் உள்ள 3,000 மொழிகள் கருதி, (குறிக்கோள்: மொழியெனும் பால்வெளியில் ஒவ்வொரு சொல்லும் ஒரு விண்மீனே.)[சான்று தேவை]
  • 2004: ஆண்டுப் பொருண்மை: சிறார் கல்வி; the UNESCO observance included "a unique exhibition of children’s exercise books from around the world illustrating the process by which children learn and master the use of written literacy skills in the classroom".[17]
  • 2005: ஆண்டுப் பொருண்மை: பிரெய்லும் குறிவழி மொழிகளும்[18]
  • 2006: ஆண்டுப் பொருண்மை: "மொழியும் இணைய வெளியும்"[19]
  • 2007: ஆண்டுப் பொருண்மை: பன்மொழிக் கல்வி[20]
  • 2008: பன்னாட்டு மொழிகள் ஆண்டு[சான்று தேவை]
  • 2010: பன்னாட்டுப் பண்பாடுகள் மீட்பொ ஆண்டு[சான்று தேவை]
  • 2012: தாய்மொழி பயிற்றுவிப்பும் உள்ளடங்கிய கல்வியும்[சான்று தேவை]
  • 2013: ஆண்டுப் பொருண்மை: " தாய்மொழிக் கல்வி நூல்கள்"[21]
  • 2014: ஆண்டுப் பொருண்மை: "உலகக் குடியுரிமைக்கான வட்டார மொழி: அறிவியல் காட்சிக் கூடம்"[22]
  • 2015: ஆண்டுப் பொருண்மை: "கல்வியில் தாய்மொழியின் சிறப்பும் இன்றியமையாமையும்: மொழியே உயிர்நாடி"[23][24]
  • 2016: ஆண்டுப் பொருண்மை: "தரமான கல்வி, மொழிபயிற்ருவிப்பு கற்றல் வளங்களும்"[25]
  • 2017: ஆண்டுப் பொருண்மை: " பன்மொழிக் கல்வி வழியிலான நீடிப்புதிற வளர்ச்சி"[26]
  • 2018: ஆண்டுப் பொருண்மை: நமது மொழிகளே, நமது சொத்துகள்.[சான்று தேவை]
  • 2019: ஆண்டுப் பொருண்மை: பன்னாட்டுப் பிறந்தக மொழிகள் நாள்[27]
  • 2020: ஆண்டுப் பொருண்மை: " மொழிப் பண்மை காத்தல்"[28]
  • 2021: ஆண்டுப் பொருண்மை: " உள்ளடங்கிய சமூகமும் கல்வியும் நோக்கில் , பன்மொழிகளையும் வளப்படுத்தல்"[29]
  • 2022: ஆண்டுப் பொருண்மை: "பன்மொழி கற்றலுக்கான தொழில்நுட்பம்: அறைகூவல்களும் வாய்ப்புகளும்"[30]

பன்னாட்டுக் கொண்டாட்டங்கள்

யுனெஸ்கோ பன்னாட்டுத் தாய்மொழி நாளுக்காக ஒரு பொருண்மையை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து பாரீசு தலைமையகத்தில் கொண்டாடுகிறது. மேலும் 2008 ஆம் ஆண்டை மொழிகளின் ஆண்டாக பன்னாட்டுத் தாய்மொழி நாளில் இருந்து தொடங்கி கொண்டாடியது. சிலி, உருசியா, பிலிப்பைன்சு, எகிப்து கனடா ஆகிய நாடுகள் மொழிகள் ஆண்டைக் கடைபிடித்துக் கொண்டாடின.[31]

வங்காள தேசம்

வங்காள தேச மக்கள் பன்னாட்டுத் தாய்மொழி நாளை தாக்காவில் உள்ள சாகித்து மினாரில் மலர்தூவி கொண்டாடுகின்றனர்.[32] வங்க தேசத்தில் 1953 இல் இருந்து விடுமுறை கடைபிடிக்கும் இந்நாள்,[33] மொழி இயக்க நாள் எனவும் உயிரீந்தோர் நாள் எனவும் வழங்கப்படுகிறது. யுனெசுகோ 1999 நவம்பர், 17 ஆம் நாளன்று இதை ஏற்று பிப்ரவரி 21 ஆம் நாளைப் பன்னாட்டுத் தாய்மொழி நாளாகக் கொண்டாட அறிவித்தது.[34] வங்க தேசத்தினர் தம் மொழியையும் பண்பாட்டையும் பேண சமுகக் குழுமல்களை உருவாக்கி, இலக்கியப் போட்டிகளை நடத்தி, சாலைகளில் ஓவியங்களை வரைந்து, விருந்துண்டு, பாடல்கள் பாடி மகிழ்கின்றர்.[32][35] வங்காளக் கல்விக்கழகம் தாக்காவில் பிப்ரவரி மாதம் முழுவதும் எக்குழ்சே புத்தக விழா நடத்துகிறது.[36]

கனடா

Thumb
தாய்மொழி நாள் பிரித்தானியக் கொலம்பியா பறைசாற்றல்

கனடா நாடாளுமன்றம் 2014 பிப்ரவரி 5 இல் பன்னாட்டுத் தாய்மொழி நாளை ஏற்று தனியர் உரிமை சட்டவரைவாக(C-573) மத்தேயு கெல்வேவால் அறிமுகப்படுத்தப்பட்டது.[37][38]

பிரித்தானியக் கொலம்பியாவும் மணிதோபாவும் 2015 இல் பன்னாட்டுத் தாய்மொழி நாளைப் பிப்ரவரி 21 இல் கொண்டாட ஏற்று அறிக்கை வெளியிட்டு பறைசாற்றின.[39] எடுமாண்டன் 2017 பிப்ரவரி 21 இல் பன்னாட்டுத் தாய்மொழி நாளைக் கொண்டாடியது.[40] வங்காள தேச மரபுரிமை இனக்குழு கழகம் கடைபிடிக்கும் எடுமாண்டன் எக்குழ்சேவும் எக்குழ்சே பன்மையமும் 2020 பிப்ரவரி 23 நாளன்று பாராட்டிக் கொண்டாடப்பட்டன.[41]

இந்தியா

இந்தியத் துணைக்கண்டத்தில் சுமார் 6500 மொழிகளைப் பேசும் 700 கோடி மக்களில் இந்தியாவில் மட்டுமே 1652 மொழிகளைப் பேசும் மக்கள் உள்ளனர். பல்வேறு நெருக்கடிகள் காரணமாக இதில் 250 மொழிகள் அழிந்துபோயின, சுமார் 122 மொழிகள் அழியும் தறுவாயில் உள்ளன.[42] இந்திய இலக்கவியல் முன்முயற்சியாக, இந்தியாவின் 22 அலுவல்சார் மொழிகளில் முதலில் இணையவெளிகளில் இடப்பட்டு, பின்னர் 234 இந்திய மொழிகளூக்கும் விரிவாக்கப்படவுள்ளது. இம்முயற்சி பாரதவாணி திட்டம் வழியாக 2016 சூன் மாதத்தில் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் தொடங்கியது, 2017 பிப்ரவரி வரை 60 இந்திய மொழிகளில் தகவலிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.[43][44][45]

ஐக்கிய அமெரிக்கா

அமெரிக்கா, வாழ்சிங்டனில் 2017 முதல் பன்னாட்டுத் தாய்மொழி நாளோடு இணைந்து பன்னாட்டுத் திரைப்பட விழா கடைபிடிக்கப்படுகிறது.

பெரும்பிரித்தானியா

இலண்டன் நகரத்து வைட்சாப்பலில் உள்ள அல்தாபு அலி பூங்காவில் 1999 ஆம் ஆண்டில் தாக்காவின் சாகித்து மினாரின் நிகர்படிமம் ஒன்று கட்டியெழுப்பப்பட்டது. மக்கள் இங்கே திரளாக வந்திருந்து பன்னாட்டுத் தாய்மொழி நாளைப் புரட்சிப் பாடலைப் பாடியும் மலர்வலயம் வைத்தும் கொண்டாடுகின்றனர்.[46][47]

மான்செசுட்டர் பெருநகரத்து வெசுட்டுவுடில் சாகித்து மினாரின் மறுபடிமம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வடக்கு இங்கிலாந்து முதல் அந்த நினைவிட்த்துக்கு வந்து பலர் பன்னாட்டுத் தாய்மொழி நாளைக் கொண்டாடுகின்றனர்.[48]

விருதுகள்

இலிங்குவாபாக்சு பரிசு

பார்சிலோனாவில் இலிங்குவாபாக்சு நிறுவனம் மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், மொழியியல் சமூகங்களின் புத்துயிர் பெறுதல் மற்றும் பன்மொழியை மேம்படுத்தல் ஆகியவற்றில் சிறப்பான சாதனைகளுக்கான இலிங்வாபாக்சு பரிசை வழங்கிவருகின்றது.[49]

எக்குழ்சே மரபு விருது

2014 ஆம் ஆண்டில் ஆல்பர்ட்டவில் உள்ள வங்காளதேச இனவியை மரபு பேணல் கழகம்(BHESA) பன்னாட்டு தாய்மொழி நாளில் கல்வி, சமூக பணி மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறப்பான சாதனைகளுக்கான ஏகுழ்சே மரபு விருதை அறிவித்து வழங்கிவருகிறது.[50]

எக்குழ்சே இளைஞர் விருது

2015 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்பர்ட்டாவில் அமைந்த மகினூர் ஜாகிது நினைவு அறக்கட்டளை(எம்.ஜே.எம்.எஃப்) கல்வி, விளையாட்டு, இளைஞர் நடவடிக்கைகள், இலக்கியம், சமூக சேவை ஆகிய துறைகளில் இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக ஆல்பர்ட்டா குடியிருப்பாளர்களுக்கான ஏகுழ்சே இளைஞர் விருதை வழங்கிவருகிறது.[51]

இவற்றையும் பார்க்க

காட்சி மேடை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.