பூமியிலுள்ள ஒரு பெருங்கடல் From Wikipedia, the free encyclopedia
அத்திலாந்திக்குப் பெருங்கடல் (Atlantic Ocean) உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடலாகும். இது 106,400,000 சதுர கிலோ மீட்டர் (41,100,000 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும்.[1][2] அத்திலாந்திக்குப் பெருங்கடல் புவிப்பரப்பில் சுமார் 20 சதவீத இடத்தையும், புவியின் நீர்ப்பரப்பில் சுமார் 29 சதவீத இடத்தையும் பிடித்துள்ளது. மேற்கு கண்டம் என்றும் புதிய உலகம் என்றும் அழைக்கப்படும் அமெரிக்கக் கண்டத்தையும் கிழக்குக் கண்டம் என்றும் பழைய உலகம் என்றும் அழைக்கப்படும் மற்றக் கண்டங்களையும் இது இணைக்கிறது.
அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஒரு நீளமான, S- வடிவ வடிநிலத்தைக் கொண்டுள்ளது. கிழக்கில் யூரேசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் மேற்கில் அமெரிக்காவுக்குமிடையில் இப்பெருங்கடல் பரந்திருக்கிறது. ஒன்றிணைந்த உலகளாவிய கடற் பரப்பின் ஒரு பகுதியாக வடக்கில் ஆட்டிக்குப் பெருங்கடல், தென்மேற்கில் பசுபிக்குப் பெருங்கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல், தெற்கில் தென் பெருங்கடல் ஆகிய கடல்களுடன் இது இணைந்துள்ளது. ஆட்டிக்குக் கடலில் இருந்து அந்தாட்டிக்குக் கடல் வரை பரந்து விரிந்ததென அத்திலாந்திக்கைப் பிற வரையறைகள் தெரிவிக்கின்றன. நடுக்கோட்டு நீரோட்டம் இப்பெருங்கடலை 8° வடக்கில் வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் என்றும் தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் என்றும் இரண்டாகப் பிரிக்கிறது.[3]
செலஞ்சர் பயணம், செருமனியின் விண்கலப் பயணம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இலாமோன்ட்-டோயெர்டி புவி வானாய்வகம், அமெரிக்காவின் கடல் நீரியல் அலுவலகம் உள்ளிட்டவை அத்திலாந்திக்குப் பெருங்கடலின் அறிவியல் ஆராய்ச்சிகளைக் கொண்டுள்ளன.[3]
அட்லாண்டிக் பெருங்கடலைப்பற்றிய பழமையான சொற்பயன்பாடு தொடர்பான செய்திகள் கிட்டத்தட்ட பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டின் மையக் காலத்தில் பாடலாசிரியர் சிடெசிகோரசின் பாடல்களில் காணப்படுகின்றன.[4] அட்லாண்டிகோய் பெலாகி என்ற சொல் கிரேக்கம்: Ἀτλαντικῷ πελάγει; ஆங்கிலம்: 'the Atlantic sea' என்றும் பொ.ஊ. 450 காலத்திய கிரேக்க வரலாற்று அறிஞர் எரோட்டசின் நூலில் அட்லாண்டிசு தலசா என்ற சொல் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.[5] இதன் பொருள் நிலப்பகுதிகள் யாவற்ரையும் சூழ்ந்துள்ள கடற்பகுதி என்பதாகும்.[6] ஒருபுறம், கிரேக்க புராணங்களில் டைட்டான் என்ற வானக் கடவுளைக் குறிப்பிட இப்பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. இக்கடவுள் சொர்க்கத்தை ஆதரித்து பின்னர் மத்திய கால வரைபடத்தில் ஒரு முன்னோடிப் பாத்திரமாக இடம்பெற்றவராவார். மேலும் இவருடைய பெயர் நவீன அட்லசுக்கும் பெயராக வைக்கப்பட்டது.[6] மறுபுறம், ஆரம்பகால கிரேக்க மாலுமிகளுக்கும், இலியட் மற்றும் ஒடிசி போன்ற பண்டைய கிரேக்க புராண இலக்கியங்களிலும், நிலப்பரப்பைச் சூழ்ந்திருந்த இப்பெரு நீர்ப்பரப்பு ஓசனசு என்று அழைக்கப்0பட்டது. இதன் பொருள் உலகத்தைச் ச்ழ்ந்துள்ள மிகப்பெரிய நதி என்பதாகும். கிரேக்கர்களால் நன்கு அறியப்பட்ட மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் போன்ற கடல்களுக்கு மாறாக இது இருந்தது.[7] இதற்கு மாறாக, "அட்லாண்டிக்" என்ற சொல் மொராக்கோவில் உள்ள அட்லசு மலைகள் மற்றும் கிப்ரால்டர் நீரிணை மற்றும் வட ஆப்பிரிக்க கடற்கரை ஆகியவற்றைக் குறிப்பதாக குறிப்பிடப்படுகிறது.[6] கிரேக்க வார்த்தையான தலசா என்ற சொல் ஏறத்தாழ 250 மில்லியன்ஆண்டுகளுக்கு முன்னர் பெருநிலப் பரப்பான மீக்கண்டத்தைச் சூழ்ந்திருந்ததாகக் கருதப்படும் பாந்தலசா என்ற மீக்கடலைக் குறிபிடுவதற்காக விஞ்ஞானிகளால் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
பண்டைய எத்தியோப்பியாவிலிருந்து எத்தியோபியன் பெருங்கடல் என்ற சொல் பெறப்பட்டதாகும். இப்பெயர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்கு அட்லாண்டிக் பகுதிக்கு பயன்படுத்தப்பட்டது.[8] பொதுவாக, மவுண்ட் அட்லாசு என்னும் மலை அல்லது அட்லாண்டிசு என்னும் தீவு ஆகிய இரண்டின் பெயர்களே அட்லாண்டிக் பெருங்கடல் என்ற பெயர் அமைவதற்கு காரணமாக உள்ளன.
.
சர்வதேச நீரியல் நிறுவனம் 1953 ஆம் ஆண்டில் கடல்கள் மற்றும் பெருகடல்களின் வரம்புகளை வரையறுத்தது.[9] ஆனால் இந்த வரையறைகளில் சில பின்னர் மறுசீரமைக்கப்பட்டன. சில வரையறைகள் பல்வேறு அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளால் பயன்படுத்தப்படவில்லை, உதாரணமாக சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம். இதன்படி, கடல் மற்றும் கடல்களின் அளவு மற்றும் எண்ணிக்கை வேறுபடுகிறது.
அட்லாண்டிக் பெருங்கடல் மேற்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவால் சூழப்பட்டுள்ளது. டென்மார்க் நீரிணை, கிரீன்லாந்து கடல், நார்வேயின் கடல், பேரண்ட்சு கடல் ஆகியவற்ரின் வழியாக ஆர்க்டிக் பெருங்கடலை இணைக்கிறது. கிழக்கே, இக்கடலின் எல்லையாக ஐரோப்பாவும், கிப்ரால்டர் நீரிணையும் ஆப்பிரிக்காவும் அமைந்துள்ளன. 'கிப்ரால்ட்டர் நீரிணை மத்தியதரைக் கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கிறது. கருங்கடல் மத்தியதரைக் கடலுடன் இணைந்துள்ளது. இவ்விரு கடல்களும் ஆசியாவைத் தொடுகின்றன.
தென்கிழக்கு திசையில் அட்லாண்டிக் பெருங்கடல் இந்திய பெருங்கடலில் இணைகிறது. கேப் அகுலாசிலிருந்து அண்டார்க்டிக்கா வரை தெற்காக ஓடும் 20 ° கிழக்கு நெடுவரை இதன் எல்லையை வரையறுக்கிறது. 1953 ஆம் ஆண்டு வரையறையானது இதன் தெற்கை அண்டார்டிக்கா வரை நீட்டித்தது. அதே சமயம் பிற்கால வரைபடங்களில் இது தெற்குப் பெருங்கடலுடன் 60 ° இணையாகச் சூழப்பட்டுள்ளது.[9]
அட்லாண்டிக் கடலின் இரு கரைகளிலும் சீர்மையற்ற பல பெரிய உள்நாட்டுக் கடல்களும், வளை குடாக்களும், விரிகுடாக்களும் காணப்படுகின்றன. வடகடல், பால்டிக் கடல், மத்தியதரைக்கடல், கருங்கடல், கரிபியக் கடல், டேவிசு நீரிணை, டென்மார்க் நீரிணை, மெக்சிகோ வளைகுடா, லாப்ரடார் கடல், நார்வேயின் கடல், இசுக்காட்டியக் கடலின் பெரும்பகுதி மற்றும் பிற துணையாறுகள் உள்ளிட்டவை அட்லாண்டிக் கடலுடன் தொடர்புடையவையேயாகும்.[10] இவையனைத்தையும் உள்ளடக்கிய அட்லாண்டிக் கடற்கரை சுமார் 111,866 கிலோமீட்டர் நீலத்தைப் பெற்றுள்ளது. பசிபிக் பெருங்கடலின் கடற்கரைப் பகுதியின் நீளம் 135,663 கிலோமீட்டர்களாகும்.[11]
கரையோரக் கடல்களையும் உள்ளடக்கி அட்லாண்டிக் பெருங்கடல் மொத்தமாக 106,460,000 சதுர கி.மீ (41,100,000 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது உலகக் கடற்பரப்பின் மொத்தத்தில் 23.5 சதவீதமாகும். இதே போல அட்லாண்டிக் பெருங்கடலின் கன அளவு 310,410,900 கன கி.மீ (74,471,500 கன மைல்) ஆகும். இது உலகக் கடற் கன அளவின் மொத்தத்தில் 23.3% ஆகும். வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் 41,490,000 சதுர கி.மீ (16,020,000 சதுர மைல்) பரப்பளவும் (11.5%) தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் 40,270,000 சதுர கி.மீ (15,550,000 சதுரமைல்) (11.1%) பரப்பளவையும் கொண்டுள்ளன. அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம் சராசரியாக 3,646 மீட்டர் (11,962 அடி) ஆகும். அதிகபட்ச ஆழம் பியுவர்டோரிகோ அகழியில் உள்ள மில்வௌக்கி பள்ளம் 8,486 மீட்டர் (27,841 அடி) ஆழத்தைக் கொண்டதாக உள்ளது.[12]
மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு நீர்மூழ்கி மலைமுகடு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழப்பகுதியில் அமைந்துள்ளது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 87° வடக்கு அல்லது வடதுருவத்திற்குத் தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் அண்டார்டிக்கிலுள்ள 42° தெற்கு பௌவெட் தீவில் செல்கிறது.[13]
மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் அட்லாண்டிக் தரைப்பகுதியை இரண்டு பள்ளத்தாக்குகளாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் இரண்டாம் நிலை குறுக்கு வழிகளால் பிரிக்கப்பட்ட தொடர்ச்சியான வடிநிலங்களைக் கொண்டுள்ளன. இம்மலைத்தொடர் 2000 மைல் வரை நீளமாகப் பரவியுள்ளது. ஆனால் நிலநடுக்கோட்டிற்கு அருகில் ரோமான்ச்சு அகழி என்ற இடத்திலும், 53° வடக்கில் கிப்சு பிராக்சர் மண்டலம் என்ற இடத்திலும் இம்மலைத் தொடர் தடைபடுகிறது. மேலும் இம்மலைத்தொடர் கடலடி நீருக்கும் தடையாக உள்ளன. ஆனால் இவ்விரு தடைப் பிரதேசங்களிலும் நீரோட்டமானது ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் செல்கின்றன.[14]
மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் சுற்றியுள்ள கடல் தரைக்கு மேலே 2-3 கிமீ (1.2-1.9 மைல்) அளவுக்கு உயர்ந்துள்ளது. மற்றும் இதன் பிளவு பள்ளத்தாக்கு வடக்கு அட்லாண்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக்கில் உள்ள யுரேசியத் தட்டு இரண்டுக்குமிடையிலும், தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க தட்டுகளுக்கு இடையில் வேறுபட்ட எல்லையாக உள்ளது.
இம்மலைத்தொடரின் உச்சியில் நீரின் ஆழம் பெரும்பாலான இடங்களில் 2,700 மீட்டர் (8900 அடி) அளவுக்கும் குறைவாக உள்ளது, அதே நேரத்தில் இம்மலைத்தொடருக்கு கீழே மூன்று மடங்கு ஆழமும் உள்ளது.[15]
40° வடக்குக்கு அருகே ஓர் இடத்திலும்[16] 16° வடக்குக்கு அருகே ஓர் இடத்திலும் இரண்டு இடங்களில் மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் செங்குத்தாகப் பிரிக்கப்படுகிறது.[17] 1870 களில் மேற்கொள்ளப்பட்ட சாலஞ்சர் கடற்பயணத்தால் மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரின் முதல் பிரிவு கண்டறியப்பட்டது. எஞ்சியுள்ள பகுதிகள் 1920 களில் மேற்கொள்ளப்பட்ட செருமானிய கடற்பயணத்தின் போது கண்டறியப்பட்டன. 1950 களில் மேற்கொள்ளப்பட்ட கடற்பயணங்களில் கடற் தரை விரிவும் புவித்தட்டுகள் தொடர்பான இயக்கங்களும் பற்றிய ஏற்றுக் கொள்ளத்தக்க பொதுமைகள் உருவாகின.[13]
மலைத்தொடரின் பெரும்பகுதி ஆழத்தில் கடல் நீரின் கீழ் செல்கிறது. மேற்பரப்புகளை இது அடையும் போது எரிமலை தீவுகளை உருவாக்கியுள்ளது. இவற்றில் ஒன்பது எரிமலைகள் இவற்றின் புவியியல் மதிப்பிற்காக உலக புராதான சின்னங்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு மலைகள் இவற்றின் கலாச்சார மற்றும் இயற்கை அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு மிகச்சிறந்த பிரபஞ்ச மதிப்புமிக்க சின்னங்களாகக் கருதப்படுகின்றன: எஞ்சியுள்ளவை அமைத்தும் நடுநிலைச் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.[13]
நிலநடுக்கோடு அட்லாண்டிக் கடலை வட, தென் அட்லாண்டிக் என இரண்டு கடல்களாகப் பிரிக்கிறது. தென் அட்லாண்டிக் கடல் வட அட்லாண்டிக் கடலைவிட குளிர்ச்சியாக இருக்கிறது. கடலின் அடிப்பகுதியில் இவ்வெப்பநிலை உறைநிலையையும் நெருங்கும். மேர்பரப்பில் வெப்பநிலையானது -2° செல்சியசு வெப்பநிலை முதல் 30° செல்சியசு வரை இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை நிலப்பகுதிக்கு வடக்கே ஏற்படுகிறது, மற்றும் துருவ மண்டலங்களில் குறைந்தபட்ச மதிப்புகள் காணப்படுகின்றன. நடுத்தர நிலப்பரப்புகளில், அதிகபட்ச வெப்பநிலை மாறுபாடு மதிப்புகள் 7-8° செல்சியசு வரையில் மாறுபடுகிறது.[3] அக்டோபர் முதல் சூன் மாதம் வரை லாப்ரடார் கடல், டென்மார்க் நீரிணை மற்றும் பால்டிக் கடல் பகுதிகளில் நீரின் மேற்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும்.[3]
அட்லாண்டிக் பெருங்கடலின் நீர் மிகுந்த உவர்ப்புத் தன்மை மிக்கதாகும். மேற்பரப்பு நீரின் உப்புத்தன்மை அதன் நிறையில் 1000 பகுதிகளுக்கு 33 முதல் 37 பகுதிகளாகும். வாணிபக் காற்று வீசும் பகுதிகளில் உப்பு அதிகமாகும். நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் உப்புத்தன்மை குறைவாகும். மேற்பரப்பிலிருந்து கீழே செல்லச் செல்ல உவர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது. காலநிலைக்கு ஏற்பவும், மழைப்பொழிவு, உயர் ஆவியாதல் போன்ற காரணிகளால் இந்த அளவு வேறுபடுகிறது.[3]
இக்கடலின் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான தீவுகள், பவழத் தீவுகள் அமைந்துள்ளன. குறிப்பாக மேற்குப் பகுதியில் அதிக அளவு தீவுகள் உள்ளன.
அதிக அளவிலான ஆறுகள் அட்லாண்டிக் கடலில் கலக்கின்றன. மற்ற பெருங்கடல்களைக் காட்டிலும் இங்கு ஆற்று நீர் அதிகமாகக் கலக்கிறது. புவியின் இரண்டு அரைக் கோளத்திலும் காணப்படும் பெரும் பள்ளத்தாக்குகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கியே சாய்ந்துள்ளன.
நிலநடுக்கோட்டு நீரோட்டம், கல்ப் நீரோட்டம், வட ஆப்பிரிக்க நீரோட்டம் போன்ற நீரோட்டங்கள் அட்லாண்டிக் கடலில் உள்ளன. இவை சுழல் இயக்கத்தின் மூலம் வடமேற்கு ஐரோப்பாவை கதகதப்பாக்குகிறன. லாப்ரடார் நீரோட்டம் ஆர்க்டிக் கடலிலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கிழக்குக் கனடா போன்ற நாடுகளை குளிர்விக்கிறது. மக்னீசியம், நிலக்கரி எண்ணெய் போன்றவை இங்கு அதிகமாகக் கிடைக்கின்றன.
ஏவுகணை ஆய்வுகளை நடத்துவதற்கான ஆய்வு கூடமாகவும் அத்திலாந்திக்குப் பெருங்கடல் பயன்படுகிறது. வான்வெளிக்குச் சென்ற பல விண்வெளி வீரர்களின் விண்கலங்கள் இப்பெருங்கடலில் தான் இறங்கின.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.