அசிசியின் புனித கிளாரா (Clare of Assisi, சூலை 16, 1194 – ஆகஸ்ட் 11, 1253), ஒரு இத்தாலிய கிறிஸ்தவ புனிதர் ஆவார். இவர் அசிசி புனித பிரான்சிசின் முதல் சீடர்களுள் ஒருவர். புனித பிரான்சிசின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட இவர் வீட்டிலிருந்து வெளியேறி, ஆண்களுக்கான பிரான்சிஸ்கன் சபை ஒழுங்குகளைத் தழுவி, பெண்களுக்கென ஏழைகளின் புதல்வியர் என்னும் சபையை ஆரம்பித்தார்.
அசிசியின் புனித கிளாரா | |
---|---|
அசிசியின் புனித கிளாரா | |
ஆதினத் தலைவர், கன்னியர் | |
பிறப்பு | அசிசி, இத்தாலி | சூலை 16, 1194
இறப்பு | ஆகத்து 11, 1253 59) அசிசி, இத்தாலி | (அகவை
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், லூத்தரன் |
புனிதர் பட்டம் | செப்டம்பர் 26, 1255, உரோமை by திருத்தந்தை நான்காம் அலெக்சாண்டர் |
முக்கிய திருத்தலங்கள் | புனித கிளாரா பேராலயம், அசிசி |
திருவிழா | ஆகஸ்ட் 11 |
சித்தரிக்கப்படும் வகை | கதிர்ப்பாத்திரம், பெட்டி, எண்ணெய் விளக்கு, கன்னியர் சீருடை |
பாதுகாவல் | கண் நோய், பொற்கொல்லர், சலவை செய்பவர், தொலைக்காட்சி, தொலைபேசி, தந்தி, நல்ல வானிலை, |
தொடக்க காலம்
கிளாரா, இத்தாலியின் அசிசி நகரில் பிரபுக்கள் குடும்பத்தில் 1194 ஜூலை 16ந்தேதி பிறந்தார். இவருக்கு 18 வயது நடந்தபோது, அசிசியின் புனித பிரான்சிஸ் ஆற்றிய தவக்கால மறையுரையால் ஈர்க்கப்பட்டார். தனது இரு தோழிகளுடன் இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறி, தமியான் ஆலயத்தில் தங்கி இருந்த புனித பிரான்சிசை சந்தித்தார். அங்கு இவர் துறவற வாழ்வுக்கான ஆடைகளைப் பெற்றுக் கொண்டார்.
துறவற வாழ்வு
கிளாரா ஆண்டவர் இயேசுவிடம் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு பெனடிக்சியன் சபை துறவற மடத்தில் சேர்ந்தார். இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த இவரது தந்தை, இவரை வீட்டுக்கு அழைத்து வரச் சென்றார். ஆனால் இவரோ துறவறம் மேற்கொள்வதில் மிக உறுதியாக இருந்ததால், தந்தை ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
40 ஆண்டுகள் கடுமையான தவத்துடன் கிளாரா துறவற வாழ்வை மேற்கொண்டார். மிகுந்த ஏழ்மை, தொடர்ச்சியான உண்ணா நோன்பு, மாமிச உணவு உண்ணாமை, தொடர்ந்த மவுனம், காலணி அணியாமை போன்ற கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்டார். கிளாராவின் தவ முயற்சிகள் பலரையும் கவர்ந்தன. பிரபுக்கள் குடும்ப பெண்கள் பலரும் இவருடைய துறவற சபையில் இணைந்தனர். இவரது தாய் ஒரிடோலனாவும், தங்கை ஆக்னசும் அதே சபையில் சேர்ந்தனர்.[1]
ஏழைகளின் புதல்வியர் சபை என்று பெயர் கொண்டிருந்த கிளாராவின் துறவற சபை, ஏழைப் பெண்களின் முன்னேற்றத்தையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது. அந்த சபைக்கு இவர் இயற்றிய சட்ட நூல், ஒரு பெண்ணால் இயற்றப்பட்ட முதல் துறவற சபை சட்ட நூல் ஆகும். இவரது காலத்துக்கு பின்பு அச்சபை புனித கிளாராவின் புதல்வியர் சபை எனப் பெயர் மாற்றப்பட்டது.
விசுவாசத் துறவி
1244ஆம் ஆண்டு, சரசேனியரின் கொள்ளைக் கும்பல் ஒன்று கிளாராவின் மடத்தில் நுழைந்து சூறையாடத் திட்டமிட்டது. அப்போது கிளாரா நற்கருணை பாத்திரத்தைக் கையில் ஏந்தி இயேசு கிறிஸ்துவிடம் செபித்தார். நற்கருணை நாதரின் வல்லமையால் கொள்ளைக் கூட்டத்தினர் பின்னிட்டு ஓடினர்.
கிளாரா நற்கருணை நாதராம் இயேசுவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் இயேசுவின் வல்லமையையும் அன்பையும் தனது வாழ்வில் எப்போதும் உணர்ந்து வாழ்ந்தார். நற்கருணையின் மதிப்பீடுகளான அன்பு, தியாகம் ஆகியவற்றை தனது வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்து வந்தார்.
"இறைவா, உம் விருப்பம் போல் என்னை நடத்தும்; என் மனம் என்னுடையதல்ல உமக்குரியது" என்று கிளாரா அடிக்கடி செபித்து வந்தார். தன்னோடு துறவற வாழ்வு மேற்கொண்டிருந்த பெண்கள் இறைவனின் அன்பில் வளர இவர் சிறந்த முன்மாதிரியாக விளங்கினார்; ஏழை, எளியப் பெண்களின் வாழ்க்கை மேன்மை அடைய மிகவும் ஆர்வமாக உழைத்தார்.
புனிதர் பட்டம்
இயேசு கிறிஸ்துவிடம் அதிக அன்பு கொண்டிருந்த கிளாரா, இறுதியாக இயேசுவின் திருப்பாடுகளின் வரலாற்றை வாசிக்கச் சொல்லி அதைக் கேட்டவாறே 1253 ஆகஸ்ட் 11ந்தேதி உயிர் துறந்தார்.
1255ஆம் ஆண்டு, திருத்தந்தை 4ம் அலெக்சாண்டர் கிளாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு கிளாராவின் கல்லறைத் தோண்டப்பட்ட வேளையில் இவரது உடல் அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
1958ல் திருத்தந்தை 12ம் பயஸ் புனித கிளாராவை தொலைக்காட்சிகளின் பாதுகாவலர் என்று அறிவித்தார்.[2]
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.