From Wikipedia, the free encyclopedia
அக்பரி செராய் (Akbari Sarai ) ( உருது: اکبری سرائے) என்பது ஒரு பெரிய பயணிகள் ஓய்வெடுக்கும் விடுதியாகும். இது பாக்கித்தானின் பஞ்சாபின் இலாகூரில் உள்ள சக்தாரா பாக் நகரில் அமைந்துள்ளது. 1637 ஆம் ஆண்டு முதல், சராய் முதலில் பயணிகளுக்காகவும், ஜஹாங்கிர் கல்லறையின் பராமரிப்பாளர்களுக்காகவும் கட்டப்பட்டது. [1] பாக்கித்தானில் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்ட உதாரணம் என்பதால் சராய் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். [2] அதே போல் ஜஹாங்கீரின் கல்லறைக்கு ஒரு தலைவாயிலாக விளங்கும் பியட்ரா துராவால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அதன் பெரிய நுழைவாயில் என்பதற்காக இந்த சராய் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பெயரை அக்பரின் அரண்மனை என்றும் மொழி பெயர்க்கலாம். ஷாஜகான் சக்கரவர்த்தியின் நீதிமன்ற வரலாற்றாசிரியர் அப்துல் கமீத் இலகோரி, பாதுசாநாமா என்ற தனது புத்தத்தில் ஜிலு கானா-இ-ரௌசா என்ற பெயரில் இந்த கட்டிடத்தை குறிப்பிட்டுள்ளார். அதாவது "கல்லறையின் இணைக்கப்பட்ட அரசவை" என்று பொருள்படும். [1]
நாற்கர வடிவம் கொண்ட சராய் ஜஹாங்கிரின் கல்லறைக்கு நடுவில் கிழக்கை நோக்கியும், மேற்கில் அமைந்துள்ள ஆசிப் கானின் கல்லறைக்கும் கிழக்கில் அமைந்துள்ளது.
கட்டமைப்பின் பெயர் இருந்தபோதிலும், அக்பரி சராய் 1550களின் நடுப்பகுதியில் இஸ்லாம் ஷா சூரியின் ஆட்சியின் போது தொடங்கப்பட்டது. முகலாய பேரரசர் அக்பரின் ஆட்சியின் போது அல்ல. [3] சராயில் உள்ள மசூதி சூரி காலத்திலிருந்தே உள்ளது. இருப்பினும் வளாகத்தை வரிசைப்படுத்தும் அறைகள் மற்றும் அதன் நுழைவாயில்கள் [4] 1600 களின் நடுப்பகுதியில் ஷாஜகான் காலத்திலிருந்து வந்தவை.
சராய் வழிப்போக்கர்களுக்கான நிலையமாகவும், தக் சௌகி என அழைக்கப்படும் ஒரு அஞ்சல் நிலையமாகவும் பணியாற்றியுள்ளது.. சராய் பல உதவி பராமரிப்பாளர்களுடன் சக்னா என அழைக்கப்படும் ஒரு அதிகாரியால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு விலங்குகளுக்கான தீவனம், சூடான மற்றும் குளிர்ந்த நீர் மற்றும் படுக்கை வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டன. சராயில் ஒரு மருத்துவர், அதே போல் ஒரு உணவு தயாரிப்பவர் ஆகியோர் இருந்தனர். சராயின் சுவர்களுக்கு வெளியே அமைந்துள்ள ஒரு நீர் கிணறு ஆகியவை இருந்தன. பல சராய்களைப் போலவே, ஒவ்வொரு வாயிலுக்கும் இடையே ஒரு சிறிய கடைவீதி இருந்திருக்கலாம் .
மகாராஜா இரஞ்சித் சிங் இந்த வளாகத்தை தனது வெளிநாட்டு படைத்தளபதிகளில் ஒருவரான மூசா பாரங்கியின் பாசறையாக மாற்றினார். அவர் தனது படைப்பிரிவுடன் இங்கு வசித்து வந்தார். அருகில் இரயில் பாதை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இரெயில் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டபோது, இந்த இடம் பிரித்தன் காலத்தில் மேலும் கடுமையாக சேதமடைந்தது. [5]
சராய் ஒரு நீளமான நாற்கர வடிவத்தில் உள்ளது. இது மொத்தம் 12 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. [6] சராய் 797 அடி 610 அடி அளவிடும். [7] சராய் வளாகத்தின் முற்றமானது எல்லா பக்கங்களிலும் உயர்த்தப்பட்ட மொட்டை மாடியால் சூழப்பட்டுள்ளது. அங்கு கானாகா எனப்படும் 180 கலங்களின் வரிசைகள் ஒரு தாழ்வாரம் மற்றும் பொதுவான திறந்த நடையுடன் அமைந்துள்ளன.
சராயின் மூலைகள் கோபுரங்களால் சூழப்பட்டுள்ளன. கோபுர அறைகள் அனைத்து சாராய்களின் கலங்களிலும் மிக விரிவானவை. பின்புறத்தில் தனிச்சிறப்பான நீள்வட்ட மண்டபம் ஒன்று தாழ்வாரத்துடன் கொண்ட ஒரு எண்கோண அறை உள்ளது. [3]
இந்த அரண்மனையில் முகலாய பாணியில் இரண்டு பெரிய நுழைவாயில்கள் உள்ளன. அவை வடக்கு மற்றும் தெற்கே அமைந்துள்ளன. அவை தூரத்திலிருந்து தெரியும் வகையில் கட்டப்பட்டுள்ளன. [8] அலங்கார கூறுகள், கட்டமைப்பின் பாணி மற்றும் செங்கற்களின் அளவு ஆகியவை அரண்மனையும் கல்லறையின் நுழைவாயில்களும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
அரண்மனையின் மேற்கு வரிசைகளின் நடுவில் மூன்று குவிமாடங்கள் கொண்ட ஒரு மசூதி உள்ளது. இது அலங்காரங்களுடன் சிவப்பு மணற்கற்களால் மூடப்படுள்ளது. மசூதியின் உட்புறம் ஒரு காலத்தில் சுவரோவியங்கள் மற்றும் காலிப் காரி ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கலாம்.
அக்பரி சராய், ஜஹாங்கிர் மற்றும் ஆசிப் கானின் கல்லறைகளுடன் 1993 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. [9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.