விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரை ஒன்றிணைப்பு
From Wikipedia, the free encyclopedia
முதன்மைக் கட்டுரையாக இருக்கப் போதுமான தகவல் அல்லது ஆதாரம் இல்லாது உருவாக்கப்படும் ஒரே மாதிரியான எண்ணற்ற கட்டுரைகளின் சீரமைப்பு தொடர்பாக ஒரு கொள்கையை முன்மொழிய விரும்புகிறேன்:
இந்தக் கொள்கை முன்மொழிவு தொடர்பாக அனைவரின் கருத்துகளையும் அறிய விரும்புகிறேன். நன்றி.
கொள்கை:
ஒரு கலைக்களஞ்சியத்தில் முதன்மைக் கட்டுரையாக இருக்கப் போதுமான தகவல் இல்லாத கட்டுரைகளையும் முறையான ஆதாரம் இல்லாத கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியா ஏற்பதில்லை. தமிழ் விக்கிப்பீடியா கொள்கைகளின் அடிப்படையில் இவை நீக்கப்படும். எனினும், ஒரே துறை குறித்த எண்ணற்ற கட்டுரைகள் இவ்வாறு பதிவேற்றப்படும் போது, நீக்கலுக்கான பொதுக்கருத்து இல்லாத நிலையில், பங்களிப்பாளரின் உழைப்பையும் கட்டுரைத் தகவலையும் சேமிக்கும் பொருட்டு, அவற்றை ஒன்றிணைத்து ஒரே கட்டுரையின் கீழ் தரவுகளைப் பட்டியலாகத் தரலாம். தேவைப்படும் ஆதாரம் அல்லது தகவல் குறித்து தகுந்த வார்ப்புருகளை இடலாம். வேண்டிய ஆதாரம், கூடுதல் தகவல் கிடைக்கப்பெற்ற பின் குறிப்பிட்ட தரவை மட்டும் மீண்டும் தனிக்கட்டுரையாக மாற்றலாம்.
முறைமை:
- கட்டுரைகளை இவ்வாறு ஒருங்கிணைக்கும் முன் தேவைப்படும் கூடுதல் ஆதாரம் அல்லது தகவல் குறித்து அவற்றின் பகுப்புப் பக்கத்தில் உரையாட வேண்டும். கட்டுரைகளை நீக்குவதற்கான பொதுக்கருத்து இருந்தால் நீக்கலாம்.
- கட்டுரைகளை நீக்காமல் ஒன்றிணைக்கலாம் என்ற பொதுக்கருத்து இருக்கும் நிலையில், வார்ப்புரு:merge-speed-delete-on இட்டு, கட்டுரைகளை மேம்படுத்த ஒரு மாத காலம் தர வேண்டும்.
- கோரப்பட்ட தகவல் / ஆதாரம் சேர்க்கப்படாத நிலையில், கட்டுரைகளை ஒரு மாதம் கழித்து ஒன்றிணைக்கலாம்.
எடுத்துக்காட்டுகள்
விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு பக்கத்தில் இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள் கட்டுரைகள் பற்றிய உரையாடல்--இரவி (பேச்சு) 14:47, 1 மே 2012 (UTC)
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
- பகுப்பு:32 விநாயகர் திருவுருவங்கள் கீழ் வரும் கட்டுரைகள்.
- சங்க இலக்கியத்தில் கதை மாந்தர்களைப் பற்றி வேறு தகவல்கள் எதுவும் இல்லாமல் அவை இடம்பெறும் இலக்கியத்தின் பெயரை மட்டும் குறிப்பிட்டுக் கட்டுரைகள் இருந்தால் ஒன்றிணைக்கலாம்.
- குற்றாலக்குறவஞ்சியில் இடம்பெறும் உயிரினங்களின் பெயர்களை மட்டும் கொண்டு வேறு தகவல்கள் இல்லாமல் தனித்தனியாகக் கட்டுரை எழுதுவதைக் காட்டிலும் ஒன்றிணைக்கலாம்.
பிற விக்கிப்பீடியாக்களில் இதற்கு இணையான கொள்கைகள்