From Wikipedia, the free encyclopedia
வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும்[சான்று தேவை]. "வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். வாஸ்து சாஸ்திரம் என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.
கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் (Concrete) கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை.
வாஸ்து பூமிபூஜையின் அடிப்படை தத்துவம் ஒரு கட்டிடமொன்று கட்டப்படும் முன்பு மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே.[சான்று தேவை]
அதர்வ வேதம் தவிர வராஹமிஹிரரால் ஆக்கப்பட்ட பிருஹத் சம்ஹிதை என்னும் சமஸ்கிருத சோதிட நூலிலும் வாஸ்து சாஸ்திரம் பற்றிக் குறிப்பிடத்தக்க அளவு தவல்கள் உள்ளன. மயனால் எழுதப்பட்ட மயமதம், மானசாரரால் ஆக்கப்பட்ட மானசாரம், விஸ்வகர்மாவின் விஸ்வகர்மீயம் முதலிய பல நூல்கள் தனிப்பட வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுந்த நூல்களாகும். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் பெயரில் வெளிவந்த நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறது.
இதில் கண்டவை 1) விசுவதர்மம், 2) விசுவேசம், 3) விசுவசாரம், 4) விருத்தம், 5) மிகுதாவட்டம், 6) நளம், 7) மனுமான், 8) பானு, 9) கற்பாரியம், 10)சிருஷ்டம், 11) மானசாரம், 12) வித்தியாபதி, 13) பாராசரியம், 14) ஆரிடகம், 15) சயித்தியகம், 16) மானபோதம், 17) மயிந்திரமால், 18) வஜ்ரம், 19) ஸௌம்யம், 20) விசுவகாசிபம், 21) கலந்திரம், 22) விசாலம், 23) சித்திரம், 24) காபிலம், 25) காலயூபம், 26) நாமசம், 27) சாத்விகம், 28) விசுவபோதம், 29) ஆதிசாரம், 30) மயமான போதம், 31) மயன்மதம், 32) மயநீதி என்பனவாகும். இவற்றுள் பல இன்று இல்லை. இப் பட்டியலில் காணப்படும் இன்றும் புழக்கத்திலுள்ள நூல்களான மானசாரம், மயன்மதம் (மயமதம்) என்பவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டாலும், தென்னிந்திய நுல்களாகும்.
கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம் மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன.
முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்ட திக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குக் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள்.
இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப் படுத்துகின்றது. இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும்போது, வடகிழக்கில் தலையும், தென் மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப் படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகிறான்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.